Your cart is empty.
பாரதியும் உ,வே,சா,வும்
-இருபதாம் நூற்றாண்டின் இருபெரும் தமிழாளுமைகள் பாரதியும் உ.வே.சா.வும். உலகச்
செவ்வியலிலக்கியங்களுக்கு நிகரானது சங்க இலக்கியம் என நிறுவும் நிலைக்கு அடித்தளம்
அமைத்த முன்னோடி உ.வே. சாமிநாதையர். உலகப் … மேலும்
-இருபதாம் நூற்றாண்டின் இருபெரும் தமிழாளுமைகள் பாரதியும் உ.வே.சா.வும். உலகச்
செவ்வியலிலக்கியங்களுக்கு நிகரானது சங்க இலக்கியம் என நிறுவும் நிலைக்கு அடித்தளம்
அமைத்த முன்னோடி உ.வே. சாமிநாதையர். உலகப் பார்வையோடு தமிழ்க் கவிதை வரலாற்றில்
வடிவத்திலும் பொருண்மையிலும் திருப்பத்தை ஏற்படுத்தியவர் பாரதி. பண்டைத் தமிழின் குறியீடு
உ.வே.சா. புதுமைத் தமிழின் உருவம் பாரதி. இருவரும் சமகாலத்தவர். நேரடியாகப்
பழகியவர்கள். தமிழரசர் என உ.வே.சா.வைத் தொடக்கத்திலேயே கொண்டாடியவர் பாரதி.
பாரதியின் பேராளுமை வெளிப்படாத பருவத்திலேயே பாரதியை அரவணைத்ததோடு
மறைவுக்குப் பிந்தைய காலத்திலும் பாரதியின் இடத்தை எழுத்தாலும் சொல்லாலும்
அங்கீகரித்தவர் உ.வே.சா. எனினும் பாரதியாரை உ.வே. சாமிநாதையர் அங்கீகரிக்கவில்லை
எனும் கருத்து பரவலாகவும் வலுவாகவும் காணப்படுகிறது. மேலும் பல சர்ச்சைகளும்
விவாதங்களும் எழுப்பப்பெறும் பாரதி - உ.வே.சா. தொடர்பு வரலாற்றை முதன்முதலாகக்
கண்டுபிடித்த புதிய ஆவணங்களின், முதல்நிலை ஆதாரங்களின் துணைகொண்டு ஆராய்ந்து
உண்மைகளைத் தெளிவுபடுத்தித் துலக்கிக் காட்டுகிறது இந்நூல். பாரதியியலுக்கு மேலும் ஒரு
பெரும்பங்களிப்பைச் செய்திருக்கிறார் ய. மணிகண்டன்.
ISBN : 978-81-19034-68-0
SIZE : 14.0 X 0.6 X 21.4 cm
WEIGHT : 0.15 grams
மந்திரமூர்த்தி அழகு
13 Feb 2024
எழுத்தாளர் பேராசிரியர் மணிகண்டன் அவர்களால் அருமையான மொழி நடையில்
எழுதப்பட்டுள்ளது "பாரதியும், உவேசாவும்" என்ற இந்த நூல்.
இந்த நூலானது உவேசா, பாரதி ஆகிய இருவருடைய அருமை, பெருமைகளையும் சிறப்பான
முறையில் விளக்கிச் சொல்கிறது. அதே நேரத்தில் இந்த நூலை பேராசிரியர் மணிகண்டன்
எழுத முனைந்ததன் முக்கியமான நோக்கம் பாரதி, உவேசா உறவு தொடர்பாகச்
சொல்லப்படும் சில குற்றச்சாட்டுகள், விவாதங்கள், குறை கூறல்கள் ஆகியவற்றை மறுப்பதே
என்பது தெளிவாகத் தெரிகிறது. தமிழ் உலகில் உவேசா மீது சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள்
அனைத்தும் சரியாகப் புரிந்து கொள்ளாமல் சொல்லப்பட்டவை; இந்தக் குற்றச்சாட்டுகள்
அனைத்தையும் கிடைக்கப் பெற்றுள்ள புதிய ஆதாரங்களின் அடிப்படையில் ( கூடுதலாக
லாஜிக் அடிப்படையிலும்) முற்றிலும் ஆணித்தரமாக மறுத்திருக்கிறார் பேரா மணிகண்டன்.
உ.வே.சா. அவர்கள் 1855 -இல் பிறந்து 1942 வரை சுமார் 87 வருடங்கள் வாழ்ந்தவர்.
