Your cart is empty.
சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை (இ-புத்தகம்)
-
-வண்ணநிலவனின் இந்த நாவல் தன்வரலாற்றுத் தன்மை கொண்டது. கடந்துபோன காலத்தின் நினைவுகூரலாகவும் கற்பனைக்கு எட்டாத வகையில் மாறிவிட்ட நிகழ்காலம் குறித்த சிந்தனைச் சரமாகவும் இரட்டைப் பாதைகளில் பயணிக்கிறது நாவல். கதைசொல்லி தன்னுடைய சிந்தனைகளை முன்வைத்தபடி செல்ல, கதைசொல்லியின் மனைவி கடந்தகாலம் குறித்த தன் நினைவுகளை அசைபோடுகிறார். நேற்றைய நினைவுகள், இன்றைய மாற்றங்கள் குறித்த நினைவேக்கங்களும் சிந்தனைகளும் என ஆண், பெண் ஆகியோரது பார்வைகளில் விரியும் நாவல் இது. காலமெனும் நெடுஞ்சாலையில் முன்னும் பின்னுமாக நிகழும் மன யாத்திரையின் பதிவுகள் நாவலின் கதையாடலாக உருமாறுகின்றன.
-தொடிச்சியின் திருமண நாளில் கலவரம் தொடங்குகிறது. கல்யாணக் கோலாகலத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் குலைக்கப்படுகின்றன. இதற்கான காரணமோ மிகமிகச் சிறிது. இந்தப் பகைமை கிராமத்து மக்களின் வாழ்வியலைக் கருவறுக்க முனைகிறது. மணப்பெண்ணாகும் நாளில் தன் கண்முன்னே நிகழ்ந்த கலவரங்களை எதிர்கொண்ட தொடிச்சி, பின்னர் படிப்படியாகக் கிராமத்தின் ஆக்கப்பூர்வமான சக்தியாகவும், நிலைமைகளைத் துணிவுடன் எதிர்கொள்ளும் பெண்ணாகவும் எழுகிறார்.
ஸ்ரீதரகணேசனின் இந்த நாவல், தலித்துகள் தம் வாழ்வை அமைதியாகவும் சுயமரியாதையோடும் நடத்திச்செல்வதற்கான செயல்பாடுகளில் ஈடுபட வகையின்றித் தவிக்க வேண்டியதன் காரணமென்ன என்னும் கேள்வியை அழுத்தமாக எழுப்புகிறது. ஆதிக்கச் சக்திகளின் விருப்பங்களுக்குட்பட்டுச் செயல்படாவிட்டால் மீட்சியில்லை என்கிற நிலையில் சிக்கிக்கொண்ட தலித் உடல்களின் இயக்கத்தை விவரிக்கிறது.
-இந்தியச் சமூக அமைப்பில் குழந்தைகளின் வாழ்க்கைப் போக்கை நெடுங்காலமாகப் பாதித்த குழந்தைத் திருமண முறையினால் சிறு பிராயத்திலேயே விதவையான லலிதா என்ற பெண்ணின் வாழ்க்கையை இந்த நாவல் விவரிக்கிறது. தன்னிலைக் கூற்றாக அமைந்த இப்படைப்பு சில முக்கிய வரலாற்றுப் பாத்திரங்களின் ஆளுமைச் சித்திரத்தையும் வரலாற்று நிகழ்வுகளையும் பதிவு செய்கிறது. மருத்துவராக உருவாகும் லலிதாவின் அகவுலகச் சிக்கல்களையும் பழமையான மனங்களை நோக்கிய விமர்சனங்களையும் இந்த நாவலில் சுரேஷ்குமார இந்திரஜித் சித்தரித்துள்ளார்.
