Your cart is empty.
19 Jun 2024
ஆஷ் அடிச்சுவட்டில் நூல் குறித்த பார்வை
“ஆஷ் அடிச்சுவட்டில் அறிஞர்கள் ஆளுமைகள் “ புத்தகம், வெவ்வேறு சமயங்களில்
எழுதப்பட்ட ஆளுமைகள், அறிஞர்கள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு, நூலாக்கம்
பெறும்போது பல புதிய செய்திகளையும் சேர்த்து வெளிவந்துள்ளது. இந்நூலைப் படிக்க
நேரம் பிடித்தது. அதற்குக் காரணம் ஒரு கட்டுரையைப் படித்த பின்னர் ஏற்படும் தேடலை
அடக்க முடியவில்லை.
நூலின் முதல் கட்டுரையை (அஷ் அடிச்சுவட்டில் ) படித்துவிட்டு, திரு. ஆ. சிவசுப்பிரமணியன்
எழுதிய ‘ஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும்’ என்ற நூலையும் திரு. சலபதி எழுதிய
‘திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908’ நூலையும் வாசிக்கலானேன். ஒரு கட்டுரையை
எத்தகைய தேடல் தாகத்தை ஏற்படுத்தியது என்பதற்கு இது ஒரு சான்று. இன்னும்
தேடிக்கொண்டுதான் இருக்கிறேன்.
இரண்டாம் கட்டுரையை ("எல்லீசன் என்றொரு அறிஞன்") படித்ததன் காரணமாக Thomas
R. Trautmann எழுதிய Languages and nations: the Dravidian proof in Colonial Madras நூல்
கண்ணில் பட்டது. 'திராவிடச் சான்று' என்று இதன் தமிழ் மொழிபெயர்ப்பும்
வெளிவந்துள்ளது. இப்படி ஒவ்வொரு கட்டுரையும் ஏற்படுத்தும் ஆர்வத்தைத் தீர்க்கவே நாள்
எடுத்தது.
ஜி.யு. போப் பற்றிய கட்டுரை, அவர் கல்லறையில் எழுதப்பட்டிக்கும் உண்மை
வாசகங்களைச் சுட்டிக்காட்டும் சலபதி, சுவாரசியமான வாசிப்புக்காக தமிழ் வரலாற்று
எழுத்தில் நாடகப் பாங்கில் அமைந்துள்ள மிகப்படுத்தல்களையும் குறிப்பிடுகிறார், இல்லாத
ஒன்றை இருப்பதாக உருவாக்கும் சூழ்ச்சியை இந்தக் கட்டுரை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
"சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு" என்ற குரலுக்கு இக்கட்டுரையும் இது
போலவே இந்நூலில் இடம்பெற்றுள்ள பிற கட்டுரைகளும் சாட்சி.
பழந்தமிழ் இலக்கியங்களைத் தேடி தேடி தொகுத்து வெளியிட்ட உ.வே.சா. பற்றிய "உதிராத
மலர்கள்" என்ற கட்டுரையை , "இழந்துகொண்டிருக்கும் உலகத்தை மீட்டுத்தரும் ஓர்
அவதாரமாக அவரைப் பலர் பார்த்திருக்கிறார்கள்" என்ற வாக்கியத்தின் நீட்சியாகச்
சொல்லலாம்.
இருபதாண்டுகள் முயற்சி எடுத்து ஒன்றரை லட்சம் செலவில் மஹாபாரதத்தைத் தமிழில்
கொண்டுவர வேண்டும் என்று நினைத்த ராமானுஜாச்சாரியரின் கதை சுயராசியமானது.
கிட்டத்தட்ட தமிழ்க் கலைக்களஞ்சியத்திற்கு இணையான ஒரு மெனக்கெடலை அவர்
மேற்கொண்டிருந்தார். இவர் உ.வே.சா.விடம் கொண்டிருந்த நட்புறவையும்
பதிவுசெய்துள்ளார் சலபதி.
தஞ்சாவூரைச் சேர்ந்த டி.வி. சாம்பசிவம் பிள்ளை தன்னுடைய தனி முயற்சியால் மருத்துவ
அகராதி ஒன்றை வெளியிடுகிறார். 4000 பக்கங்கள் 80,000 தலைச்சொற்கள் என்ற அளவில்
’A Tamil-English Dictionary of Medicine, Chemistry, Botany and Allied Sciences’ பெயரில்
அது வெளியானது. 1931இல் முதல் தொகுதி வெளியாகியிருந்தாலும் கடைசி இரண்டு
தொகுதிகள் (4, 5) 47 ஆண்டுகள் கடந்துதான் வெளியாகியது. அந்தச் சமயத்தில் சாம்பசிவம்
பிள்ளை மறைதிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தகுந்த செய்தி.
ராமாநுஜலு நாயுடு பற்றிய கட்டுரை ஒரு பத்திரிகையாராக அவரின் எழுத்தாளுமையை நம்
கண்முன் காட்சிப்படுத்துகிறது. "கதை சொல்வதில் சமர்த்தர்" என்று புதுமைப்பித்தன்
இவரைப் பாராட்டியுள்ளார். 1907இல் திரு டி.ஏ. ஜான் நாடார் தொடங்கிய வார இதழுக்கு
"திராவிடாபிமானி" என்று பெயரிட்டவரும் இவரே. வரதராஜுலு நாயுடுவின் தமிழ்நாடு என்ற
பத்திரிகையையும் ஆனந்த குணபோதினி, அமிர்த குணபோதினி, தமிழின்பம் போன்ற
இதழ்களையும் இவர் நடத்திவந்துள்ளார்.
