Your cart is empty.
இதம் தந்த வரிகள்
-
-கல்வி கற்பதற்கு எட்டயபுரம் அரண்மனையின் பொருளுதவி வேண்டி, பதினைந்து வயதுச் சிறுவனாக எழுதிய கவிதைக் கடிதம் முதல், இறப்பதற்குக் கொஞ்ச காலத்திற்கு முன்பு குத்தி கேசவப்பிள்ளைக்கு எழுதிய கடிதம் வரை, பாரதி எழுதிய இருபத்துமூன்று கடிதங்களின் அரிய தொகுப்பு இது. திலகர், மு. இராகவையங்கார், பிரிட்டிஷ் பிரதமர் ராம்சே மக்டோனால்டு, பரலி சு. நெல்லையப்பர் முதலானவர்களுக்கு எழுதிய இக்கடிதங்கள் நுட்பமான வாசிப்புக்கு உரியவை. பாரதி புதையல் திரட்டுகள், சித்திரபாரதி ஆகிய அருங்கொடைகளை வழங்கிய பாரதி அறிஞர் ரா.அ. பத்மநாபன் (1917) அவர்களின் பெருமுயற்சியில் உருவான நூலின் செப்பமான இரண்டாம் பதிப்பு இது.
அம்பேத்கரின் நேர்மையை, சமூக நீதிக்கான இச்சையை, மனிதர்களைப் படிக்கும் கலையை, அறம்கொண்ட சமூகக் கட்டமைப்பின் மீதான விருப்பை, புலமையை, விவேகத்தை, மனிதநேயச் சமயக் கொள்கையை, எல்லாவற்றிற்கும் மேலாக எளிமையான மனிதர்களை உயர்நிலைக்குக் கொண்டு வருவதன் மூலம் இவ்வுலகை மறுகட்டமைப்புச் செய்யும் அவரது நோக்கத்தை இக்கடிதங்களில் காண முடியும். தீவிரச் செயல்பாட்டில் ஈடுபடும் வலிமையின் இதயம் கொண்டவரை, ஒடுக்கப்பட்டோரின் விடுதலை வேண்டுபவரை, மாயைகளை உடைப்பவரை, நகைச்சுவை உணர்வும் பகடியும் கைவரப்பெற்ற மனிதரைக் காணமுடியும் இத்தொகுப்பில். எப்போதும் போராட்டத்திலேயே உழன்று கசப்பின் தழும்புகளைக் கொண்டிருந்தவர் அம்பேத்கர். அவரது மென்மையை, சாதி, மத, இன, பிரதேச, மொழி, பாலின வேறுபாடுகளைக் கடந்த மொத்த மனிதகுலத்திற்கான அவர் தரிசனத்தை, விலங்குகளின்பால்கூட நேசத்தைச் சுரந்த அவரது அன்பான இதயத்தை இக்கடிதங்களில் காண முடியும். அவரின் நெகிழ்ச்சியான சில முக்கியப் புள்ளிகளை இத்தொகுப்பில் தரிசிக்கலாம்.
பதினெட்டாம் நூற்றாண்டின் பின்பாதியில் சூன் 1778 முதல் சூலை 1792வரை புதுச்சேரியில் பிரெஞ்சுக் கும்பினியாரின் சத்திர நீதிமன்றக் காவல்துறையில் ‘இரண்டாவது நயினார்’ என்ற பொறுப்பான பதவி வகித்த வீராநாய்க்கர் எழுதிய நாட்குறிப்பு - சரித்திரமாக அக்காலத்து வாழ்வுமுறைகளையும் தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், மகாராட்டிரம், வங்காளம் ஆகியவற்றிற்கிடையே நிலவிவந்த உறவு, பகை, பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயர் இவர்களிடம் கொண்டிருந்த உறவையும் பகையையும் படம்பிடித்துக் காட்டுகிறது. ஐதர் அலி ஆட்சி, திப்பு சுல்தான் ஆட்சி, பிரெஞ்சுப் புரட்சிக்கு விளக்கம், புதுவை மக்களின் எழுச்சி, தென்னிந்திய வரலாறு தமிழ் வரலாற்றின் இணைப்பு, ஐரோப்பிய வரலாற்றின் பாதிப்பு பற்றிய விளக்கங்களை உள்ளடக்கியது ‘இரண்டாம் வீராநாய்க்கர் நாட்குறிப்பு’.
அச்சில் வெளிவந்த பாரதியின் இரண்டாம் படைப்பு ‘ஹிந்து’ நாளிதழில் டிசம்பர் 1904இல் பிரசுரமான கடிதமாகும். 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து இன்றுவரை தென்னகத்தின் தலையாய ஆங்கில நாளேடாக விளங்கிவரும் ‘ஹிந்து’வில் பாரதி எழுதிய இருபது கடிதங்களும் குறிப்புகளும் அடங்கிய நூல் இது. இவற்றில் செம்பாதிக்கும் மேலானவை முதன் முறையாக நூல்வடிவம் பெறுகின்றன. அரைகுறையான நறுக்குகளாகவும் செப்பமற்ற பாடங்களோடும் நிலவிய பாரதி எழுத்துக்கள் சில இந்நூல்வழி முழுமையும் செப்பமும் துல்லியமான காலக்குறிப்பும் பெறுகின்றன. இவை தவிர, பாரதியோடு செய்யப்பட்ட ஒரே நேர்காணல் எனக் கருதலாகும் ஒரு கட்டுரையும் முதன்முறையாக நூல்வடிவம் பெறுகிறது.