Your cart is empty.
தமிழகத்தின் ஈழ அகதிகள்
ஈழத் தமிழர் பற்றிய அக்கறையைப் பல வழிகளில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் சமூகம் நமது. அரசியலுக்கு அவ்வப்போது ஊறுகாய் போல இவ்வக்கறை பயன்படுகிறது. தமிழ் உணர்வுக்கும் இது அளவுகோலாகக் கொள்ளப்படுகிறது. ஆனால் ஈழத்திலிருந்து வந்து இங்கு அகதிகளாக முகாம்களில் வாழும் தமிழர்களைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. அவர்கள் வாழ்நிலை, அரசதிகாரம், அவர்களை நடத்தும் விதம், சலுகைகள் எனப்படுபவை செல்லும் வழிகள், எப்போதும் கண்காணிப்பு என்னும் அவலம், உதிரிகளாக அவர்களை மாற்றும் உத்திகள் எனப் பலவற்றிலும் கவனத்தைக் கோரும் வகையில் அகதி முகாம்களின் நிலையைப் பற்றியும் அங்கு வாழும் தமிழர்களைப் பற்றியுமான பல்வேறு விஷயங்களைத் தகவல்களாகவும் அனுபவமாகவும் இந்நூல் முன்வைக்கிறது. ஏற்கனவே 'போரின் மறுபக்கம்' என்னும் சுயசரிதை நூலை எழுதிக் கவனம் பெற்ற பத்தினாதன் தமிழ்ச் சமூகத்தைப் பார்த்து இந்நூல் வழியாகக் கேட்கும் வினாக்கள் கூர்மையும் காத்திரமும் ஆவேசமும் கொண்டவை. பேச்சுக்கும் வாழ்வுக்குமான முரணை அம்பலப்படுத்தி மனித உரிமையை நிலைநாட்டும் எழுத்துப் போராட்டம் இது. பெருமாள்முருகன்
தொ. பத்தினாதன்
இலங்கையில் மன்னார் மாவட்டம் வட்டக்கண்டல் என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். யாழ்ப்பாணத்தில் படித்துக்கொண்டிருந்தபோது யாழ் கோட்டையில் 1990இல் ஏற்பட்ட போர் காரணமாகத் தனது பதினாறாவது வயதில் அகதியாகத் தமிழகம் வந்தார். எட்டு ஆண்டுகள் மதுரை மாவட்டம் உச்சப்பட்டி அகதிகள் முகாமில் வாழ்ந்த பின்னர் சென்னை சென்ற இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பொதுநிர்வாகம் படித்தார். கால்நூற்றாண்டாகத் தமிழகத்தில் வாழும் ஈழ அகதிகள் குறித்துத் தொடர்ந்து பதிவுசெய்து வருகிறார். காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட, இவருடைய முதல் புத்தகமான ‘போரின் மறுபக்கம்’ பரவலான கவனம் பெற்றது. தற்போது காலச்சுவடில் பணி செய்யும் இவர் முகாமிற்கு வெளியே அரசு அனுமதி பெற்று மனைவியுடன் வாழ்ந்து வருகிறார்.