தமிழ்நதி
18 Feb 2026
அய்ஃபர் டுன்ஷின் ‘'ஒரு மனநல விடுதியின் மிகவும் நம்பத் தகாத வரலாற்று அறிக்கை' நாவல்
மதிப்புரை
…துருக்கியின் வடபகுதியில் கருங்கடலுக்கு முதுகைக் காட்டிக்கொண்டு நிற்கும் மனநல விடுதியில், ஒரு நாட் பொழுதில் (பெப்ரவரி 14) நிகழும் சம்பவங்களை மையமாகக் கொண்டே நாவல் நகர்த்தப்படுகிறது என்றபோதிலும், மனநல விடுதிக்குள் நாவல் நிற்பதில்லை. அதற்கப்பாலும் சென்று அந்த மருத்துவமனையின் பணியாளர்கள்-நோயாளிகளது பின்னணி, அவர்கள் அவ்விடத்தை வந்தடைந்ததற்கான காரணங்கள், உணர்வுகள், துருக்கியின் வரலாறு என அலைந்து திரிந்துவிட்டு இறுதியில் மறுபடியும் தொடங்கிய இடத்திற்கே வந்துசேர்கிறது. மனநல விடுதி என்றவுடன் இருண்ட தன்மை கொண்ட நாவலென எண்ணிவிடத் தேவையில்லை. வரலாற்றையும் கதாபாத்திரங்களையும் தன்னுடைய கறுப்பு நகைச்சுவை மூலம் வாரிவிடுகிறார் நாவலாசிரியர் அய்ஃபர் டுன்ஷ்…
…வியப்பு என்னவென்றால், அய்ஃபர் டுன்ஷால் இத்தனை குழப்பகரமான இழைகளை, சம்பவங்களை ஞாபகத்தில் வைத்திருந்து எங்ஙனம் தொடுக்கமுடிந்தது என்பதே. முடிக்காமல் விட்டு அந்தரத்தில் தொங்கிய இழை என ஏதுமிராது என நம்பலாம்…
நன்றி: தமிழ்நதி (முகநூலிலிருந்து)
முழுப்பதிவையும் வாசிக்க:
https://www.facebook.com/727685833/posts/10161682158040834/?rdid=Sbs58nhT3bmhtwsi#
டி.என். ரஞ்சித் குமார்
None
'ஒரு மனநல விடுதியின் மிகவும் நம்பத்தகாத வரலாற்று அறிக்கை' நாவலின் மூன்றில் ஒரு பகுதி ஷாலினி பிரியதர்ஷினி அவர்களால் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளதாக மொழிபெயர்ப்பாளர் சுகுமாரன் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். மொத்தம் ஐநூறு பக்கங்கள் கொண்ட நாவலில் முதல் முன்னூற்று ஐம்பது பக்கங்கள் சுகுமாரன் அவர்களின் மொழியாக்கமாக இருக்கக்கூடும் என்று வாசிக்கும் போது உணர முடிகிறது. மீதமுள்ள நூற்றைம்பது பக்கங்களில் வாசிப்பனுபவத்தில் சிறிய வேறுபாட்டை உணர முடிகிறது.
இரண்டு மொழிபெயர்ப்பாளர்கள் ஒரு படைப்பில் இணைவது தமிழிலும் இதற்கு முன்பு 'தனிமையின் நூறு ஆண்டுகள்' நாவலில் (சுகுமாரன் - ஞாலன் சுப்ரமணியன்) நடந்திருக்கிறது. ஆங்கிலத்தில் ரஷ்ய-ஆங்கில மொழியாக்கங்களிலும் பரவலாகக் கேள்விப்பட்ட ஒன்று தான். முரகாமியின் Magnum Opus என்று புகழ்பெற்ற மூன்று பாகங்களைக் கொண்ட 1Q84 நாவலிலும் இரண்டு மொழிபெயர்ப்பாளர்கள் பணியாற்றியிருப்பார்கள். எழுத்தாளரின் தனித்துவத்தை ஒரு படைப்பில் இரண்டு மொழிபெயர்ப்பாளர்கள் கையாள்வதில் இருக்கும் சிரத்தை இன்னும் அதிகமானது.
