Your cart is empty.
கடைசியாக ஒரு முறை
தொகுப்பின் எல்லாக் கதைகளும் ஒரே நேர்க்கோட்டில் இணைகின்றன. மரணம்தான் அந்த நேர்க்கோடு. மரணத்தை முன்னிறுத்தி அதன் வழியாகக் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. மனிதர்களின் ஆசைகளுக்கு, விருப்பங்களுக்கு, கனவுகளுக்குப் பின்னால் … மேலும்
தொகுப்பின் எல்லாக் கதைகளும் ஒரே நேர்க்கோட்டில் இணைகின்றன. மரணம்தான் அந்த நேர்க்கோடு. மரணத்தை முன்னிறுத்தி அதன் வழியாகக் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. மனிதர்களின் ஆசைகளுக்கு, விருப்பங்களுக்கு, கனவுகளுக்குப் பின்னால் என்ன இருக்கிறது? மரணம். நான் இல்லாவிட்டால் வீடு சொந்தம், உறவு, கணவன், மனைவி, அலுவலகம், நண்பர்கள் என்ன ஆவார்கள்? இதற்குப் பின்னால் இருப்பது மரணம். நான் இல்லை என்றால் எல்லாம் சீர்குலைந்துவிடும் - இதற்குப் பின்னாலும் மரணம்தான் இருக்கிறது. மலையைப் பார்க்கும்போது, கடலைப் பார்க்கும்போது மனிதனுக்கு ‘தான் ஒன்றுமில்லை’ என்பது ஏன் தோன்ற மறுக்கிறது? சிறுமைப்படாத மனம் மனிதனுக்கு எப்போது வந்தது? தான் இல்லாத உலகம், தான் இல்லாத வீடு, தான் இல்லாத வாழ்க்கை பற்றிய பயம் மனிதனை அச்சுறுத்திக்கொண்டே இருக்கிறது. அந்த பயத்தில் அலறும் மனதின் அவஸ்தைகள்தான் இக்கதைகள். மறதியற்ற மனதின் சுமைகள்.
அரவிந்தன்
அரவிந்தன் (பி.1964) இதழாளர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். இதழியல் துறையில் முப்பதாண்டுக் கால அனுபவம்கொண்டவர். இந்தியா டுடே, காலச்சுவடு, சென்னை நம்ம சென்னை, நம் தோழி ஆகிய இதழ்களில் பணியாற்றியுள்ளார். தி இந்து தமிழ் நாளிதழின் இணைப்பிதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றினார். இலக்கியம், தத்துவம், பெண்ணுரிமை, அரசியல், மொழி, திரைப்படம், கிரிக்கெட் ஆகியவற்றைக் குறித்த கட்டுரைகளை எழுதிவருகிறார். சிறுகதைகள், நாவல், இலக்கிய விமர்சனக் கட்டுரைகள், அரசியல் விமர்சனம், மொழிபெயர்ப்பு, மகாபாரதச் சுருக்கம், திரைப்படம், கிரிக்கெட் குறித்தவையென இதுவரை பதினைந்துக்கும் மேற்பட்ட நூல்கள் வெளியாகியுள்ளன. தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமத்தின் ‘சமயம் தமிழ்’ என்னும் இணையதளத்தின் ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். இதழியல் பயிற்சி வகுப்பு நடத்திய அனுபவமும் இவருக்குண்டு. தற்போது லயோலா கல்லூரியில் வருகைதரு விரிவுரையாளராக இதழியல் மாணவர்களுக்குப் பாடம் எடுத்துவருகிறார். விருதுகள் · தமிழ்ப் புத்தக நண்பர்கள் நடத்தும் மாதாந்தர விமர்சனக் கூட்டத்தில் இமையத்தின் படைப்புகள் குறித்து ஆற்றிய உரைக்கு 2016-17ஆம் ஆண்டுக்கான ‘ஆண்டின் சிறந்த உரை’ விருது. · பால சரஸ்வதி மொழியாக்க நூலுக்கு ‘கனடா இலக்கியத் தோட்டம்’ வழங்கும் ‘சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான விருது (2017).’
