Your cart is empty.
தர்மானந்த கோஸம்பி
பிறப்பு: 1876
கோவாவிலுள்ள சாங்க்வால் கிராமத்தில் பிறந்த கோஸம்பியின் பள்ளிக் கல்வி ஆரம்ப நிலையோடு நின்றுவிட்டது. சொந்த முயற்சியில் காசிக்குச் சென்று சமஸ்கிருதம் கற்றுக்கொண்டார். புத்தரையும் பௌத்த சமயத்தையும் அறிந்துகொள்ளும் தேடலில் அவர் நேபாளத்திற்கும் இலங்கைக்கும் பர்மாவுக்கும் பயணம் செய்தார். இலங்கையில் பௌத்தத் துறவறம் மேற்கொண்டு பாலி மொழியைக் கற்றார். பின்னர் கல்கத்தா திரும்பி அங்குள்ள தேசியக் கல்லூரியிலும் பல்கலைகழகத்திலும் பாலி மொழி கற்பித்தார். பரோடா சமஸ்தானத்து மகராஜா கெய்க்வாடின் ஆதரவில் புனேயில் தங்கி பௌத்த சமய ஆராய்ச்சியில் ஈடுபட்டார். விசுத்தி மாக்க நூலைப் பதிப்பிப்பதற்காக அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் சென்று பணியாற்றினார். 1930இல் இந்தியா திரும்பிய அவர், காந்திய இயக்கத்தில் தன்னை முழுவதுமாக ஒப்படைத்துக்கொண்டார். 1947இல் வார்தாவிலுள்ள காந்தி ஆசிரமத்தில் உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்தார். புத்தரின் வாழ்க்கையையும் பௌத்த சமயத்தையும் விளக்கும் இவரது ஆதாரபூர்வ நூலான ‘பகவான் புத்தர்’ சாகித்திய அகாதெமி வெளியீடாகத் தமிழில் வந்ததுள்ளது.