Your cart is empty.
கோயில் புலியும் குமாவுன் ஆட்கொல்லிகளும்
உணவுக்கான வேட்டை, வலிமையைப் பறைசாற்றும் வேட்டை, உயிரைக் காப்பாற்றுவதற்கான வேட்டை எனப் பல வகையான வேட்டைகள் உள்ளன. சிறு வயதிலிருந்தே வனப் பகுதிகளில் இயல்பாக நடமாடித் திரிந்த ஆங்கிலேயர் ஜிம் கார்பெட் இந்திய வனப்பகுதிகளின் வேட்டை வீரர்களில் ஆகச் சிறந்தவர்களில் ஒருவர். உணவுக்காகவோ தோள் தினவுக்காகவோ அல்லாமல் அப்பாவி மக்களின் உயிரைக் காப்பதற்காகவே பெரும்பாலும் துப்பாக்கியை உயர்த்திய மனிதநேயர். சாகசம் என்னும் சொல்லின் உதாரணமாக அமைந்த வாழ்வு இவருடையது. இமயமலைப் பகுதிகளின் வனாந்தரங்களில் ஆட்கொல்லிப் புலிகளை வேட்டையாட இவர் மேற்கொண்ட பயணங்களும் எதிர்கொண்ட அபாயங்களும் பிரமிப்பூட்டுபவை. மூன்றடி தொலைவில் புலியை எதிர்கொண்டதிலிருந்து, கடும் உடல் உபாதையுடன் கொலைப்பட்டினியாகக் காடுகளிலும் மலைகளிலும் அலைந்து திரிந்ததுவரை இந்த வேட்டைக்காரரின் அனுபவங்கள் சிலிர்ப்பூட்டுகின்றன. வீரம், துணிவு, பொதுநலம் போன்ற பண்புகளைக் கொண்டிருந்தாலும் சுய தம்பட்டம் சிறிதுமின்றித் தன் அனுபவங்களை யதார்த்தமாகக் கூறிச் செல்கிறார் ஜிம். பறவைகள், விலங்குகள், தாவரங்கள் என இயற்கையின் வண்ணங்களும் இந்த அனுபவங்களுக்குக் கூடுதல் பரிமாணத்தைச் சேர்க்கின்றன. மூலத்தின் சுவையும் விறுவிறுப்பும் குன்றாமல் இயல்பான தமிழ் நடையில் இதைத் தந்திருக்கிறார் அகிலா.