‘ஒரு சிற்பியின் சுயசரிதை’ நூலுக்கு இரண்டு சிறப்புகள். ஓவியம், சிற்பம் ஆகிய கவின்கலைத் துறைகளில் சாதனை நிகழ்த்திய தமிழகக் கலைஞர்களில் எவரும் தன்வரலாற்றை எழுதியதில்லை. ஒரு கலைஞர் …
மேலும்
‘ஒரு சிற்பியின் சுயசரிதை’ நூலுக்கு இரண்டு சிறப்புகள். ஓவியம், சிற்பம் ஆகிய கவின்கலைத் துறைகளில் சாதனை நிகழ்த்திய தமிழகக் கலைஞர்களில் எவரும் தன்வரலாற்றை எழுதியதில்லை. ஒரு கலைஞர் அவரது வாழ்க்கை அனுபவங்களிலிருந்து கலையையும் கலை அனுபவங்களிலிருந்து வாழ்க்கையையும் எப்படி அமைத்துக்கொண்டார் என்பதைப் பிறர் வாயிலாகவே தெரிந்துகொள்ள முடிகிறது. தனது வாழ்க்கையையும் கலையையும் குறித்து நேர் அனுபவங்களின் பின்புலத்துடன் தமிழில் எழுதப்பட்ட முதல் சுயசரிதை இதுவே. இந்தத் தன்வரலாறு ‘ஆனந்த விகடன்’ வார இதழில் தொடராக வெளியானது. அரசியல் பிரமுகர்களும் திரைப் பிரபலங்களும் உழைப்பால் உயர்ந்தவர்களும் சொல்லும் வெற்றிக் கதைகளே வெளியாகிவந்த வெகுஜன இதழொன்றில் பெருவாரியான வாசகர்களுக்கு அறிமுகமில்லாத ஒரு கலைஞரின் சுயசரிதை வெளியானதும் அது கணிசமான வாசகர்களை ஈர்த்ததும் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளாகும். கலைஞர் ஒருவரின் தன்வரலாறாக மட்டுமல்லாமல் விடுதலைக்கு முன்னும் பின்னுமான முக்கால் நூற்றாண்டுக் காலத் தமிழக வாழ்க்கையின் கலை, சமூக, அரசியல் பின்புலங்களை அனுபவ அறிவுடனும் ஆழ்ந்த நோக்குடனும் சுவையாகவும் முன்வைக்கிறது தனபாலின் ‘ஒரு சிற்பியின் சுயசரிதை’.