வ.உ.சி., திலகர் ஆகியோரிடையே இருந்த உறவை ஒரு கட்டுரை பேசுகிறது. பல்வேறு
தரவுகளை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் இக்கட்டுரை, சுவாரசியமான
நிகழ்ச்சிகளின் கோவையாக அமைந்துள்ளது.
பெரும் உழைப்பின் விளைவாக ஏ.கே. செட்டியார் வெளியிட்ட காந்தி பற்றிய முழுநீளப் படம்
இன்றைக்கு இருக்கும் இடம் தெரியாமல்போனதை நினைத்து வருந்தத்தான் முடியும். காந்தி
பற்றி வெளியான முதல் திரைப்படமும் அதுதான். தமிழ்நாட்டில் பிறந்த ஒருவர் இத்தகைய
முயற்சியை மேற்கொண்டதாலோ என்னவோ இவர் பெயர் அகில இந்திய காந்திய
அறிஞர்களாலும் பிற தேசியவாதிகளாலும் சரியாக நினைவுகூரப்படுவதில்லை.
பாரதி படைப்புகளையும் அவரின் புகைப்படங்களையும் வெளியிட்ட ரா.அ. பத்மநாபன்
குறித்து "பாரதிக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை
இடம்பெற்றுள்ளது. பாரதி போன்ற ஆளுமையை மீட்டெடுப்பதில் இவர் போன்ற
தனிமனிதர்களின் உழைப்பை நினைத்தால் வியப்பாகத்தான் இருக்கிறது. எதையும்
பதிவுசெய்ய மனங்கொள்ளாத சமுகத்தில் இதுபோன்ற சில தனி மனிதர்களின்
முயற்சியால்தான் அரிய படைப்புகள் நமக்குப் படிக்கக் கிடைக்கின்றன. “அலகாபாத்தில்
காந்தி அஸ்தி கரைப்பின்போது வானொலியில் தமிழ் வருணனை இவருடையது” என்ற
வரியைப் படித்தபோது ஏற்பட்ட உணர்வை என்னவென்று சொல்வது. எத்தனை
வரலாற்றாய்வாளர்கள் தமிழ்ச் சூழலில் இப்படி நுணுக்கமாக வரலாற்றை அணுகுகிறார்கள்?
Tamil Characters: Personalities, Politics, Culture நூலில் கம்யூனிஸ்டுகளே மறந்த சி.எஸ்.
சுப்பிரமணியம் அவர்களின் அரசியல் பணி குறித்த ஒரு கட்டுரையை படித்தேன், இந்நூலில்
அவரின் சில புகைப்படங்களும் மேலும் சில வாழ்க்கைக் குறிப்புகளும் உள்ளன.
புத்தகங்களை எழுதுவதிலும் வெளியிடுவதிலும் அவர் கொண்டிருந்த ஆர்வத்தையும் அறிய
முடிகிறது.
காலக் கிழவன் என்ற தலைப்பில் வரலாற்றறிஞர் எரிக் ஹாப்ஸ்பாம் (Eric Hobsbawm )
பற்றிய கட்டுரை எனக்குள் பெரும் தாக்கத்தை உண்டாக்கியது , இந்தக் கட்டுரையைப்
படித்துவிட்டு ஹாப்ஸ்பாமின் புத்தகங்களை அரை நாள் செலவழித்து அண்ணா நூற்றாண்டு
நூலகத்தில் தேடி எடுத்தேன். சில புத்தகங்களே அங்கு காணக் கிடைத்தன. ஆனால் இவரின்
புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் மிகுதியாகவே ஏற்பட்டுள்ளது.
இறுதிக் கட்டுரையாக தே. வீரராகவன் குறித்த கட்டுரை. ‘சாதிக்குப் பாதி நாளா?’ புத்தகத்தின்
முதல் பகுதியில் இவர் குறித்த செய்திகளைப் படித்திருந்தாலும், கண் பார்வைக்
குறைபாடுகளுடன் முனைவர் பட்டம் பெற்ற முதல் மாணவர் இவர் என்பதை நினைக்கவே
வியப்பாக இருக்கிறது. தமிழ்நாட்டின் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர்கள் சேர்ந்து
வாசித்ததைவிட இவரின் வாசிப்பு அதிகம் என்று குறிப்பிடுகிறார் சலபதி. ‘சாதிக்குப் பாதி
நாளா?’ புத்தகத்தை படித்தவர்கள் இதை உணர முடியும்.
இறுதிக் கட்டுரையாக தே. வீரராகவன் குறித்த கட்டுரை. ‘சாதிக்குப் பாதி நாளா?’ புத்தகத்தின்
முதல் பகுதியில் இவர் குறித்த செய்திகளைப் படித்திருந்தாலும், கண் பார்வைக்
குறைபாடுகளுடன் முனைவர் பட்டம் பெற்ற முதல் மாணவர் இவர் என்பதை நினைக்கவே
வியப்பாக இருக்கிறது. தமிழ்நாட்டின் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர்கள் சேர்ந்து
வாசித்ததைவிட இவரின் வாசிப்பு அதிகம் என்று குறிப்பிடுகிறார் சலபதி. ‘சாதிக்குப் பாதி
நாளா?’ புத்தகத்தை படித்தவர்கள் இதை உணர முடியும்.
(நன்றி: முகநூல் பதிவு)