பேபி ஹால்தார் ஜம்மு காஷ்மீரில் ஏதோ ஓர் இடத்தில் ஏழைக் குடும்பமொன்றில் பிறந்தவள் பேபி ஹால்தார். தந்தை ராணுவ வேலைக்குச் சென்றதும் தாயின் அரவணைப்பில் வளர்ந்து ஏழாவது வகுப்புவரை படித்தாள். சிறுவயதிலேயே திருமணமாகிவிட்டது. சில வீடுகளில் வேலை பார்த்து தன் குடும்பத்தை சிரமத்துடன் ஓட்டி வந்தாள். பிரபல ஹிந்தி எழுத்தாளர் பிரபோத் குமாரின் வீட்டில் வேலைக்குப் போனதும் அவள் தலைவிதி மாறியது. தமது நூல்நிலையத்தில் ஏதோ ஒரு புத்தகத்தை ஆர்வமுடன் பேபி படித்துக் கொண்டிருப்பதைக் கண்ட பிரபோத் குமார், எழுத்தாளர்களுக்கே உரிய ஆர்வத்தில் அவளுடைய கடந்த கால வாழ்க்கையை எழுதும்படிக் கூறினார். தட்டுத் தடுமாறி வங்காளியில் எழுதத் தொடங்கிய பேபி விரைவிலேயே தன் வாழ்க்கையை சிறப்பாக எழுதிமுடித்தாள். பிரபோத் குமார் அதை ஹிந்தியில் ‘ஆலோ ஆந்தாரி’ என்ற பெயரில் மொழிபெயர்த்து வெளியிட்டதும் பேபியின் பெயர் இலக்கிய உலகில் பிரபலமாயிற்று. இந்தப் புத்தகம் இந்திய மொழிகள் பலவற்றிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது. இப்போது ‘விடியலை நோக்கி’ என்ற பெயரில் தமிழில் வெளிவருகிறது.