-1974இல் ‘இரவுச் சுடர்’ வெளிவந்தபோது பெண் எழுத்தாளர்களைப் பற்றிய என் ஆராய்ச்சி தொடங்கியிருந்தது. பாலுறவு, கற்பு மற்றும் காதல் என்ற கோணத்திலிருந்து அதைப் பார்த்தபோது, உடலுறவு என்பது …
மேலும்
-1974இல் ‘இரவுச் சுடர்’ வெளிவந்தபோது பெண் எழுத்தாளர்களைப் பற்றிய என் ஆராய்ச்சி தொடங்கியிருந்தது. பாலுறவு, கற்பு மற்றும் காதல் என்ற கோணத்திலிருந்து அதைப் பார்த்தபோது, உடலுறவு என்பது தூய்மையைக் குலைக்கும் ஒரு தாக்குதலாக நோக்கப்படுவதுபோல் தோன்றியது. 1975இல் ‘மீண்டும் தூயவை தொடர’ என்ற தலைப்பில் சதங்கை பத்திரிகையில் சூடாமணி எழுதிய கதையில் உடலுறவு பூவைக் கசக்குவதுபோல் ஓர் அழிக்கும் செயல் என்ற தொனி இருந்தது. 1972இல் சூடாமணி எழுதிய ‘நான்காம் ஆசிரமம்’ கதையில் வெளிப்பட்ட உடலுறவு என்பது உடலின் தெய்வீகத்தன்மைக்கு மேலும் மெருகூட்டும் செயல் என்ற நோக்கிலிருந்து இரவுச் சுடர் நாவலும் அடுத்து வந்த கதையும் மாறுபட்டன. மூன்றையும் சேர்த்துப் பார்த்தபோது இரு வேறு அதீதங்களாக அவை எனக்குப் பட்டன அப்போது. அவளை அறியாமல் அவள் மனத்தில் புதைந்துகொண்டு அவளை ஆட்டிப்படைக்கும் உணர்வுகளுடன் சமரிடும் பெண்ணாக, இரவின் மௌனத்திலும், தாரகைகளின் ஒளியிலும் ஒன்றி இயற்கையுடன் ஓர் அந்தரங்க உறவு பூணும் பெண்ணாக இரவுச் சுடர் நாவலின் நாயகி யாமினியைப் பிறகு வந்த ஆண்டுகளில் பார்த்தபோது அதிலுள்ள உணர்வுச் சிக்கல்களும், இதுதான் சரி என்று உலகம் நிர்ணயித்த ஒன்றிலிருந்து ஒருத்தி மாறுபடும்போது அவளுக்கு ஏற்படும் மன உளைச்சல்களும், அவளுடைய அந்த விலகலே அவளை மனப்பிறழ்வு கொண்ட ஒருத்தியாக மற்றவர்கள் பார்க்கும்படி மாற்றுவதும் மஞ்சு விலகியபின் தெரியும் காட்சியாக எனக்குத் தெரிந்தது.