Your cart is empty.
இளவாலை விஜயேந்திரன்
பிறப்பு: 1961
தியாகராஜா - பரமேஸ்வரி ஆசிரியத் தம்பதிகளின் நான்காவது பிள்ளையாக 1961 ஆவணியில் இலங்கையின் மலையக நகரான நுவரெலியாவிற் பிறந்தவர் விஜயேந்திரன். நானு ஓயா எடின்பர்க் தோட்டப் பாடசாலையிலும் சிறுவிளான் கனகசபை வித்தியாலயத்திலும் ஆரம்பக் கல்வியைப் பெற்றவர். இடைநிலை, உயர்தரக் கல்வியைத் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியிற் கற்றவர் விஜயேந்திரன்.
மகாஜனக் கல்லூரியிற் கற்கும்போதே விஜயேந்திரனின் சிறுகதைகள், கவிதைகள் நாளிதழ்களிலும், சஞ்சிகைகளிலும், வானொலியிலும் வெளிவரத் தொடங்கிவிட்டன. பாடசாலையின் கவிதை, சிறுகதை, தமிழ்த்திறன் போட்டிகளில் முதலிடம் பெற்றார். நாடக ஆர்வத்தால் இவர் எழுதி இயக்கிய நாடகமொன்று பாடசாலையைப் பிரதிநிதித்துவம் செய்து மாவட்டரீதியில் இரண்டாமிடம் பெற்றது. அக்காலத்திலேயே பாடசாலை நண்பர்களுடன் இணைந்து ‘புதுசு’ சஞ்சிகையை ஆரம்பித்தார்.பாடசாலை மாணவர் தலைவராகவும், படைப்பிலக்கிய மன்றத்தின் தலைவராகவும், உயர்தர மாணவர் மன்றத் தலைவராகவும், இல்ல மெய்வல்லுநர் தலைவராகவும் பாடசாலைக் காலத்திற் செயற்பட்டார்.
விளையாட்டில் இருந்த ஈடுபாட்டால் மெய்வல்லுநர், உதைபந்தாட்டம், ஹொக்கி, கிரிக்கெட் முதலான விளையாட்டு
களிற் பாடசாலை அணிகளிற் பங்கெடுத்தவர் விஜயேந்திரன்.
இலங்கை விவசாயக் கல்லூரிக்குத் தேர்வாகி உயர்கல்வியை அங்கு நிறைவுசெய்தபின், வட யெமன் நாட்டிற் சில ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் யாழ்ப்பாணம் ‘ஈழமுரசு’ நாளிதழில் நெருக்கடிமிக்க காலப்பகுதியான 1986-1987இல் உதவி ஆசிரியராக இருந்தார்.
1987இற் புலம்பெயர்ந்த விஜயேந்திரன் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் வசித்துவருகிறார். இலக்கியம், தமிழ்க் கல்வி சார்ந்து இங்கு தொடர்ச்சியாகத் துணைவியாரோடும் நண்பர்களோடும் இணைந்து இயங்கி வருகிறார். தாயகம் சார்ந்த அபிவிருத்தி, இயற்கை பேணல் இவரது ஆர்வங்கள். வாழ்க்கைத் துணை ரேவதி, மகன்கள் அபிமன்யு, அபரன்.
சிறுகதைகளையும் நாடகங்களையும் எழுதியிருந்தாலும் கவிதைகளாலேயே பெரிதும் அறியப்பட்ட இவரது கவிதைகள் பல, பிறமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதோடு, வெவ்வேறு தொகுப்புகளிலும் இடம்பெற்றுள்ளன
‘புதுசு’ (இலங்கை, 1980-1987), ‘சுவடுகள்’ (நோர்வே, 1988-1998) சஞ்சிகைகளின் ஆசிரியர்களில் ஒருவர். இவரை ஆசிரியராய்க் கொண்டு கனடாவில் வெளிவந்த ‘முற்றம்’ மாத இதழ் நடைமுறைக் காரணங்களாற் சில இதழ்களோடு நின்றுபோயிற்று.
கவிதைத்தொகுதி: ‘நிறமற்றுப்போன கனவுகள்’ (முதற்பதிப்பு: தேசிய கலை இலக்கியப் பேரவை, இலங்கை + சவுத் விஷன் சென்னை, பங்குனி 1999. இரண்டாம் பதிப்பு: ‘காலம்’ வெளியீடு, கனடா, 2001)