Your cart is empty.
அக்கரைச் சீமையில்
சுந்தர ராமசாமியின் முதல் சிறுகதைத் தொகுப்பு 'அக்கரைச் சீமையில்'. ஒரு எழுத்தாளனின் வருகையை அறிவித்த இந்தத் தொகுப்பு, அந்தக் கதை ஆளுமையின் வளர்ச்சியையும் முன்னறிவித்தது. விதைக்குள் விருட்சத்தின் இயல்பு மறைந்திருப்பதுபோல சுந்தர ராமசாமி எழுத்தின் எதிர்காலக் குணங்கள் 'அக்கரைச் சீமையில்' தொகுப்பிலேயே முளைகொண்டிருந்தன.
ஆரோக்கியமான புதுமைப்பித்தன் பாதிப்பில் எழுதப்பட்டவை இந்தத் தொகுப்பின் கதைகள். இவையே முற்போக்கு இலக்கியத்தின் அசலான வகைமாதிரிகள். அதே சமயம் சுந்தர ராமசாமியின் பிற்காலக் கதையெழுத்தில் தெளிந்து தெரியும் வடிவக் கச்சிதம், உள்ளடக்கப் பொருத்தம், மொழி நேர்த்தி, மானுடக் கரிசனம் போன்ற ஆதார இயல்புகள் முதல் தொகுப்புக் கதைகளிலேயே வேரோடியிருக்கின்றன. 'தண்ணீர்' - கச்சிதமான வடிவம், அகம் - உள்ளடக்கப் பொருத்தம், 'முதலும் முடிவும்'-மொழி நேர்த்தி, 'கைக்குழந்தை' - புதிய உத்தி, 'கோவில் காளையும் உழவு மாடும்' - மானுடக் கரிசனம் என்று எளிதாக வகைப்படுத்தலாம்.
இந்த முன்னோடி இயல்பே இந்தக் கதைகளை இன்றும் நிகழ்காலத்திற்கு உரியவையாக நிலைநிறுத்துகின்றன.
சுந்தர ராமசாமி
சுந்தர ராமசாமி (1931 - 2005) தமிழின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவரான சுந்தர ராமசாமி நாகர்கோவிலில் பிறந்தார். பள்ளியில் மலையாளமும் ஆங்கிலமும் சமஸ்கிருதமும் கற்றார். 1951இல் ‘தோட்டி யின் மக’னைத் தமிழில் மொழிபெயர்த்ததே முதல் இலக்கியப் பணி. 1951இல் புதுமைப்பித்தன் நினைவு மலரை வெளியிட்டார். இவரது முதல் கதையான ‘முதலும் முடிவும்’ அதில் இடம் பெற்றது. மூன்று நாவல்களும் பல கட்டுரைகளும் சுமார் 60 சிறுகதைகளும், பசுவய்யா என்ற பெயரில் கவிதைகளும் எழுதினார். 1988இல் காலச்சுவடு இதழை நிறுவினார். சுந்தர ராமசாமிக்கு டொரொன்டோ (கனடா) பல்கலைக்கழகம் வாழ்நாள் இலக்கியச் சாதனைக்கான ‘இயல்’ விருதை (2001) வழங்கியது. வாழ்நாள் இலக்கியப் பணிக்காகக் ‘கதா சூடாமணி’ விருதையும் (2003) பெற்றார். சுந்தர ராமசாமி 14.10.2005 அன்று அமெரிக்காவில் காலமானார்.