எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். நவீன குஜராத்தின் அறிவுசார் வரலாற்றிலும் பண்பாட்டு வரலாற்றிலும், காந்தி வளர்த்தெடுத்த அறிவுசார் பாரம்பரியத்திலும் முக்கிய ஆராய்ச்சிகளைச் செய்துள்ளவர்.
திரிதிப் சுஹ்ருத் மூன்று மொழிகளில் 41 நூல்களை வெளியிட்டுள்ளார். அவரது சமீபத்திய படைப்புகளில், காந்தியின் ‘ஹிந்த் ஸ்வராஜ்’ (ஆங்கிலம், குஜராத்தி ஆகிய இரு மொழிகளிலும்) ஆய்வுப் பதிப்புகள், மனு காந்தியின் நாட்குறிப்பைப் பதிப்பித்து மொழிபெயர்க்கும் இரண்டு தொகுதிகள்கொண்ட திட்டம், புகழ்பெற்ற குஜராத்தி நாவலான ‘சரஸ்வதிசந்திரா’வை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தது ஆகியவை அடங்கும். தற்போது, சம்பாரணின் அவுரி விவசாயிகளின் சாட்சியங்களை ஒன்பது தொகுதிகளாக வெளியிடும் ‘தம்ப் பிரின்டட்’ (Thumb Printed) எனனும் ஆய்வுத் திட்டத்தை மேற்கொண்டுள்ளார். இதுவரை மூன்று தொகுதிகள் வெளியாகியுள்ளன.
சாகித்திய அகாதெமி விருது (குஜராத்தி), முதல் நிரஞ்சன் பகத் நினைவு விருது ஆகியவற்றைப் பெற்றவர் திரிதிப் சுஹ்ருத். அகமதாபாத்தில் உள்ள CEPT பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகப் பணியாற்றுகிறார். அகமதாபாத்தில் உள்ள லால்பாய் தல்பத்பாய் இந்தியவியல் நிறுவனத்தின் இயக்குநராகவும், MICAஇன் நிர்வாகக் குழுவின் தலைவராகவும் பணியாற்றுகிறார்.