Your cart is empty.

கமலா விருத்தாசலம்
பிறப்பு: 1917-1995
திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பொதுப்பணித் துறை மேற்பார்வையாள ராக இருந்த பி.டி. சுப்பிரமணிய பிள்ளைக்கும் பிரமு அம்மாளுக்கும் திருவனந்தபுரத்தில் பிறந்தவர். பள்ளி இறுதிவரை படித்தவர். மலையாளச் சூழலில் வளர்ந்ததால் தமிழைவிட மலையாளத்தையே இளமையில் அதிகம் அறிந்திருந்தார். 1932 ஜூலையில் புதுமைப்பித்தனை மணந்தார். 1935இல் இவருடைய முதல் சிறுகதை ‘தினமணி’ பாரதி மலரில் வெளிவந்தது. அதன் பிறகு ‘மணிக்கொடி’, ‘கலைமகள்’ என அனைத்து முன்னணி இதழ்களிலும் எழுதினார். இவருடைய சிறுகதைத் தொகுப்பான ‘காசுமாலை’ 1971இல் வெளிவந்தது.
1948 ஜூனில் புதுமைப்பித்தன் அகாலமாக மறைந்த பிறகு 1950இன் பிற்பகுதியில் சென்னைக்குத் தம் ஒரே மகள் தினகரியுடன் குடிமாறினார். தனிஒருவராகத் தம் மகளை வளர்த்து ஆளாக்கினார். புதுமைப்பித்தனின் காப்புரிமையை மீட்டார்; அவருடைய படைப்புகள் அனைத்தும் வெளியாவதற்கு ஏற்பாடுசெய்தார். 1954இல் ‘புதுமைப்பித்தன் நிலையம்’ என்ற பெயரில் வீடு கட்டினார். புதுமைப்பித்தனின் மறைவுக்குப் பிறகு வாழ்ந்த 47 ஆண்டுகளில் அவருடைய நினைவைப் போற்றும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டுவந்தார்; அவருடைய ஆவணங்களை எல்லாம் போற்றிப் பாதுகாத்துவந்தார்.
கடந்த சில பதிற்றாண்டுகளாகப் பெண் எழுத்து பற்றிய விழிப்புணர்வும் விவாதங்களும் தமிழ்ச் சூழலில் காத்திரமாக நடைபெற்றுவருகின்றன. முந்தைய தலைமுறை எழுத்தாளர்களின் படைப்புகளைத் தொகுத்து வெளியிடும் முயற்சிகளும் நடந்துவருகின்றன. புதுமைப்பித்தன் என்ற பேராளுமையின் வாழ்வையும் படைப்பையும் புரிந்துகொள்ளக் கமலா விருத்தாசலம் இன்றியமையாதவர் என்பது ஒருபுறமிருக்க, சிறுகதை எழுதிய முதல் தலைமுறைப் பெண் எழுத்தாளர்களில் முதல்வர் என்ற முறையில் அவருடைய கதைகள் தனிக் கவனத்திற்குரியவை என்பதை இத்தொகுப்பு காட்டுகிறது. குடும்ப உறவுகளுக்குள் ஏற்படும் சிக்கல்களை மிக நுட்பமாகப் பல கதைகள் படம் பிடித்துக்காட்டுகின்றன. குழந்தைகளின் உணர்வுகளும் மனத்தைக் கவரும்வகையில் இடம்பெறுகின்றன. மலையாள வாழ்க்கையின் சாயல்கள் கதைகளுக்குத் தனித்தன்மையைத் தருகின்றன.