ISBN : 9789384641375
SIZE : 14.2 X 6.0 X 21.1 cm
WEIGHT : 147.0 grams
கீரனூர்ஜா கிர்ராஜா
13 Feb 2024
அரவிந்தனின் ‘கடைசியாக ஒருமுறை’ தொகுப்புக்கான விமர்சனம்
அரவிந்தன் சமீபமாக நிறைய எழுதிக்கொண்டிருக்கிறார். 2011 முதல் ஒரு சீரான இடைவெளியில் அவருடைய சில நூல்கள் பிரசுரம் கண்டுள்ளதைக் கொண்டு இதை கணிக்கிறேன். கடந்த ஆண்டுகளில் அவருடைய 'பயணம்', 'பொன்னகரம்' என இரண்டு நாவல்கள் அடுத்தடுத்து வெளியாகின. முன்னதாக இரண்டு கட்டுரைத் தொகுப்புகளும், மொழிபெயர்ப்புக் கதைக்கொத்தும் வந்திருக்கின்றன. அதற்கும் முன்னர் 2006இல் அவர் படைப்புத் துறையில் சற்றுத் தீவிர கவனம் செலுத்தியிருக்கிறார்.ஒரு பத்திரிகையாளராக வேலை செய்துகொண்டு இந்த அளவுக்கு இயங்க முடிந்திருப்பது மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம்தான்.
'குளியலறைக்கு வெளியே சத்தம் கேட்டுக்கொண்டிருக்கிறது' என்னும் அவருடைய முதல் சிறுகதைத் தொகுப்புக்குப் பிறகு, சுமார் பத்தாண்டு இடைவெளியில் அவரிடமிருந்து கிடைத்திருக்கும் அடுத்த கதைத் தொகுப்பு - 'கடைசியாக ஒருமுறை' ஒரே அமர்வில் வாசித்து விடத்தக்க, சற்று அளவில் பெரியதாக ஏழு கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. ஒரே அமர்வில் வாசிக்கக்கூடியனவாக இருப்பினும், உட்கார்ந்து யோசித்து - மானுட வாழ்வின் உன்னதங்களையும், அபத்தங்களையும் எடைபோடத்தக்க வீச்சுள்ள கதைகளாக இவற்றை நான் காண்கிறேன். அரவிந்தனின் கதை கூறல் பாணியும், மொழியும், இதற்குப் பெரிதும் ஒத்துழைப்பைத் தருகின்றன.
படைப்பாளி, தான் வாழும் காலத்தின் மனசாட்சியாகக் கருதப்படுகிறவன்.சொல்லெடுத்துப் புலம்புவதல்ல அவன் பணி. தன்னைச் சுற்றிலும் நிகழ்வதைக் கண்காணிக்கவும், அவற்றுக்கான எதிர்வினைகளாகத் தன் கலையை, ஆற்றலைப் பிரயோகிக்கவுமான தார்மீகப் பொறுப்புள்ளவன் அவன். இதற்கென அவன் வெகுமதிகளேதும் பெற்றுக்கொள்ளவில்லை. அதைக் குறித்த பொருட்படுத்தல்களும் அற்றவன்.
நாம் வாழும் நிலம், நம்மைக் கொண்டே அதிகாரத்தைக் கைப்பற்றுகிறவர்களுக்கான ஆடுகளமாக இருக்கிறது. இதைச் சகித்துக்கொள்ளவும் அவர்களாலேயே நாம் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறோம். தம் விருப்பத்துக்கு அவர்கள் ஒரு மாநகரை மயானமாக்கவும், மயானத்தை மாளிகையாக்கிக் கொள்ளவுமான வல்லமை கொண்டவர்கள். இந்நிலம் எப்போதும் ஆள்பவர்களுக்கான மேய்ச்சல் நிலம். 'மயான நகரம்' அவ்வாறான அவல நாட்களையே அங்கதத்தால் சித்தரிக்கிறது. மகாராணி என்றில்லை - மகாராஜாவானாலும் இதே கதிதான்.பாவனைகள் வேண்டுமானால் சற்று மாறக்கூடும்.
