Your cart is empty.

கே. சந்துரு
பிறப்பு: 1951
ஸ்ரீரங்கத்தில் பிறந்தார். பள்ளி, கல்லூரி படிப்பைச் சென்னையில் தொடர்ந்தார். இடதுசாரி அரசியலால் ஈர்க்கப்பட்டு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்)உறுப்பினரானார். அதன் மாணவரணியில் மாநிலப் பொறுப்பு வகித்ததோடு, அதனுடைய தொழிற்சங்கப் பிரிவிலும் செயலாற்றினார். நெருக்கடி காலகட்டத்தில் உயர் நீதிமன்ற வழக்கறிஞராகப் பதிந்துகொண்டு, தொழிலாளர்களுக்கும் மற்ற பிரிவினருக்கும் பல வழக்குகளை நடத்தினார். தொழிலாளர், குழந்தைகள், பெண்கள், மனித உரிமை பிரச்சினைகளில் அவர் நடத்திய வழக்குகள் பலருடைய கவனத்தை ஈர்த்தன. வழக்கறிஞராக இருந்தபோது சில சட்டநூல்களையும், சட்ட சம்பந்தமான சிறு பதிப்புகளையும் ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதினார். 1993இல் ‘ஆர்டர்... ஆர்டர்...’ என்ற தலைப்பில் சட்ட உலகில் படர்ந்திருந்த பனித்துளிகளை நீக்கும் வண்ணமும் சாதாரண மக்களுக்குப் புரியும் வகையிலும் எழுதிய தொடர் பெரும் வரவேற்பைப் பெற்றது. முப்பதாண்டுக் காலம் வழக்கறிஞராகப் பணியாற்றி, 2006இல் சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகக் குடியரசு தலைவரால் நியமிக்கப்பட்டார். அவரது ஏழாண்டுக் கால நீதிப்பணியில் சுமார் 96 ஆயிரம் வழக்குகளைத் தீர்த்து சாதனை படைத்தார். பெண்ணுரிமை, கருத்துரிமை, தொழிலாளர் உரிமை, பிற மனித உரிமைகள் பற்றிய பிரச்சினைகளில் இவருடைய தீர்ப்புகள் பரவலாகப் பேசப்பட்டன. 2013இல் ஓய்வுபெற்ற இவர் தமிழ் இதழ்களில் தொடர்ந்து சட்ட சம்பந்தமான பிரச்சினைகள் பற்றிக் கட்டுரைகள் எழுதிவருகிறார். பொது மேடைகளிலும் பேசிவருகிறார்.