ஆந்த்துவான் த சேந்தெக்ஸுபெரி பிரான்சில் லியோன் நகரில் பிறந்தவர். கல்லூரிப் படிப்பை முடித்ததும், விமானியாவதற்குப் பயிற்சி பெற்றார். தொடக்கத்தில் பிரான்சிற்கும், ஆப்பிரிக்க நாடான செனெகலுக்குமிடையே விமானம் மூலம் தபால் போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டார். பின்னர் பிரெஞ்சு விமான நிறுவனமொன்றின் பிரதிநிதியாக அர்ஜெண்டினாவில் பணியாற்றினார். 1935ஆம் ஆண்டு பிரான்சிலிருந்து வியட்நாமிற்கு விமானப் பயணம் மேற்கொண்டபோது லிபிய நாட்டுப் பாலைவனத்தில் அவருடைய விமானம் விபத்துக்குள்ளாகியது. நான்கு நாட்கள் தண்ணீரின்றி உயிருக்குப் போராடியபோது அரபுக்காரர் ஒருவரால் மீட்கப்பட்டார். 1939ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் தொடங்கியதும் பிரெஞ்சு விமானப் படையில் சேர்ந்து பல சாதனைகள் படைத்தார். 1944ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கோர்சிக்கா தீவிலிருந்து பிரான்சுக்குப் பயணம் மேற்கொண்டபோது அவரது விமானம் எங்கோ கண்காணாத இடத்தில் விழுந்து நொறுங்கியபோது அவர் மாயமாக மறைந்துவிட்டார்.
விமான சேவையோடு அவர் கொண்டிருந்த தொடர்பு அவரது பல்வேறு இலக்கியப் படைப்புகளுக்கு உந்துதலாக இருந்தது. ‘Vol de Nuit’, 1931 (தமிழில்: ‘விடியலைத் தேடிய விமானம்’) அதற்கு ஓர் எடுத்துக்காட்டு. அதுமட்டுமன்றி, அவர் தத்துவச் சிந்தனைக்கும் வித்திட்டது. இங்கு மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் ‘Le Petit Prince’, 1943 (‘சின்னஞ்சிறு இளவரசன்’) ’வாழ்க்கையில் முக்கியமானதெல்லாம் கண்ணுக்குப் புலப்படுவதில்லை, மனதுக்கு மட்டும்தான் புலப்படும்’ என்ற உண்மையை நிலைநாட்டுகிறது. அத்துடன், தனிமை, சோகம், நட்பு, காதல் போன்ற மனித உணர்வுகள் பற்றியெல்லாம் ஆழ்ந்து சிந்திக்க வைக்கிறது. இந்நாவல் குழந்தைகளுக்காக எழுதப்பட்டதுபோல் தோன்றினாலும் வயது வேறுபாடின்றி அனைவருக்குமான சில அற்புதச் செய்திகளைத் தாங்கி நிற்கிறது