Your cart is empty.
கசாக்கின் இதிகாசம்
நவீன இந்திய இலக்கியத்தின் மகத்தான படைப்புகளில் ஒன்று ஓ.வி. விஜயன் எழுதிய ‘கசாக்கின் இதிகாசம்’. மலையாள நவீனத்துவ எழுத்தின் ஆகச் சிறந்த முன் மாதிரியும் நிகரற்ற சாதனையும் இந்த நாவல்தான். மலையாள நவீனப் புனைவிலக்கியத்தில் ‘கசாக்கின் இதிகாசம்’ மூன்று நிலைகளில் முன்னோடி இடத்தை வகிக்கிறது. ஒன்று: அதுவரை பின்பற்றி வந்த நாவல் வடிவத்தை முற்றிலும் மாற்றியது. பன்மைக் குரல்கள் வெளிப்படும் கதையாடலை முன்வைத்தது. தொன்மங்களும் நாட்டார் கதைகளும் உளவியல் துணைப்பிரதிகளும் கொண்ட பரந்ததும் ஆழமானதுமான கதையாடலை அறிமுகம் செய்தது. இரண்டு: படைப்பு மொழியை உச்சத்துக்குக் கொண்டு சென்றது. ஆரம்பகால நாவலாசிரியரான சி.வி. ராமன்பிள்ளைக்கும் மறுமலர்ச்சிக் கால எழுத்துக் கலைஞரான வைக்கம் முகம்மது பஷீருக்கும் பிறகு இந்த நாவல் வாயிலாக ஓ.வி. விஜயனே படைப்பு மொழியைத் தனித்துவப்படுத்தினார்; புதிய தளங்களுக்குக் கொண்டு சென்றார். மூன்று: எதார்த்தத்தின் மீது மாயங்கள் நிறைந்த கதைத்தளத்தை இந்த நாவலே உருவாக்கியது. லத்தீன் அமெரிக்க இலக்கியத்தில் மாய எதார்த்தவாதம் அறிமுகமான அதே கால அளவில் அந்தப் போக்குக்குச் சமாந்தரமான ஒன்று ‘கசாக்கின் இதிகாசம்’ மூலமாகவே வெளிப்பட்டது. இந்திய மொழி நாவல்களிலேயே ஓர் அற்புதம் என்று சிறப்பிக்கப்படும் ‘கசாக்கின் இதிகாசம்’ முதன்முதலாகத் தமிழில் வெளிவருகிறது. நவீன கவிதையிலும் நாவலிலும் தனது வலுவான பங்களிப்பைச் செய்திருக்கும் யூமா வாசுகியின் மொழியாக்கம் நாவலை ஒளிகுன்றாமல் உயிர்ப்புடன் முன்வைக்கிறது.
ஓ.வி. விஜயன்
ஓ.வி. விஜயன் (1930 - 2005) எழுத்தாளர், பத்திரிகையாளர், கார்ட்டூனிஸ்ட், அரசியல் சிந்தனையாளர் என்று அறியப்படும் ஓவ்வுப் புலாக்கல் வேலுக்குட்டி விஜயன் பாலக்காடு மாவட்டம் விளையன் சாத்தனூரில் பிறந்தார். மலபார் போலீசில் பணியாற்றிய தந்தையின் இடமாற்றங்கள் காரணமாக வெவ்வேறு பள்ளிகளில் ஆரம்பக் கல்வியைப் பெற்றார். பாலக்காடு விக்டோரியா கல்லூரியில் பி.ஏவும் சென்னை மாநிலக் கல்லூரியில் எம்.ஏ. ஆங்கில இலக்கியமும் பயின்றார். கும்பகோணத்தில் கல்லூரி ஆசிரியராகக் குறுகிய காலம் பணியாற்றினார். தில்லி சென்று சங்கர்ஸ் வீக்லி யில் கார்ட்டூனிஸ்டாகவும் பத்திரிகையாளராகவும் பணிபுரிந்தார். தொடர்ந்து பேட்ரியாட், ஸ்டேட்ஸ்மென் இதழ்களில் பங்கேற்றார். கசாக்கின் இதிகாசம் நீங்கலாக ஐந்து நாவல்களையும் (தர்மபுராணம், குரு சாகரம், மதுரம் காயதி, பிரவாசன்டெ வழி, தலமுறகள்) ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார். நீண்ட கால தில்லி வாழ்க்கைக்குப் பிறகு கோட்டயத்துக்கு இடம்மாறி வந்தார். இருபது ஆண்டுகளுக்கு மேலாகப் பார்க்கின்ஸன் நோய்ப் பாதிப்புக்குள்ளாகி தொடர் சிகிச்சை பெற்று வந்தார். விஜயனின் இறுதிக் காலம் ஹைதராபாத்தில் கழிந்தது. அங்கேயே, 2005 மார்ச் 30 அன்று மறைந்தார். மனைவி தெரெசா. மறைந்துவிட்டார். ஒரே மகன் மது அமெரிக்காவில் வசிக்கிறார். கேரள சாகித்திய அக்காதெமி, மத்திய சாகித்திய அக்காதெமி, கேரள அரசின் உயர்ந்த இலக்கிய விருதான எழுத்தச்சன் விருது உட்படப் பல விருதுகள் பெற்றார். 2003ஆம் ஆண்டு இந்திய அரசின் பத்மபூஷண் விருது ஓ.வி. விஜயனுக்கு வழங்கப்பட்டது.