கன்னட இலக்கிய உலகம் மெதுவாக மறந்து கொண்டிருக்கும் பெயர்களில் ஒன்று பி. சி. தேசாய். தன் வீட்டில் அங்கங்கே சிதறிக் கிடந்த புத்தகங்கள், சுவரில் தொங்கிக்கொண்டிருந்த சார்த்தரின் தூசு படிந்த படம், தன் ஓட்டல் அறையில் காலி மதுப் புட்டிகள் இவற்றைவிட்டு இறந்துபோன பாபுசாஹேப சந்தூராவ் தேசாய் (B. C. Desai ) பிறந்தது 1941இல் பெல்காம் மாவட்ட ராமதுர்க்கத்தின் சாலஹள்ளியில். இனாம்தார் வமிசத்தைச் சேர்ந்த தேசாயின் காலம் ஜமீன்தார்கள் அதிகாரம் இழந்து விட்டி ருந்தார்கள். தன் உதாரகுணத்தால் தேசாய் தன் சொத்தைக் காப்பாற்ற முடிய வில்லை. கோலாப் பூரில் எம். ஏ. (ஆங்கிலம்) படித்த தேசாய்க்கு மராட்டிய இலக்கியத்திலும் நல்ல பரிச்சயம். நண்பர்களிடம் தன் தனிப் பட்ட பார்வையின் அடிப்படையில் இலக்கிய விமர்சனம், தத்துவ விசாரம் செய்த தேசாய் ஒரு நாளும் மேடை யேறியதில்லை. தான் எழுதியவற்றைப் பிரசுரிப் பதில் அவர் ஆர்வம் காட்டவில்லை. தேசாய் எழுதியவற்றில் அவருடைய நண்பர் பத்மராஜ் தண்டாவதி பிரதியெடுத்து அனுப்பியவையே பிரசுரமாகியுள்ளன. நண்பர்களின் கடிதங்களுக் குக்கூடப் பதில் எழுதாத தனிமை வாழ்க்கை அவருடையது. 1990ஆம் ஆண்டு இறந்த பி. சி. தேசாய் எழுதியவற்றில் நூல் வடிவில் கிடைப் பவை சாவும் மற்ற கதைகளும் (1983) என்ற சிறுகதைத் தொகுதியும் ஒரு கவிதைத் தொகுப் பும் மட்டுமே.
காமமும் மரணமும் தேசாயின் கதைகளில் நிரந்தரம். ஆனால் எளிய பருண்மையான விளக்கங்களுக்கு அவை சிக்குவதில்லை. காமம், மரணம் இவற்றின் விதவிதமான சேர்க்கைகளை எதிர்கொள்ளும்போது ஏற்படும் திகில், தனிமை, நரக அனுபவம் இவையே தேசாயின் கதையா டல் மையங்கள். இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள சாவு சிறுகதை வித்தியாசமான வாசிப்பு அனுபவம் தரும்.