தாங்கவொண்ணாத் துயரங்களை எழுதவேண்டுமானால் நவீன படைப்பாளி எப்போதும் தேர்ந்துகொள்வது எள்ளல் தொனி. ஒருவகையில் இது பின் நவீனத்துவக் கூறுகள் கொண்ட எழுதுமுறையும் ஆகும். ‘மயான நகரம்’ கதையை அவ்விதமான விவரணைகளாலேயே நடத்திச்செல்கிறார் அரவிந்தன. எவ்விதச் சான்றாதாரங்களின் தேவையுமின்றி இந்தக் 'கூத்துக்கள' நடைபெற்ற காலத்தை, வேதனை தோய்ந்த தலைகவிழல்களுடன் வாசகன் அசைபோட்டுப் பார்க்கத்தக்க முறையில் கதை சொல்லப்பட்டிருக்கிறது.
“ஒவ்வொருவரும் சிந்தும் கண்ணீரின் அளவைப் பொறுத்து வரிசைகள் உருவாக்கப்பட்டன. குறைவாகக் கண்ணீர் சிந்திக் கடைசி வரிசைக்குத் தள்ளப்பட்டவர்கள்,வரிசையின் முன்னேறப் பெரும் பாடுபட்டனர்”.
“துக்கம் தாளாமல் தற்கொலை செய்துகொண்டவர்களின் பட்டியல் நாற்சந்திகளிலும், முச்சந்திகளிலும் ஒட்டப்பட்டது. தற்கொலைகளைத் தவிர்ப்பீர் என்னும் கோரிக்கையும் அருகில் காணப்பட்டது”.
போன்ற வரிகளில் உருப்பெறும் கேலிச்சித்திரங்கள் காலத்துக்கும் கலையாதவை; அவமானகரமானவை.
அரவிந்தனின் முன்னுரையை வாசிக்காது போனாலும் 'உருமாற்றம்' கதையுடன் 'பிறகு பார்க்கவே இல்லை'யை இணைத்தே பார்த்திருப்போம். உருமாற்றத்தில் கேயாரின் குணசித்திரம் மகோன்னத நிலைக்கு உயர்ந்து, படிப்படியாகத் தளர்வுறுகிறது. 'பிறகு பார்க்கவே இல்லை'யிலும் அவருடைய தனித்துவம் சித்தரிப்புப் பெறுகிறது. வீழ்ச்சியை அறிந்துகொண்ட மனநிலை, முழுமையை அறிந்துகொள்ளும்போதான துடிப்பான மனநிலைக்குச் சற்றுக் குறைவானதே.
தனிமனித குணாதிசயத்தை வியந்து நோக்கும் தன்மை தமிழின் சமீபத்துச் சிறுகதைகளில் சற்றுத் தணிந்திருப்பதாகக் கருதுகிறேன் எழுதப்பட்டாலும்கூட நிலைக்காமல் அச்சித்திரத்தின் சாயம் சற்றைகெல்லாம் வெளுத்துவிடுகிறது. அரவிந்தன், கேயாரைத் தன் தேர்ந்த விரிப்புகளால் உயரத்தில் அமர்த்தி வைக்கிறார். பிறகொரு சந்தர்ப்பத்தில் அவருடைய ஆளுமையில் உருவாகும் சறுக்கல்களைப் பட்டியலிடுகையிலும் கேயாரின் பிம்பம் நம்மிலிருந்து கலைய மறுக்கிறது.
