Your cart is empty.
சந்திரா இரவீந்திரன்
பிறப்பு: 1961
வடமராட்சி - பருத்தித்துறையில் மேலைப்புலோலியூர், ஆத்தியடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவரது முழுப் பெயர் சந்திரகுமாரி இரவீந்திரகுமாரன். 1991இல் பிரித்தானியாவிற்கு இடம்பெயர்ந்து தற்போது இலண்டனில் வசித்து வருகிறார். யாழ். பல்தொழில்நுட்பக் கல்லூரியில் மேற்கல்வி கற்று, 1991வரை யாழ். அரச செயலகத்தில் பணியாற்றியவர்.
1981இல் வெளியான ‘ஒரு கல் விக்கிரகமாகிறது’ இவரின் முதல் சிறுகதை. செல்வி சந்திரா தியாகராஜா என்ற பெயரில் இலங்கையின் பத்திரிகைகள், சஞ்சிகைகள் வாயிலாக, சிறுகதை, குறுநாவல் படைப்புகள் மூலம் குறிப்பாக அறியப்பட்டவர்.
1988இல் வடமராட்சியில் இவரது ‘நிழல்கள்’ முதல் சிறுகதைத் தொகுதி பருத்தித்துறை - யதார்த்தா இலக்கிய வட்டத்தினால் வெளியிடப்பட்டது. 2012இல் ‘நிலவுக்குத் தெரியும்’ இரண்டாவது சிறுகதைத் தொகுதி காலச்சுவடு பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டது. திருமணத்தின் பின் ‘சந்திரா இரவீந்திரன்’ என்ற பெயரில் இவரின் படைப்புகள் வெளிவருகின்றன.
இலண்டனில் 2007ஆம் ஆண்டுவரை ஏழு வருடங்கள் ‘அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்’ ஊடகத்தில் குறிப்பிடத்தக்க இலக்கிய நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கிவந்தவர். இலண்டனில் இயங்கும் தமிழர் தொண்டு நிறுவனங்களில் தொண்டாற்றிவருவதுடன் சமூகப் பணிகளிலும் ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது வர்த்தக நிறுவனமொன்றில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.