Your cart is empty.
சரோஜா ராமமூர்த்தி
பிறப்பு: 1992
1922ல் பிறந்த சரோஜா ராமமூர்த்தியின் முதல் சிறுகதை 1939இல் வெளியாயிற்று. அதன்பின் தன் வாழ்நாளில் நூற்றுக்கணக்கான சிறுகதைகளும் எட்டு நாவல்களும் இரண்டு குறுநாவல்களும் எழுதிப் பலரும் படித்து மகிழ்ந்து, மதித்த எழுத்தாளராய் இருந்தார். பல இலக்கிய ஆளுமைகளின் பாராட்டுகளைப் பெற்றார். நாடகத்தனமான திருப்பங்கள் இல்லாமல் உண்மைக்கு ஒத்ததாக எழுதுபவர் என்று க.நா. சுப்ரமணியத்தால் பாராட்டப்பட்டவர். “எழுதி எழுதி, மெருகேறிய கை” என்று கி.வா. ஜகந்நாதன் அவர்களால் பாராட்டப்பட்டவர். “நீரோட்டம் போல் செல்கிற உங்கள் தமிழ் நடை மிக அழகாக இருக்கிறது” என்று மனமாரப் புகழ்ந்தார் மு. வரதராசன் அவர்கள். “சிறப்பான எழுத்து” என்று சாமிநாத சர்மா அவர்கள் பாராட்டிய போது “தங்களைப் போன்ற மூதறிஞர்களின் பாராட்டைத்தான் பெரிதாக மதிக்கிறேன்” என்று நன்றி தெரிவித்தார்.
நாட்டின் சுதந்திரத்துக்குப்பின் மாறிவரும் காலத்தில் குடும்பம் எனும் நிறுவனத்தில் ஏற்படும் உறவுச் சிக்கல்கள், அதில் உழலும் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் இவர்களின் மன உணர்வுகளை நுணுக்கமாகக் கவனித்து எழுதியவர். வாழ்க்கையை அழகானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் மாற்றிக்கொள்ளச் செய்யும் முயற்சிகளில் தடுக்கிவிழுந்தும் எழுந்தும் வாழ்க்கையை நடத்திச்செல்லும் பலரின், முக்கியமாகப் பெண்களின், ஆழ் மன இச்சைகள், உறுத்தல்கள், கோபதாபங்கள், சமரசங்கள் இவை குறித்து மனிதநேயத்துடன் தனக்கே உரிய பாணியில் எழுதிய எழுத்தாளர்களில் மிகவும் முக்கியமானவர்.
காஞ்சி பரமாசார்யாரிடம் ஆழ்ந்த பக்தி கொண்டிருந்த சரோஜா ராமமூர்த்தி ஒரு கால கட்டத்தில் எதோ ஒரு வகையில் விரக்தியடைந்து எழுதுவதை நிறுத்தி, எப்போதுமே அவரை வழிநடத்திய ஆன்மிகத்தில் முழுவதுமாக ஈடுபட்டார். தன் பெண்களும் மகன்களும் தங்கள் வாழ்க்கை குறித்துச் செய்த எல்லாத் தேர்வுகளையும் ஆதரித்து உறுதுணையாக இருந்தார். 1991 ஆகஸ்ட் மாதம் எட்டாம் தேதி, தனது எழுபதாம் வயதில் இரு வாரங்களுக்கு முன்புதான் அடியெடுத்துவைத்திருந்த சரோஜா, இதுவரை பிரியாத தன் அன்புக் கணவர் து. ராமமூர்த்தியைத் தனிமையில் தவிக்கவிட்டுக் காலமானார்.