யுத்த காலத்தின் கடைசி இரண்டு ஆண்டுகளான 2007இலிருந்து 2009 வரை இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் செய்தி தொடர்பாளராகப் பணியாற்றியவர் கார்டன் வைஸ். யுத்தத்தின்போது ஏற்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் குற்றசாட்டுகளுக்கான ஆதாரங்களை செயற்கைக்கோள் புகைப்படங்கள் வாயிலாகவும் இதர வழிமுறைகள் வாயிலாகவும் திரட்டிய நான்கு முக்கிய நபர்களில் ஒருவராகவும் வைஸ் இருந்தார். சாதாரண மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டதை உலகின் முன் அம்பலபடுத்திய பின், வைஸ் இலங்கை பத்திரிகைகளாலும் உயர் அரசாங்கப் பிரதிநிதிகளாலும் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாக்கப்பட்டார். அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. சிட்னி பல்கலைக்கழகத்தின் அமைதி மற்றும் முரண்பாட்டு ஆய்வு மையத்தின் பகுதி நேர அறிவுரைஞராக இருக்கும் வைஸ், தற்போது ஆஸ்திரேலிய பாதுகாப்புத் துறையில் பணிபுரிகிறார். வைஸ் மெல்போர்னில் உள்ள டீக்கின் பல்கலைகழகத்தில் சர்வதேச உறவுகள் பிரிவில் (பயங்கரவாதம் மற்றும் மானுட சட்டங்களில் சிறப்பு தேர்ச்சியுடன்) எம்.ஏ. பட்டம் பெற்றவர். போஸ்னியா, கொசோவோ, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், டார்பூர், காங்கோ, வடக்கு உகாண்டா, காசா, ஹைடி போன்ற உள்நாட்டுப் போராட்டங்கள் மற்றும் இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பல இடங்களில் வைஸ் பணி புரிந்திருக்கிறார். ரேடியோ பிரான்ஸ் சர்வதேசம், ஏபிசி, ரேடியோ ஆஸ்திரேலியா, தி ஆஸ்திரேலியன் மற்றும் சலோன்.காம் போன்ற பல இடங்களில் பத்திரிகையாளராகப் பணிபுரிந்திருக்கிறார். அதன்பின் ஐரோப்பாவில் பாதுகாப்பு மற்றும் உடன்பாடுக்கான அமைப்பில் பணியாற்றினார். பிறகு ஐக்கிய நாடுகள் சபையில் சுமார் பன்னிரண்டு வருடங்களுக்கு மேலாக பணியாற்றியிருக்கிறார்.