அய்ஃபர் டுன்ஷ்ஷின் எழுத்தில் நேரடிக் கதையை விட தொனியே பிரதானமாக வெளிப்படும். இந்நாவலுக்கும் அது பொருந்தும். ஆனால் வடிவ ரீதியாக இது அவரின் பிற படைப்புகளில் இருந்து முற்றிலும் தனித்துவமானது. உள்ளடக்கத்தில் சிடுக்குகள் நிறைந்தது. தொடர்ந்து அறிமுகமாகிக் கொண்டே வரும் எண்ணற்ற கதாபாத்திரங்களும் அவர்களின் எண்ணற்ற கிளைக்கதைகளும் முன்பின்னான கால வரிசையும் வடிவ ரீதியாக நினைத்துப் பார்க்கும்போது சிக்கலாகத் தோன்றினாலும் வாசிப்புச் சரளம் விரைவிலேயே வசப்பட்டு விடுகிறது. வாசிப்பனுபவத்திலும் எங்குமே சுவாரசியம் குறைவதில்லை. வாசிப்பில் செலுத்த நேரிடும் கவனத்துக்கு ஈடாக மட்டுமல்ல அதற்கும் அதிகமான வாசிப்பின்பத்துக்கு குறைச்சலில்லாத அம்சங்கள் அய்ஃபர் டுன்ஷ்ஷின் எழுத்தின் மீதான ஈர்ப்பை மறுவாசிப்புகளிலும் தொடர்ந்து தக்க வைக்கின்றன.
மனப்பிறழ்வு வெறுமனே ஒரு நோயாகப் பார்க்கப்படும் பார்வையிலிருந்து முதல் நாற்பது பக்கங்களிலேயே நாம் நகர்ந்து விடுகிறோம் என்பதில் தான் இந்நாவலுக்கு கிடைத்துள்ள பரவலான அங்கீரகாரத்தின் மதிப்பு அடங்கியிருக்கிறது. எள்ளலும் பகடியும் கலந்த கதை கூறல் பக்கத்துக்கு பக்கம் வெடிச் சிரிப்பு வர வைக்கும் என்றாலும் அவலத்துக்குப் பின்னால் நுட்பமான விமர்சனப் பார்வை அடியோடுவதும் புலப்படுகிறது.
துருக்கியின் கருங்கடலுக்கு முதுகைக் காட்டிக்கொண்டிருக்கும் மனநல மருத்துவ விடுதி தான் கதைக்களம். மருத்துவமனைப் பணியாளர்களும் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளும் தான் பிரதான கதாப்பாத்திரங்கள். மனநிலைப் பிறழ்வுக்கு உள்ளாகும் கதாபாத்திரங்களின் கடந்த கால வாழ்க்கை நிகழ்வுகள் சொல்லப்படுகின்றன. அவர்களின் மனநிலைகளில் அன்றைய காலக்கட்டத்தைய அரசியல், சமூக மாற்றங்கள் மறைமுகமான தாக்கத்தை செலுத்துபவையாகவும் நேரடி பாதிப்புகள் என்று பார்க்கும்போது பெரும்பாலும் அனைத்தும் முறைதவறிய காதலும் காமமும் சார்ந்தவையாகவும் இருக்கின்றன.
நாவலில் தனித்தனி அத்தியாயங்கள் கிடையாது. ஆனால் நாவல் முழுவதிலும் சீரான அலைவரிசை படைப்பின் உயிர்மூச்சு போல மிகுந்த கவனத்துடன் பேணப்பட்டிருக்கிறது. வாசிப்பு இடைவெளிகளில் கதாபாத்திரங்களின் பெயர்களை அடையாளம் காண்பதில் கொஞ்சம் குழப்பங்கள் வரலாம் ஆனால் இரண்டு மூன்று வரிகளில் உடனடியாக கதாபாத்திரங்களை இனங்கண்டு கதையோடு ஒன்றி விடுவோம். எண்ணற்ற கதாபாத்திரங்கள் வந்தாலும் இது இந்த கதாபாத்திரத்தின் பின்னணி என்பதை எளிதில் பின்தொடர்ந்துவிட முடியும். இப்படி சிக்கலான வடிவத்தை நேர்த்தியாகக் கையாண்டிருப்பதே அய்ஃபர் டுன்ஷ்ஷின் மேதமைக்குச் சான்று. அதைத் தமிழில் மொழியாக்கம் செய்வதென்பது மிகப்பெரிய சவால். சுகுமாரன் மொழியாக்கம் அபாரம்.
