Your cart is empty.

தெஃப்னெ சுமான்
பிறப்பு: 1974
இஸ்தான்புல்லில் பிறந்து புயூக்குடா தீவில் வளர்ந்தவர். துருக்கியின் சமகாலப் பெண் எழுத்தாளர். கிளர்ச்சியூட்டும் கதைசொல்லலுக்கும் வளமான சரித்திர விவரணைகளுக்கும் நன்கறியப்பட்டவர். பாஸ்ஃபரஸ் என்றறியப்படும் பாஹிச்சை பல்கலைக்கழகத்தில் சமூகவியல் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தாய்லாந்திலும் லாஓஸிலும் ஆசிரியராகப் பணியாற்றியவர். அங்கே தூரக் கிழக்கின் மெய்யியலையும் ஆன்மவியல் துறைகளையும் பயின்றவர். ஹட யோகத்தின் மீதும் புத்த மெய்யியல் மீதும் ஈடுபாடு கொண்டிருந்தவர். பின்னர் அமெரிக்காவின் ஒரிகான் மாநிலத்தில் கல்வியைத் தொடர்ந்தார். தற்சமயம் கணவருடன் ஏதன்ஸ் நகரில் வசித்துவருகிறார்.
‘ஷெஹரஸேடின் மௌனம்’ எனும் இவருடைய முதல் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை ஹெட் ஆஃப் ஸீயஸ் பதிப்பகம் 2021ஆம் ஆண்டில் வெளியிட்டது. தெஃப்னெ சுமானின் இரண்டாவது நாவலான ‘பசியாறும் மேஜையில்’ 2022ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.
பல்வேறுபட்ட மத நம்பிக்கைகளுக்கும் இனங்களுக்கும் இடையில் ஊடாடும் மானுட பந்தங்களையும் அன்பையும் இவருடைய புனைவுகள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. புலம்பெயர்தல், மானுட நினைவுகள், புலத்திலிருந்து விரட்டப்படுதல் போன்றவற்றையும், துருக்கியின் மௌனமாக்கப்பட்ட வரலாற்றையும், ஆட்டோமான் கலாச்சாரத்தின் மறக்கடிக்கப்படும் வரலாற்றையும் இவருடைய படைப்புகள் ஆராய்கின்றன. இவருடைய நாவல்களும் சிறுகதைகளும் பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு, உலகளாவிய வாசகர் வட்டம் இவருக்கு அமைந்திருக்கிறது.