பாரதியார் 1882 - இல் பிறந்து 1921 வரை சுமார் 39 வருடங்கள் வாழ்ந்தவர். பழம் தமிழ்
இலக்கியங்களைத் தேடி அலைந்து கண்டறிந்த உவேசாவும், , நவீனத் தமிழ் படைப்புகளைத்
தந்த பாரதியும் தமிழ் இலக்கிய உலகின் முதன்மையான இருவர் எனலாம்.
உவேசாவும், பாரதியும் 1904 முதல் 1908 வரை சுமார் நான்கு ஆண்டுகள் சென்னையில் ஒரே
காலத்தில் வசித்து இருக்கிறார்கள். பாரதியார் சுமார் 23 வயதில் தன்னைவிட இரண்டு
மடங்குக்கும் அதிகமான வயதுள்ள உவேசா அவர்களை அவரது 50 வது வயதில் முதன்
முதலாகச் சந்தித்திருக்கிறார். பாரதியார் பத்திரிக்கையில் துணை ஆசிரியராக இருக்கிறார்.
உவேசா அவர்கள் இராசதானி மாநிலக் கல்லூரியில் தமிழ்த்துறை தலைவராக இருக்கிறார்.
பொதுவாகப் பாரதியை உவேசா அங்கீகரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு அடிப்படையாக
நிலவுகின்றது. உவேசா, பாரதி இருவருக்கு இடையே உறவு எப்படி இருந்திருக்கிறது?
தமிழ் உலகின் முதன்மையாளர்களில் சிலரே விவாதங்களை எழுப்பியவர்களாகக் காட்சி
தருகின்றனர். ச.வையாபுரி பிள்ளை, ரா.அ.பத்மநாபன், கா.சிவத்தம்பி, அ.மார்க்ஸ்
முதலியோர் இந்த விவாத வரலாற்றில் முன் வரிசையில் இடம் பெறுகின்றனர். சாரு
நிவேதிதா உள்ளிட்ட எழுத்தாளர்களும், இலக்கிய உலகின் பொதுவான ஆர்வலர்கள் பலரும்
கூட இதில் விலக்கல்ல. பாரதி தொடர்பான ஓரிரு செய்திகளை உவேசாவே ஞாபகப் பிசகாக
எடுத்துரைத்துள்ளார். இவை அன்றி பதிப்புச் சிக்கல்களாலும், காலப் பழமையாலும் சில
குழப்பங்கள் ஏற்பட்டிருக்கின்றன. என்று கூறி இருவருக்கும் இடையே இருந்த நல்லுறவு
குறித்த ஆதாரங்களைத் தெளிவான முறையில் நூலில் விளக்கமாகக் கூறி இருக்கிறார்
ய.மணிகண்டன்.
நூலுக்கு அடிப்படையாக அமைந்த தரவுகளில் பெரும்பாலானவைகளை புதுடெல்லி தேசிய
ஆணைக் காப்பகம், நேரு நினைவு நூலகம் ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொண்டு தேடிக்
கண்டறியப்பட்டவை ஆகும். உவேசா நூலகம், ரோஜா முத்தையா ஆய்வு நூலகம்,
எட்டயபுரம் பாரதி நூலகம், சென்னை பல்கலைக்கழக மெரினா வளாக நூலகம் ஆகியனவும்
ஆசிரியருக்குத் துணை செய்துள்ளன. தரவுகளில் தருகின்ற விவரங்கள் அனைத்தையும்
நண்பர்கள் நூலை வாசித்து விரிவாக அறிந்து கொள்ள வேண்டுகிறேன்.
நூலில் ஆசிரியர் ய.மணிகண்டன் அவர்கள் பாரதி பார்வையில் உவேசா, உவேசா
பார்வையில் பாரதி, உவேசா முன்னிலையில் பாரதியாற்றிய சொற்பொழிவுகள், இருவர் தம்
சந்திப்புக் களமாகிய சென்னை மாநிலக் கல்லூரித் தமிழ் மாணவர் சங்கத்தின் தொடர்புடைய
நிகழ்ச்சிகள் ஆகியவற்றைக் குறித்து எல்லாம் உரிய ஆவணங்களுடன் தமிழ் உலகில்
முதன்முறையாக நூலில் குறிப்பிடுகிறார்.