Memento திரைப்படம் பார்த்திருப்போம். கருப்பு-வெள்ளை மற்றும் கலர் என இரண்டு வெவ்வேறு காலவரிசைக் காட்சிகளை குலைத்துப் போட்டு துருவங்களை மாற்றி மாற்றி திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். படத்தில் வரும் மையக் கதாபாத்திரம் உணரும் கால வரிசைக் குழப்பத்தையும் நனவிலித் தடுமாற்றங்களையும் பார்வையாளர்களும் உணர்வார்கள். கதாப்பாத்திரத்தின் மறதியும் நினைவுக் குழப்பங்களும் படத்தைப் பார்க்கும் பார்வையாளர்களான நம்மையும் தொற்றிக்கொள்ளும்.
இந்த நாவலுக்கு அய்ஃபர் டுன்ஷ் குறிப்பாக இப்படி ஒரு பின்னலான வடிவத்தை தேர்வு செய்திருப்பதற்கும் இதன் உள்ளடக்கமே பிரதான காரணமாகப் படுகிறது. வாசிப்புக்கு வெளியே நாம் காணும் உலகத்தின் கால விதிமுறைகள் இயங்கும் விதம் நமக்குப் பழகிய ஒன்று. நாவல் கட்டமைக்கப்பட்டிருக்கும் உலகம் அதில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்களின் மனநிலைகளால் அவதானிக்கப்படுகிறது. இந்த அவதானிப்புக்கு நாவலின் வடிவக்கட்டமைப்பு நமது புலன்களை பழக்குகிறது. அதற்கு மொழியின் தொனியையே கருவியாகக் கச்சிதமாகப் பயன்படுத்தியிருக்கிறார் நாவலாசிரியர். கொஞ்சம் பிசகினாலும் சித்தரிப்புகள் தட்டையான நேரடி அர்த்தங்களுக்குள் அகப்பட்டுவிடும். இதை மொழிபெயர்ப்பில் கொண்டு வர கடுமையான உழைப்பைக் கோரியிருக்கும் என்பது நிச்சயம். சுகுமாரன் மற்றும் ஷாலினி பிரியதர்ஷினி இருவரின் உழைப்பும் பாராட்டுக்குரியது.
மொழிபெயர்ப்பில் சுகுமாரன் பயன்படுத்தும் சொற் பிரயோகங்கள் நாவலின் அகக்குரலை துல்லியம் குலையாமல் கடத்துகின்றன. ஆனால் மேலே சொன்னது போல முதல் 350 பக்கங்களுக்குப் பிறகு மொழிநடையில் ஒரு வேறுபாடு நன்றாகவே புலப்படுகிறது. கதையாகப் பின்தொடர்வதில் சிக்கல்கள் இல்லை என்றாலும் அதுவரையில் கதையோட்டத்தில் ஒன்ற வைத்த அலைவரிசை கொஞ்சம் திரிந்து விட்டதைப் போல் இருந்தது. அதேபோல சில கதாபாத்திரங்களை ஒருமை/பன்மை யில் சுட்டுவதிலும் அடுத்தடுத்த வாக்கியங்களில் குழப்பங்கள் தென்படுகிறது (அவன்-அவர்; அவள்-அவர்). இந்தக் குழப்பம் முதல் 350 பக்கங்களில் இல்லை என்பதும் கவனிக்கப்பட வேண்டியது.
மிகச்சிறந்த வாசிப்பனுபவத்தைத் தரும் படைப்பு என்பதை நம்பிக்கையுடன் சொல்லலாம். தீவிர இலக்கிய வாசகர்கள் தங்கள் கவனத்திலிருந்து தவறவிடவேக் கூடாத புத்தகம். கதை சொல்லும் உத்தியில் இதற்கு நிகராக வேறொன்றைச் சொல்ல முடியவில்லை ஆனால் இப்படைப்பு தரும் வாசிப்பனுபவத்தை மார்க்கேஸின் மாய யதார்த்த பாணி கதைகளின் வாசிப்பனுபவத்தோடு ஒப்பிடலாம்.