Your cart is empty.
பானு முஷ்தாக்
பிறப்பு: 1948
கன்னட எழுத்தாளரான பானு முஷ்தாக் முன்னோடி இந்திய எழுத்தாளர்களில் ஒருவர். வழக்குரைஞர். சமூகச் செயல்பாட்டாளர்.
கர்நாடக மாநிலம் ஹாசனில் பிறந்த பானு முஷ்தாக் முற்போக்குச் சிந்தனை உடைய சூழ்நிலையில் வளர்க்கப்பட்டவர். கன்னட மொழியின் மீது அவருக்கு ஆழமான ஈடுபாடு உண்டு. ஒரு வழக்குரைஞராகப் பெண்ணுரிமைக்காகவும், சமூக நீதிக்காகவும் பல்லாண்டு காலமாகப் போராடிக்கொண்டிருக்கிறார். இதனை விரும்பாத பழமைவாதிகள் 2000ஆவது ஆண்டு அவரையும் அவர் குடும்பத்தாரையும் சமூக விலக்கம் செய்துவைத்திருந்தார்கள். சமூகப் போராட்டங்களுக்காக இலக்கியத்தைக் கருவியாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கருதிய ‘பண்டாய சாகித்ய’ (கலக இலக்கியம்) இயக்கத்தின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவர் பானு.
ஆணாதிக்கம் நிறைந்த முஸ்லிம் சமுதாயத்தில் பெண்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை நேர்மையோடும் துணிச்சலோடும் பதிவு செய்திருப்பதற்காக பானு முஷ்தாக்கின் எழுத்துக்கள் கொண்டாடப்படுகின்றன.
இதுவரை ஆறு சிறுகதைத் தொகுப்புகளும், ஒரு நாவலும், ஒரு கவிதைத் தொகுப்பும் வெளியிட்டிருக்கிறார். கர்நாடக சாகித்ய அகாடமி விருது, அத்திமப்பே விருது முதலிய விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
‘கரி நாகரகளு’ (கரு நாகங்கள்) என்ற அவரது சிறுகதை ‘ஹசீனா’ என்ற பெயரில் (2003) கன்னடத்தின் புகழ்பெற்ற இயக்குநர் கிரீஷ் காசரவள்ளியால் படமாக்கபட்டு பல பரிசுகளை வென்றிருக்கிறது.
இவரது தேர்ந்தெடுத்த சிறுகதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலான Heart Lamp என்கிற தொகுப்புக்காக (மொழிபெயர்ப்பு: தீபா பஸ்தி) 2025ஆம் ஆண்டுக்கான புக்கர் பரிசு பெற்றார்.
