Your cart is empty.
வில்லியம் எஸ். பர்ரோஸ்
பிறப்பு: 1914-1997
போதை மருந்துகள், கடும் பித்துநிலை ஆகியவற்றை மையமாகக் கொண்ட தன்னுடைய படைப்புகளுக்காகப் புகழ்பெற்ற வில்லியம் ஸிவாட் பர்ரோஸ் 1914ஆம் வருடம் பிறந்தார். அமெரிக்க எழுத்தாளர். பதினெட்டு நாவல்கள், ஆறு சிறுகதைத் தொகுப்புகள், நான்கு அல்புனைவுத் தொகுதிகள், ஐந்து நேர்காணல் தொகுப்புகள் ஆகியவற்றைக் கொடுத்திருக்கும் வில்லியம் பர்ரோஸ் அமெரிக்க - கீழைத்தேய ஆன்மீகம், பாலியல் விடுதலை, போதையினுள் விடுதலையைத் தேடல், இயல்பல்லாத சிருஷ்டிகளின் வழியே இயல்பு எனப்படுவதைப் பகடி செய்தல் உள்ளிட்ட இணைக் கலாச்சாரக் கூறுகளை முன்னிறுத்தும் பீட் தலைமுறை எழுத்துக்களின் முன்னோடிகளில் ஒருவர். “மேதமையால் ஆட்கொள்ளப் பட்ட ஒரே அமெரிக்க எழுத்தாளன்” என்று அவரைப் புகழ்கிறார் நார்மன் மெய்லர். எழுத்தாற்றலுக்கு அப்பால் பர்ரோஸ் ஒரு நல்ல பண்பியல் ஓவியரும்கூட. தெளிப்பான்களால் வெள்ளைத் திரையில் வண்ணங்களைப் பீய்ச்சி வரையும் ஓவியப் பாணியை வளர்த்தெடுத்தார். நியூயார்க், டோனி ஷஃவ்ராஸி அரங்கில் ஒரு ஓவியக் கண்காட்சியையும் நடத்தியிருக்கிறார். பர்ரோஸின் நாவல்களில் Naked Lunch, Queer, Decoder ஆகியவை திரைவடிவம் பெற்றிருக்கின்றன. பர்ரோஸ் குறித்த ஆவணப்படங்களும் இணையத்தில் கிடைக்கின்றன. இதுபோகச் சில திரைப்படங்களிலும், இசைத் தொகுப்புகளிலும் பர்ரோஸ் நடித்திருக்கிறார். 1997இல் 83வது வயதில் இறந்தார்.