-தி. ஜானகிராமன் ‘கணையாழி’ இதழில் தொடராக எழுதி, அவரது மறைவுக்குப் பின்னர் நூல் வடிவம் பெற்ற நாவல் ‘நளபாகம்.’ அவரது நாவல்களில் மையப்பொருளை அவ்வளவு வெளிப்படையாக உணர்த்தாத நாவலும் இதுவே. இந்தப் பூடகமே நாவலை இன்றும் சுவாரசியமான வாசிப்புக்கு உரியதாக நிலைநிறுத்துகிறது. சுவீகாரப் பிள்ளைகள் வாயிலாகவே தொடரும் தனது குடும்ப பாரம்பரியத்தை ரத்த உறவு மூலம் வலுப்படுத்த ரங்கமணி மேற்கொள்ளும் அபாயகரமான செயலே நாவலின் மையம். மகன் துரை மூலம் மகப்பேறு வாய்க்காத மருமகள் பங்கஜத்துக்குத் துணையாக காமேச்வரனை அழைத்துவந்து வீட்டில் தங்கவைக்கிறாள். அம்பாள் உபாசகனான அவனது வருகைக்குப் பின் மருமகள் கருத்தரிக்கிறாள். அந்த அற்புதம் நிகழ்ந்தது காமேச்வரனின் பூஜையாலா? அவனது இருப்பு தம்பதியரிடையே கூட்டிய அன்னியோன்னியத்தாலா? இந்த மர்மத்தைத் தனக்கு ஆகிவந்த பின்புலத்தில், அறியவந்த மனிதர்களின் சாயலில் வசீகர மொழியில் சொல்கிறார் தி.ஜா. பச்சாதாபம், காமம், ஆன்மீகம் ஆகிய மூன்றின் கலவையான வண்ணத்தில் மிளிர்கிறது இந்தப் படைப்பு.
-தமிழ் நாவல் வடிவங்களின் எந்த வகைமைக்குள்ளும் அடங்க மறுக்கும் புதுக்குரல்கள் நகுலனின் நாவல்கள். கதையம்சத்தை முற்றாகவே தவிர்த்து, கட்டுப்பாடற்ற மனவோட்டங்களை முழுக்கவும் நனவோடை உத்தியில், மரபும் நவீனமும் இழையோடும் மொழிநடையில் வெளிப்படுத்கிறது ‘நினைவுப் பாதை’ நாவல். “கதை கூறும் முறையிலும் பேசுவது போல் அனாயாசமாய் எழுதிக்கொண்டு செல்வதிலும் வெளியாகும் ஆசிரியரின் ஒரு அபோதமான, கட்டற்ற தன்மை, மிகுந்த அழகாகப்படுகிறது” என்று நகுலனின் ‘நிழல்கள்’ நாவலின் முன்னுரையில் சுந்தர ராமசாமி கூறுவது இந்த நாவலுக்கும் பொருத்தும்.
நகுலன்
நகுலன் (1921 – 2007) தனித்துவம் வாய்ந்த எழுத்தாளர்களில் ஒருவரான நகுலன் (இயற்பெயர் டி.கே. துரைசாமி) 1921இல் கும்பகோணத்தில் பிறந்து, திருவனந்தபுரத்தில் வாழ்ந்தவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் முதுகலைப் பட்டம் பெற்று, முப்பது ஆண்டுகள் ஆங்கில விரிவுரையாளராகப் பணியாற்றினார். கவிதைகள், நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் எனப் பல தளங்களில் தொடர்ந்து இயங்கினார். ஆங்கிலத்திலும் எழுதினார். இவரது கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் முழுத்தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. குமாரன் ஆசான் விருதும் சாந்தோம் கம்யூனிகேஷன் சென்டர் விருதும் பெற்றார். நகுலன் 17.5.2007இல் திருவனந்தபுரத்தில் காலமானார்.
-நவீன தமிழ்ப் புனைவுகளில் பெண்ணின் பால்விழைவு குறித்துக் கலாபூர்வமாக எழுதிய முதல் பெண் படைப்பாளி கிருத்திகா. இவரது நான்காவது நாவல் ‘வாஸவேச்வரம்.’ கதாகாலட்சேபத்தில் தொடங்கி, கதாகாலட்சேபத்துடன் முடிவதாகக் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த நாவல், தமிழகத்தின் தென்பகுதியிலுள்ள ஒரு கற்பனைக் கிராமத்தை - கதாபாத்திரங்களை மையமாகக்கொண்டு, கனவுகளாலும் கதைகளாலும் புனையப்பட்டுள்ள வாழ்வியல் சம்பிரதாயங்களின் திரை நீக்கி, அவற்றின் யதார்த்தத்தை உணர்த்துகிறது. எழுதப்பட்டு நாற்பதாண்டுகள் கடந்தபின்னும் புத்துணர்ச்சியுடன் படிக்க முடிவதே இந்த நாவலின் சிறப்பு.