உவேசா மீது பாரதி வாழ்வின் தொடக்கத்தில் கொண்ட மதிப்பும், மதிப்பீடும் காலம் தோறும்
வளர்ச்சி பெற்றே வந்திருக்கிறது. புதுவையில் ஒரு முறை உவேசாவைச் சந்தித்த பாரதி
"நீங்கள் பழம் புலவர்களை எல்லாம் வாழ செய்கிறீர்கள்" என்று நேரடியாகப் பாராட்டி
இருக்கின்றார். பாரதி தன் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் உத்தமதானபுரம் ஸ்ரீமான் வே.
சாமிநாத ஐயர் தமிழ் பாஷைக்கு நவீன உலகத்தில் மதிப்புத் தேடிக் கொடுத்தவர்களிலே
முக்கிய புருஷர் என்று அறிவித்திருக்கிறார்.
உவேசாவோ தாம் நேரடியாகக் குறுகிய காலப்பரப்பில் அறிந்த இளம் பாரதியை அன்பு
பாராட்டி மதிப்பளித்துத் தான் வீற்றிருந்த ராஜதானிக் கல்லூரியின் இலக்கியச் சங்கமான
சங்கப் பலகையில் அவருக்கு இடம் தந்து, மாணவர் இடையேயும் , இலக்கிய அன்பர்கள்
இடையேயும், பெரும் புலவர்கள், பேரறிஞர்கள் தலைமையில் சொற்பொழிவுகள் ஆற்றவும்,
மாணவர் ஆற்றும் உரைக்கு தலைமை தாங்கவும், தான் இயற்றிய செய்யுள்களை
எடுத்துரைக்கவும், பாடல்கள் இசைக்கவும் வாய்ப்பளித்து அவரை ஏற்று அங்கீகரித்து
இருக்கின்றார்; இலக்கிய உலகில் நடைபயில வாய்ப்புகளின் வாயில்களை பாரதிக்குத்
திறந்து வைத்திருக்கின்றார் உவேசா.என்கிறார் நூலாசிரியர்.
// 1.பாரதியார் அழகாகப் பேசும் ஆற்றல் வாய்ந்தவர்.
2. இசைப்பாட்டுகள் பலவற்றை பாடி இருக்கிறார். இவர் சங்கீதத்திலும் பழக்கமுடையவர்.
3. பாரதியாருடைய பாட்டு எளிய நடை உடையது. வசனமும் எளிய நடை உடையது.
பாரதியாருடைய வசனம் சிறிய வாக்கியங்களால் அமைந்தது. அர்த்த புஷ்டி உடையது.
(நினைவு மஞ்சரி) //
பாரதியாரோடு நேரடியாகப் பழகியதன் விளைவு உவேசாவின் முதல் இரு கூற்றுகள் என்ற
செய்திகளையும் நூலில் குறிப்பிடுகிறார் ய.மணிகண்டன்.
செந்தமிழ் நாடெனும் போதினிலே என்ற பாடல் எழுதப்பட்ட காலம், காரணம் குறித்து
பாரதிதாசன், யதுகிரி அம்மாள், உவேசா, சோமசுந்தர பாரதி ஆகிய நால்வரும் நான்கு
வெவ்வேறு செய்திகளை கூறியிருக்கிறார்கள். அவற்றைக் குறித்து எல்லாம் நூலில்
அருமையாக விளக்கி இருக்கிறார் நூலாசிரியர் ய.மணிகண்டன்.
உவேசாவின் கூற்றான கிருஷ்ணய்யரின் உரைதான் பாரதி செந்தமிழ் நாடு என்ற பாடலை
எழுதக் காரணம் என்ற கூற்றை தொ.மு.சி. யால் அடிப்படையாக ஏற்க முடியவில்லை.
ஆனால் அந்தக் கூற்றை மறுக்க ரகுநாதன் வைத்த காரணங்கள் வலுவற்றவை; சரியான
ஆதாரத்தின் அடிப்படையில் அமையாதவை என்பதையும் ய.மணிகண்டன்
சுட்டிக்காட்டுகிறார். ய.மணிகண்டனே உவேசா அவர்கள் ஞாபகப் பிசகாகவே அவ்வாறு
தவறாகக் கூறியுள்ளதையும் நிறுவுகிறார்.
ஆக பாரதியை உவேசா அங்கீகரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை உரிய தரவுகளுடன்
மறுத்திருக்கிறார் நூலாசிரியர் ய.மணிகண்டன். பாரதி அன்பர்கள் & தமிழ் தாத்தா
உ.வே.சா.வின் தமிழ் தொண்டு அறிந்தோர் அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்
இது.
நன்றி: வாசிப்போம் தமிழ் இலக்கியம் வளர்ப்போம் முகநூல் குழுமம்