கேயாரில் ஒவ்வொருவரும் தனக்கான ஆதர்ச புருஷரை அடையாளம் காண இயலும். அதுதான் அந்தக் குணச்சித்திர விவரிப்பின் வெற்றி. விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட ஆளமை என இங்கு எவரும் இல்லை. அது கேயாருக்கும் பொருந்தும். “தன்னைப் பற்றிய பிறரது மதிப்பீடுகளுக்கேற்ப வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவது யாருக்கும் சாத்தியமல்ல” என்னும் வரிகள் உணர்த்தும் நிஜமும் இதுதான்.
“கருவியை ஒருமுறை சுத்தம் செய்வதற்கும் மறுமுறை சுத்தம் செய்வதற்குமிடையே குறைந்தது இரண்டு நிமிட இடைவெளி இருந்தது. அந்த இடைவெளிகளில் அவர் குழாயை மூடவில்லை” என்று எழுதும்போதும் “தண்ணீர் கொட்டிக்கொண்டே இருந்தது” என்னும் வரியைத் திரும்பத் திரும்ப அந்தப் பத்தியில் புழங்குகிறபோதும் கேயாரின் சறுக்கல் பூடகமாகக் காட்சிப்படுத்தப்பட்டுவிடுகிறது.
“சுடருடன் பிரகாசித்த திரியை மங்கிய தணலாகவோ, கருகலின் எச்சமாகவோ பார்க்க விரும்பாத” மனம்தான் நம்முடையது. ஆனால் சுடருடன் பிரகாசித்த திரியின் காலங்கள் மகத்தானவை. இவ்விரு கதைகளும் 'அஞ்சலிக் கதைகள் போன்றவை' என்னும் ஆசிரியரின் முன்னுரைக் கூற்று அவசியமற்றது. கேயாரின் மரணம் இக்கதைகளில் ஒரு பொருட்டே இல்லை. அதேபோன்று, இத்தொகுப்பிலுள்ள எல்லாக் கதைகளையும் மரணம் என்கிற கோட்டில் இணைத்துப்பார்க்கும் அணிந்துரையாளரின் அவதானிப்பும். மரணம் சாஸ்வதமானது. அதை மோஸ்தராக்கிப் பார்க்கும் மனம் சம்பத்தின் 'இடைவெளி' காலத்திலிருந்து நம்மைத் தொற்றிக்கொண்டிருக்கிறது. மரணத்தை வெல்வதுதான் கலையின் கலைஞர்களின் தலையாய சங்கல்பம்.
'உருமாற்றம்' கதையைத் தொடர்ந்து 'பிறகு பார்க்கவே இல்லை' இடம்பெற்றிருக்கும் பட்சத்தில், ஒரு நாவலின் இரு அத்தியாயங்களாகவே அவற்றை பாவிக்க வேண்டியதிருக்கும். காலவரிசைக்காகக் கடைசிக்கு நகர்த்தப்பட்டாலும் இயல்பாகத் தன் இடத்தை வந்தடைந்துவிடுகிறது அந்தக் கதை. கேயாரில் என் பங்குக்கு நானும் சில ஆளுமைகளைத் தரிசித்து வியக்கிறேன். அரவிந்தன் தொடர்ந்து கேயாரை எழுதுகின்ற மனநிலையுடன்தான் எப்போதும் இருப்பார் என்று தோன்றுகிறது.
என் பிராயத்தில் விவரிக்க முடியாத புத்துணர்வுடனும், பிரம்மிப்புகளுடனும்தான் நான் மலைகளைக் கண்ணுற்றது. அரவிந்தன் மலைகளைக் குறித்து மாய்ந்து மாய்ந்து எழுதும்போது இத்தணலிலிருந்தும் தெறித்தோடி எங்கேனுமொரு மலைச்சிகரத்தில் நம்மை ஒப்படைத்துக்கொள்ளவே தோன்றுகிறது. “வீட்டைச் சுற்றிலும் மலைகள் என்பதைவிட, மலைகளுக்கு நடுவில் வீடு என்று சொல்வதே பொருத்தமானது. மலை மீது விளையாடடு, மலைகளுக்கு நடுவில் சாப்பாடு, மலைகளுக்கு நடுவில் வாழ்க்கை”. யோசித்துப் பார்க்க ரம்மியமாக இருக்கிறது. மலைகளைத் தீவிரமாக நேசிக்கும் ஒருவனின் வாழ்வனுபவங்களாக விரிகிறது. ‘மலையும் மலைசார்ந்த வாழ்வும்' கதை.