கிருத்திகா
கிருத்திகா (1915 – 2009) இயற்பெயர் மதுரம் பூதலிங்கம். மும்பையில் பிறந்து, வளர்ந்த இவர் பள்ளியில் தமிழும் ஆங்கிலமும் பயின்றார். சுயமாக சமஸ்கிருதம், பிரெஞ்சு மொழிகளையும் கற்றார். பாரதியின் படைப்புகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். ‘புகை நடுவில்’, ‘சத்யமேவ’, ‘புதிய கோணங்கி’ போன்ற நாவல்களையும் குழந்தைகளுக்காகத் தமிழில் ‘குட்டிப் பாட்டிக் கதைகள்’, ஆங்கிலத்தில் Children’s Ramayana, The Sons of Pandu நூல்களையும் எழுதியுள்ளார். நாடகங்களும் சிறுகதைகளும் பயண அனுபவங்கள் மற்றும் தென்னிந்தியக் கோயில் – கட்டடக் கலை பற்றிய கட்டுரைகளும் எழுதியுள்ளார்.
-நாகம்மாள் என்னும் பாத்திரத்தை மையமாகக்கொண்ட இந்த நாவல், பெண்ணைச் சுயசிந்தனையும் செயல்பாடும் உடையவளாகப் படைத்த விதத்தில் முதன்மைத் தன்மை வாய்ந்தது. தமிழின் தொடக்க நாவல்கள் பெரும்பாலும் பெண்களையும் அவர்கள் பிரச்சினைகளையும் பற்றியவையே. ஆனால் அவற்றில் வரும் பெண்களுக்குச் சுய முகம் எதுவுமில்லை. ஆண்கள் பரிதாபப்பட்டு வழங்கும் அடையாளங்களைத் தரித்தவர்களாகவே அவர்கள் உள்ளனர். நாகம்மாளை அந்த வரிசையில் சேர்க்க முடியாது. தன் சுதந்திரத்திற்காகவும் எதிர்காலத்திற்காகவும் தன் சக்திக்கு உட்பட்டுக் கலகத்தைத் தோற்றுவிக்கும் இயல்புடையவளாக நாகம்மாள் விளங்குகிறாள்.
ஆர். ஷண்முகசுந்தரம்
ஆர். ஷண்முகசுந்தரம் (1917 – 1977) திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டத்தில் உள்ள கீரனூர் என்னும் சிற்றூரில் பிறந்தவர். ‘மணிக்கொடி’ இதழில் சிறுகதை எழுத்தாளராக அறிமுகமானார். 1942இல் ‘நாகம்மாள்’ நாவலை எழுதினார். ‘பூவும் பிஞ்சும்’, ‘பனித்துளி’, ‘அறுவடை’, ‘தனிவழி’, ‘சட்டி சுட்டது’, உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட நாவல்களையும் பல சிறுகதைகளையும் எழுதியுள்ளார். வசன கவிதை, நாடகம், கட்டுரைகள், மொழிபெயர்ப்பு எனப் பல தளங்களில் இயங்கியவர். ‘பதேர் பாஞ்சாலி’ உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நாவல்களை மொழிபெயர்த்துத் தமிழுக்குத் தந்துள்ளார். ‘நாகம்மாள்’ மூலம் தமிழின் வட்டார நாவல் துறையைத் தொடங்கிவைத்த இலக்கிய முன்னோடி இவர். தன் தம்பி ஆர். திருஞானசம்பந்தத்துடன் இணைந்து பல்வேறு இலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபட்டார். ‘வசந்தம்’ என்னும் இலக்கிய இதழைப் பல்லாண்டுகள் நடத்தினார். புதுமலர் நிலையம் என்னும் பதிப்பகம், புதுமலர் அச்சகம் ஆகியவையும் இவர்கள் நடத்தியவை. இவரது மனைவி: திருமதி வள்ளியம்மாள்.
