Your cart is empty.
சி. இராதாகிருஷ்ணன்
பிறப்பு: 1939
மலையாளத்தில் மிகவும் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான இவர் கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம் திரூர் வட்டத்திலுள்ள சம்ரவட்டத்தில் பிறந்தவர். கொடைக்கானல் வானியற்பியல் ஆராய்ச்சிமையத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். அறிவியலாளராக இருந்து இலக்கியவாதியாக மாறிய இவர் சிறந்த திரைப்படப் படைப்பாளியாகவும் விளங்குகிறார். இவர் எழுதிய பகவத் கீதை உரை மிகவும் புகழ் பெற்றது. தேசிய அச்சு ஊடகங்களில் உயர்ந்த பதவிகளை வகித்துள்ளார். தற்போது தொண்ணூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த எழுத்தாளர்கள் குழுவான சமஸ்த கேரள சாகித்திய பரிஷத்தின் தலைவராக உள்ளார்.
கேரள மாநிலத்தின் உயர்ந்த அங்கீகாரமான எழுத்தச்சன் விருதையும், ‘தீக்கடல் கடஞ்ஞு திருமதுரம்’ என்ற புதினத்திற்காக, இந்திய மொழிகளில் சிறந்த படைப்பிலக்கியத்திற்காக பாரதிய ஞானபீட அறக்கட்டளை வழங்கும் மூர்த்திதேவி விருதையும் பெற்றுள்ளார்.
மாத்ருபூமி புதினப் போட்டியில் முதல் பரிசு (1960), கேரள சாகித்திய அகாதெமி விருது (1962), அபுதாபி சக்தி விருது (1988), நடுவண் அரசின் சாகித்திய அகாதெமி விருது (1989), வயலார் விருது (1990), பண்டிட் கறுப்பன் விருது, மகாகவி ஜி விருது, மூலூர் விருது, அச்சுதமேனோன் விருது, டாக்டர் சி.பி. மேனோன் விருது, ஒளப்ப மண்ணா விருது, தேவீபிரசாதம் விருது, லலிதாம்பிகா விருது, முட்டத்து வர்க்கி விருது உள்ளிட்ட சுமார் நூறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
மொழியின் எளிமையும் ஆழமும் இவர் படைப்பழகின் சிறப்புகள். இவர்பற்றி மேலும் அறிய: http://c-radhakrishnan.info