அவனைப் பொறுத்தமட்டிலும் மலைகள் வெறுமனே காட்சிச் சித்திரமாக மட்டுமின்றி வாழ்வுடன் பிணைந்திருக்கும் ஆதாரமாகவும் தோன்றுகிறது. வளர்மதி, நந்தினி, முத்துக்கிருஷ்ணன், காமாட்சி என்று எத்தனை உறவுகளை அவற்றிடமிருந்து ஞாபகங்களால் மீட்டெடுக்கிறான். ஒவ்வொரு மலையிலிருந்தும் - அது குன்றானாலும், பாறையானாலும், சிம்லா, குலுமனாலி ஆனாலும், சென்னை பல்லாவரத்தின் நிறம் தொலைந்த மேடுகளானாலும் ஒவ்வொன்றிலிருந்தும் - அவனுக்குப் பெற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. எல்லாவித இழப்புகளுக்கும் பிறகு அவனுடைய பாதங்கள் மலையை நோக்கியே அடி எடுத்து வைக்கின்றன.
மலைகள் ஏன் அவனை வசீகரிக்கின்றன என்பதற்கு நாம் நேரிட அர்த்தம் கொள்ளத் தேவையற்ற அளவு துலக்கமாகக் கதை புனைவுற்றுள்ளது. நாம் தொலைவிலிருந்தும் தரிசிக்கின்ற மலை, அருகில் செல்ல வேறொரு பரிணாமம் கொண்டுவிடுகிறது. மலையின் பகலும், இரவும் வெவ்வேறான சீதோஷ்ணத்தை மட்டுமின்றி, வெவ்வேறான கண்களையும், குணாதிசியத்தையும் பெற்றிருப்பது அனுபவிக்க அனுபவிக்க விந்தையை ஏற்படுத்தக்கூடியது. போகிறபோக்கில் வாகனச் சன்னல்களின் வழியே நாம் காணும் மலைகள்வேறு. மலைகளுடன் வாழ்வதென்பது வேறு.
'கடைசியாக ஒருமுறை' கதையின் சாம்பசிவனுக்குப் போல சில மாதங்களுக்கு முன்னர், எனக்கொரு விபத்தனுபவம் ஏற்பட்டது. அவனுக்காவது இடது முழங்கையிலும் முழங்காலிலும் இடது கண்ணிற்குக் கீழும் சிராய்ப்பு. எனக்குச் சற்றுத் தீவிரமாகத் தலையில் பட்ட அடியால் மண்டையோட்டில் இரண்டு விரிசல்கள். பேனா பிடித்து எழுதுகின்ற முக்கிய விரல்களிரண்டின் நகமும் சதையும் தொங்கிக்கொண்டிருந்தன. விபத்தின்போது சாம்பசிவனைப் போல என்னிடம் இரண்டு லட்சம் ரூபாயோ, பத்திரமோ, கடிதங்களோ, கையெழுத்திட வேண்டிய தாள்களோ, பரபரப்பை உண்டாக்குகின்ற அந்த ஆணுறைகளோ இல்லை. ஆனால் சாம்பசிவனைப் போலவே எனக்கும் அத்தருணத்தில் வேறுவேறு சிந்தனைகள் கிளைபிரிந்து ஓடியவாறிருந்தது.