-காலச்சுவடு கிளாசிக் வரிசையில் வெளிவரும் ‘பள்ளிகொண்டபுரம்’ நீல. பத்மநாபனின் நாவல்களில் முதன்மையானது என்று சொல்லலாம். அனந்த நாயரின் துக்கம் கவிந்த வாழ்க்கையைச் சித்தரிக்கும் இந்த நாவலில் கேரளத்தின், திருவனந்தபுரத்தின் நேற்றைய - இன்றைய கலாச்சார வரலாறும் பின்னிப்பிணைந்துள்ளது. மலையாள நாவலாசிரியர்களில் சிறந்த சிலர் தங்களது பிரபலமான இலக்கியப் படைப்புகளில் திருவனந்தபுரம் எனும் நகரை விளக்கமாய் வர்ணித்துள்ளார்கள். ஆனால், அவர்களுள் ஒருவராலும் - ஸி.வி. இராமன் பிள்ளையாலோ, தகழி சிவசங்கரப் பிள்ளையாலோகூட இந்த நகரின் ஆத்மாவைச் சிக்கெனப் பிடிக்க இயலவில்லை - ஆனால் திரு. நீல. பத்மநாபன் எனும் ஒரு தமிழ் நாவலாசிரியருக்குத்தான் கேரளத்துத் தலைநகரின் ஆத்மாவின் ஒரு பரிபூரணத் தரிசனத்தைப் பெற முடிந்திருக்கிறது” என்று மலையாள விமர்சகர் என்.வி. கிருஷ்ணவாரியரால் பாராட்டப்பட்ட நாவல் ‘பள்ளிகொண்டபுரம்.’
நீல. பத்மநாபன்
நீல. பத்மநாபன் (பி. 1938) பள்ளி நாட்களில் தொடங்கி ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக எழுதிவரும் நீல. பத்மநாபன் கேரளப் பல்கலைக்கழகத்தில் இயற்பியலிலும் மின்பொறியியலிலும் பட்டங்கள் பெற்று, கேரள மின்வாரியத்தில் தலைமைப் பொறியாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். திருவனந்தபுரத்தில் வசித்துவருகிறார். ‘பள்ளிகொண்டபுரம்’, ‘தலைமுறைகள்’, ‘உறவுகள்’, ‘தேரோடும் வீதி’, ‘இலை உதிர் காலம்’ உள்பட இருபது நாவல்கள், பதினொரு சிறுகதைத் தொகுப்புகள், ஐந்து கவிதைத் தொகுப்புகள், பதினொரு கட்டுரைத் தொகுப்புகள், மொழியாக்கங்கள் என ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். ‘இலை உதிர் காலம்’ நாவலுக்காகவும் (2007), ‘ஐயப்பப் பணிக்கர் கவிதைகள்’ மொழியாக்க நூலுக்காகவும் (2003) சாகித்திய அக்காதெமி விருதுகள் பெற்றுள்ளார். மேலும் ராஜா அண்ணாமலைச் செட்டியார் விருது (1987), தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் தமிழ் அன்னை விருது (1987), பாஷா பாரதி பரிசு (2006), இலக்கியச் சிந்தனைப் பரிசு (2013) உட்படப் பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். இவரது படைப்புகள் இந்திய மொழிகளிலும் ஆங்கிலம், ஜெர்மன், ரஷிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது எழுத்தையும் வாழ்க்கையையும் பற்றிய குறும் படத்தை சாகித்திய அக்காதெமி வெளியிட்டுள்ளது.
-இஸ்லாமிய சமூகம் இறுகிப்போன ஒரு சமூகம், அது வெளிக்குத் தெரியாத இருண்ட பகுதிகளைக் கொண்டது எனும் மாயையைத் தமிழில் முதலில் உடைத்தெறிந்த நாவல். கிராமத் தலைவனும் ஊர் முதல் குடியுமான வடக்கு வீட்டு அகமதுக்கண்ணு முதலாளியின் முன் அடங்க மறுக்கிறான். சுறாப் பீலி வியாபாரம் செய்யும் மஹ்மூது, தென் பத்தனைத் தேடி வந்த சித்து வேலைகள் தெரிந்த மாலத்தீவு தங்ஙளையும் அவன் உதாசீனம் செய்கிறான். இதை மீறலின் குறியீடாகக் கருதும் வாசக மனம் கூடவே மஹ்மூதின் மனைவியையும் மகளையும் நினைத்து விவரித்துச் செல்லும்போதே அதன் அடிநாதமாக, வெற்றுப் பிரதாபம் காரணமாக நசிந்துகொண்டிருக்கும் முதலாளியைப் பற்றிய பரிதாபமும் இழைந்து செல்கிறது. நாவல் கோடிகாட்டும் அம்சங்கள்கூட வேதியியல் மாற்றங்களுக்கு உள்ளாகி வாசக மனங்களை உலுக்குவது இந்நாவலின் குறிப்பிடத்தக்க மற்றொரு சிறப்பு.
