ஹுவான் மனுவேல் மார்க்கோஸ் (பி. 1950)
ஹுவான் மனுவேல் மார்க்கோஸ் பராகுவேய ஆசிரியரொருவருக்கும் ஸ்பானிய ரிபப்ளிகன் அகதியொருவருக்கும் மகனாக அசுன்சியோனில் பிறந்தார். மாட்ரிடின் காம்ப்ளுடென்சே பல்கலைக்கழகத்தில் தத்துவத்தில் முனைவர் பட்டமும், பென்சில்வேனியாவின் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் இலக்கியத்தில் முனைவர் பட்டமும் பெற்று, மேற்படிப்பு ஆய்வுகளை யேல், ஹார்வர்ட் பல்கலைக்கழகங்களில் மேற்கொண்டார். லாஸ் ஏஞ்சலீஸில் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிவிட்டு, பராகுவேயின் மிகப்பெரிய தனியார் மேற்கல்வி நிறுவனமான நோர்த்தே பல்கலைக்கழகத்தின் தலைவராக 1991இல் பொறுப்பேற்றார். பராகுவேய செனேட்டில் கல்வித்துறை கமிட்டி தலைவராகவும் பல ஆண்டுகள் பணியாற்றினார். அமெரிக்கா, ஐரோப்பா, ஏசியாவின் பல நாடுகளில் நூற்றுக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகள், புத்தகங்கள் பதிப்பித்திருக்கிறார், உரையாற்றியிருக்கிறார். பல கௌரவ முனைவர் பட்டங்கள், பேராசிரியர் பதவிகள், விருதுகள் பெற்றிருக்கிறார். ‘கார்சியா மார்க்கேஸிலிருந்து போஸ்ட்பூம்வரை’ (கட்டுரைகள், 1986), ‘கவிதைகளும் பாடல்களும்’ (கவிதைகள், 1987) உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியிருக்கிறார்.