சாம்பசிவன் போல என்னால் அடுத்த நாள் அதே இடத்தைக் கடக்க முடியவில்லை. இரண்டு மாதம் கழித்துக் கடக்க நேர்ந்தபோது உண்மையிலேயே உடல் முழுக்க விறைப்பு நிலைதான். பிதுங்கி வழிகின்ற ஜனத்தொகையால், மூச்சை நிறுத்தி வைக்கின்ற வாகனங்களின் பெருக்கத்தால் விபத்தில் உயிரிழப்பதைக்கூட நாம் இயல்பாக ஏற்றுக்கொள்ளப் பயிற்றுவிக்கப்பட்டுவருகிறோம்.
இக்கதையைக் காரணமாகக் கொண்டு எல்லோர்க்கும் பொதுவான சில நல்ல வரிகளை எழுதிவிட அரவிந்தனுக்கு வாய்த்திருக்கிறது.
“தன்னைப் பற்றிய எதிர்மறையான உணர்வுகளை விட்டுச் செல்வோமோ என்ற பயம் வரும்போது எப்படியாவது அதை மாற்றிவிட்டுப் பிறகு சாகவேண்டும் என்று தோன்றுகிறது. இதமான உணர்வுகளுடன் விடைபெற்றுக்கொள்வோம் என்று நினைக்கும்போது இந்த வாழ்க்கையை நான் ஏன் இவ்வளவு சீக்கிரம் இழக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.”
“தான் இல்லாத நாளையைக் கற்பனையில் தரிசிக்கப் பழகிவிட்ட அவனுக்கு ஏக்கங்களின் சுமை கூடிக்கொண்டே போயிற்று. ஆனால் ரகசிய ஆசைகளையும், ஏக்கங்களையும் எழுதும் துணிச்சல் இன்னும் வரவில்லை எழுத முடியாத எல்லா ஆசைகளும் பெண்களையும், பதவிகளையும் சார்ந்தவை என்பதை எண்ணி வியப்படைந்தான்”.
'தனியாக ஒரு வீடு' கதை குறித்து உரையாடுவது தவிர்க்கவியலாததாக இருக்கிறது. நகரத்தின் சந்தடியினின்றும் விலகி வயல்வெளிக்கு மத்தியிலிருக்கிற அந்த வீட்டையும், மனிதரையும் அத்தனை எளிதாகக் கடந்துவிடுவது சாத்தியமில்லை. யாளி, நந்தி, துவாரபாலகர் என கோயிலுக்குரிய சமாச்சாரங்கள் கொண்டதாக அவ்வீடு விவரணம் பெறுகிறது. அந்த வீட்டுக்காரருக்குச் சொந்தமாக சென்னையிலுள்ள இடத்தை மினரல் வாட்டர் பிளாண்ட் வைக்கக் கேட்டு வரும் இருவர் மற்றும் அவர்களின் அனுபவத் தொகுப்பாக வெளிப்பட்டுள்ள கதை மெல்ல மெல்ல நிகழும் உரையாடல் விநோதங்களால் அரசியல் வர்ணம் பூசிக்கொள்கிறது. "மெட்ராஸ்ல எல்லாரும் பாட்டிலும் கையுமாகத்தான் அலையறாளாமே, பாட்டில்ல தண்ணி ரொப்பறதுக்கு ஒரு ஃபேக்டரியா?" என்று அவர் வெள்ளந்தியாகக் கேட்கிறார். “கிரீன் ரெவொல்யூஷன் காலத்துலயும் எங்கப்பா கெமிக்கல் போட்டதில்ல. பூமாதாவுக்கு வெஷத்த குடுக்க மாட்டேன்னுவார். நாங்க பரம்பர பரம்பரயா இந்தத் தொழில்ல இருக்கோம். எங்களுக்குன்னு சில வேல்யூஸ் இருக்கு, எத்திக்ஸ் இருக்கு. மண்ணை சூறையாடினா சோறு கெடைக்காது சார்...” என்று நெகிழ்ந்துபோகும் அவர், ஒரு கட்டத்தில், "காந்தியப் பத்திப் பேசாதீங்கோ... அவர் முஸ்லீம்சுக்கு எல்லாத்தையும் விட்டுக் கொடுத்துட்டார்" என்று காந்தி பெயரை உச்சரித்ததற்காக எதிரிலிருப்பவர் மேல் பாய்கிறார். இஸ்லாமியர்கள் தேசபக்தி இல்லாதவர்கள் என்று குதிக்கிறார்.