தோப்பில் முஹம்மது மீரான்
‘புத்தம் வீடு’ - எளிய மொழியில் சொல்லப்பட்ட காதல் கதையாகத் தோற்றம்கொள்ளும் நாவல். லிஸியும் தங்கராஜும் இளம்பருவத்தில் கொண்ட ஈர்ப்பு காதலாக முதிர்ந்து திருமணத்தில் கனிய நீண்ட காலம் காத்திருக்கிறார்கள். தடைகளைக் கண்டு அஞ்சுகிறார்கள். இறுதியில் இணைகிறார்கள். முதல் சந்திப்புக்கும் முதல் நெருக்கத்துக்கும் இடையில் வருடங்கள் கடந்து போகின்றன. இடங்கள் மாறுகின்றன. மனிதர்கள் கடந்து போகிறார்கள். அவர்கள் உறவாடுகிறார்கள். காசுக்காகத் தகப்பனை ஏய்க்கிறார்கள். பகைகொண்டு சொந்தச் சகோதரனையே கொல்கிறார்கள். குலப்பெருமை பேசுகிறார்கள். புதிய தலைமுறையோடு பிணங்குகிறார்கள். காலத்துக்கேற்ப மாறுகிறார்கள். இது லிஸியின் கதை. மூன்று தலைமுறைகளை இணைக்கும் கண்ணி அவள். அவளை மையமாகக் கொண்டு விரியும் கிராம உறவுகளின் கதை. ஆர்ப்பாட்டமில்லாமல் வெளிப்படும் அவளுடைய சிநேகச் சரடின் மறுமுனையில்தான் அவளைத் தூற்றியவர்களும் விரும்பியவர்களும் இயங்குகிறார்கள். படைப்பு இயல்பால் தன்னை நிலைநிறுத்திக்கொண்ட இலக்கிய ஆக்கங்களில் ஒன்று ‘புத்தம் வீடு’. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு முன்பு எழுதப்பட்டது. எனினும் இன்னும் வாசிப்பில் சுவை குன்றாமல் துலங்குகிறது.
ஹெப்ஸிபா ஜேசுதாசன்
ஹெப்ஸிபா ஜேசுதாசன் (1925 - 2012) குமரிமாவட்டம் புலிப்புனத்தைச் சேர்ந்தவர். பள்ளிப்படிப்பை பர்மாவிலும் தமிழகத்திலும் மேற்கொண்டார். திருவனந்தபுரம் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் ஹானர்ஸ் பட்டம் பெற்றார். கணவர் பேராசிரியர் ஜேசுதாசனின் ஊக்குவிப்பைத் தொடர்ந்து படைப்பாக்கத்தில் ஈடுபட்டார். ‘புத்தம் வீடு’, ‘மா - னி’, ‘டாக்டர் செல்லப்பா’, ‘அனாதை’ ஆகிய நாவல்களை எழுதியுள்ளார். ‘தமிழர் - தமிழிலக்கியம் வாயிலாக’ என்ற நூல்வரிசையைக் கணவருடன் இணைந்து உருவாக்கினார். திருவனந்தபுரம் மகளிர் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார். 2012ஆம் ஆண்டு காலமானார்.
-1970களில் வேலையில்லாத் திண்டாட்டம் பெரும் பிரச்சினையாக இருந்தது. இந்திய இளைஞர்களை வாட்டி வதைத்த இந்த நெருக்கடி அவர்கள் வாழ்விலும் நம்பிக்கைகளிலும் விழுமியங்களிலும் பெரும் தாக்கத்தைச் செலுத்தியிருந்தது. இளைஞர்களிடையே போராட்டக் குணமும் அரசியல் விழிப்புணர்வும் அதிகம் இருந்த அந்தக் காலகட்டத்தின் போராட்டமயமான வாழ்வைச் சொல்லும் கதைதான் நாஞ்சில் நாடனின் ‘தலைகீழ் விகிதங்கள்' நாவல்.
அன்றைய தலைமுறையினரின் அகப்போராட்டங்களை நாஞ்சில் நாடன் சித்தரித்துள்ள விதம், இன்றைய தலைமுறையினரின் அகப்போராட்டங்களை அக்கறையுடன் அணுக உதவுகிறது. காலம் மாறியும் சூழல்கள் மாறியும் வாழ்வின் சில விகிதங்கள் மாறுவதே இல்லை என்பதை உணர்த்தும் இந்த நாவல் வெளியாகிக் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு ஆன பிறகும் தன்னுடைய புத்துணர்வைத் தக்கவைத்துக்கொண்டிருப்பதே இதன் வெற்றி.