Your cart is empty.
ந. பிச்சமூர்த்தி
பிறப்பு: 1900 - 1976
கும்பகோணத்தில் பிறந்த ந. பிச்சமூர்த்தியின் இயற்பெயர் வேங்கடேச மகாலிங்கம். பள்ளிக் கல்வியையும் கல்லூரிப் படிப்பையும் பிறந்த ஊரிலேயே பயின்றார். சென்னையில் சட்டக் கல்வி கற்றார். பதின்மூன்று ஆண்டுக் காலம் (1925 - -38) காலம் வழக்குரைஞராகவும் இருபது ஆண்டுகள் (1939 - 1959) இந்து சமய அறநிலையத் துறை அதிகாரியாகவும் பணியாற்றினார். இடைக் காலத்திலும் பின்னரும் பத்திரிகையாளராகவும் பணிபுரிந்தார்.
மகாகவி பாரதியின் தாக்கத்தால் இலக்கியத் துறைக்கு ஈர்க்கப்பட்டார். சிறுகதைகளும் கவிதைகளும் எழுதத் தொடங்கினார். கு.ப. ராஜகோபாலனின் தோழமை இலக்கியத்தில் தீவிரமாகச் செயல்படத் துணைபுரிந்தது. இருவரும் இலக்கிய இரட்டையர் என்று அழைக்கப்படும் அளவில் புத்திலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டனர். மறுமலர்ச்சி இதழான மணிக்கொடியின் அடையாள ஆளுமைகளில் ஒருவராக அறியப்பட்டார்.
சிறுகதை, நாடகம், கட்டுரை என இலக்கியத்தின் வெவ்வேறு துறைகளில் செயல்பட்டிருந்தாலும் கவிதைத் துறையில் அவரது பங்களிப்பே முதன்மையானதாகக் கருதப்படுகிறது. தமிழ்ப் புதுக்கவிதையின் முன்னவர் என்று மதிக்கப்படுகிறார். ‘காட்டு வாத்து’, ‘வழித்துணை’, ‘ந. பிச்சமூர்த்தி கவிதைகள்’ ஆகியன அவரது கவிதை நூல்கள்.
ந. பிச்சமூர்த்தி தமது எழுபத்தாறாம் வயதில் சென்னையில் காலமானார்.