ரமலான் நோன்புக் காலத்தின் ஒரு மாலை நேரத்தில் யதேச்சையாக ஒரு பள்ளிவாசலைக் கடந்து சென்றுகொண்டிருந்தேன். அலை அலையாக நோன்புக் கஞ்சி வாங்கிச்சென்ற பெண்களில் பெரும்பான்மையினரின் நெற்றியில் குங்குமமும் விபூதித் தீற்றலுமிருந்தது. ஊரில் என்னுடைய பெரும்பாலான நண்பர்கள் இந்தச் சமூகத்தினர். அவர்களை 'மாமன்' 'மச்சான்' என உறவின் முறை கூறித்தான் விளிக்கிறேன். இதுதான் நடைமுறை யதார்த்தம். 'தனியாக ஒரு வீடு' கதையில் வரும அய்யர்வாளும், அவரைப் போன்ற ஆயிரக்கணக்கிலுள்ளோரும், அவர்தம் மூதாதையரும் கடந்த நூற்றாண்டுகளில் மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள். இதைத் திட்டமிட்டுச் செய்தவர்கள் பிரிட்டிஷ்காரர்கள். நாம் இன்னும் அவர்கள் புழங்கிய பாண்டங்களில்தானே புழங்குகிறோம். அரவிந்தனின் கதை இதுபோன்ற விவாதங்களை உருவாக்குவதன் வழியாகவும் தீவிர கவனம் பெறுகிறது.
அரவிந்தன் தனது கதை கூறல் முறையில் காலகாலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் மரபார்ந்த தன்மைகளை உதறிவிட்டு சுதந்திரமாகவும், இறுக்கம் தவிர்த்தும் பேச விழைகிறார். எடுப்பு தொடுப்பு முடிப்பு என்னும் இலக்கணச் சட்டகத்தைப் பெயர்த்துக்கொண்டு இயல்பாக வெளியில் வந்து விழுந்துள்ள கதைகள் இவை. இதனாலேயே சொல்ல நேர்ந்ததை நெருடல் எதுவுமின்றி சொல்லிக் கடக்க அவரால் இயன்றிருக்கிறது.
ஒருவித அபுனைவு மொழி லாவகத்தை, இப்புனைகதைகளுக்குள் நீங்கள் கண்டறியலாம். நாட்டார் கதை கூறல் தன்மையோ, வட்டார வழக்கோ சற்றும் கவிந்திராத, அவை தேவையுமில்லாத கதைகள் இவை. ஒரு நகரவாசியின் கண்களால்தான் அவரால் கிராமத்தையும், வயல்வெளிகளையுமே கூடப் பார்க்கமுடிகிறது. அவ்விதத்தில் வலிந்து அவர் முண்டாசு கட்டிக்கொள்ளாதது திருப்தியளிக்கிறது.
குடும்பம், மனைவி, குழந்தை, நட்பு, காதல், காமம், இயற்கை, சமூகம் என ஒன்று மீதமில்லாமல் அனைத்திலும் தோய்ந்த ஒரு மனிதனின் நாட்குறிப்பின் பக்கங்களைப் போன்ற இக்கதைகள் விரிகின்றன. 21ஆம் நூற்றாண்டின் நகர் சார்ந்த தமிழ்ச் சிறுகதைகள் இப்படித்தான் இருந்தாக வேண்டும்.
நன்றி: காலச்சுவடு மாத இதழ்