Your cart is empty.
நவீன் கிஷோர்
பிறப்பு: 1953
கவிதையை அன்றாட எழுத்துப் பயிற்சியின் விளைவு என்று கூறும் நவீன் கிஷோர் 1953ஆம் ஆண்டில் கொல்கத்தாவில் பிறந்தார். 1973ஆம் ஆண்டில் கொல்கத்தா புனித சேவியர் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1982ஆம் ஆண்டில் ‘ஸீகல் புக்ஸ்’ பதிப்பகத்தை நிறுவினார்.
தொடக்கத்தில் நாடகம், திரைப்படம், கலை, பண்பாட்டு ஆய்வுகள் ஆகியவற்றின் மீது அக்கறை கொண்டிருந்த ஸீகல் புக்ஸ் பின்னர் கவிதை, தீவிரப் புனைவிலக்கியம் உள்ளிட்ட இலக்கியப் படைப்புகளின் மீதும் கவனம் கொண்டு இயங்கிவருகிறது. கவிதை போக, புகைப்படக் கலையிலும் நாட்டம் கொண்டுள்ள கிஷோரின் புகைப்படக் கண்காட்சிகள் நாடகக் கலையில் வெளிப்படும் உணர்வுபூர்வ முகபாவங்களையும் காட்சிகளையும் சித்தரித்திருப்பதற்காகப் பெரும் வரவேற்புப் பெற்றவை. குறிப்பாக மணிப்புரி, வங்காளம், பஞ்சாப் ஆகிய மொழிகளின் பெண் நாடகக் கலைஞர்களை இவருடைய புகைப்படக் கருவி படமாக்கியிருக்கும் விதம் அபாரமானது.
கதே பதக்கம், செவாலியே விருது, நியூயார்க் நகர அமைப்பான ‘எல்லைகளில்லாச் சொற்கள்’ (Words Without Borders) வழங்கும் ஓட்டோவே விருது ஆகியவற்றை இவர் பெற்றுள்ளார். சுமார் பன்னிரெண்டு ஆண்டுகளாக எழுத்தில் ஈடுபாடு காட்டிவரும் கிஷோர் தனது கன்னி முயற்சியான ‘சிக்குப்பிடித்த துயர்’ கவிதைத் தொகுப்பிற்குப் பிறகு, ‘ஐந்தெழுத்துக் காவியத் தாய்’ (Mother Muse Quintet) எனும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.