Your cart is empty.
சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை
தமிழ் இதழியல் வரலாறு இடைவெளிகள் நிரம்பிய ஆய்வுப் பரப்பு. தமிழின் முக்கிய இதாகள் பல முற்றிலுமே கிடைக்காத நிலை இவ்வரலாற்றை எழுதுவதற்குப் பெரிய தடைக்கல் ஆகும். ‘சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை’ முறையான ஆய்வு நெறியைக் கைக்கொண்டு, கூரிய அரசில் பார்வையுடன் ஒரு முக்கால் நூற்றாண்டுக் கால தலித் இதழியல் வரலாற்றைத் திறம்பட மீட்டுருவாக்கம் செய்கிறது. நான்கைந்து தலித் பத்திரிகைகள் மட்டுமே இன்று கிடைக்கும் நிலையில், நாற்பதுக்கும் மேற்பட்ட தலித் இதழ்களைப் பற்றிக் காலனிய அரசாங்க ஆவணங்களிலிருந்து ஏராளமான செய்திகளைத் திரட்டி, அவற்றைப் பகுத்தாராய்ந்திருக்கிறார் ஜெ. பாலசுப்பிரமணியம். 19ஆம் நூற்றாண்டில் நவீனத்துவம் முகிழ்ந்த தருணத்திலேயே தலித்துகளிடையே வளமானதொரு அறிவுச்சூழல் நிலவியதையும் நிறுவிக்காட்டுகிறார். தலித் வரலாற்றுக்கும் தமிழ்ச் சிந்தனை வரலாற்றுக்கும் இந்நூல் சீரிய பங்களிப்பாகும். இதனை அடியொற்றித் தமிழ் இதழியல் வரலாறு விரிவாக எழுதப்படும் நற்காலத்தை எதிர்நோக்குவோம்.



















