Your cart is empty.
கரிச்சான்குஞ்சு
பிறப்பு: 1919 - 1992
கரிச்சான்குஞ்சு (பி. 1919 - 1992) கரிச்சான்குஞ்சு என்ற புனைபெயருடைய ஆர். நாராயணசாமி 10.7.1919இல் அன்றைய தஞ்சை மாவட்டம் நன்னிலம் வட்டம் சேதனீபுரத்தில் பிறந்தவர். 1940இல் ஏகாந்தி என்ற புனைபெயரில் எழுதிய முதல் சிறுகதையான ‘மலர்ச்சி’ கலைமகளில் வெளிவந்தது. கு.ப.ராவோடு நெருங்கிய உறவு கொண்டிருந்தவர். அப்போது கரிச்சான் என்ற புனைபெயரில் எழுதிவந்த கு.ப.ரா.மீது கொண்ட அன்பினால் கரிச்சான்குஞ்சு என்ற புனைபெயரில் எழுதலானார். பெங்களூரில் எட்டு வயதுமுதல் பதினைந்து வயதுவரை வடமொழியும் வேதமும் பயின்றார். மதுரை - ராமேஸ்வர தேவஸ்தான பாடசாலையில் பதினேழு வயது முதல் இருபத்திரண்டு வயதுவரை தமிழும் வடமொழியும் கற்றார். சென்னை, மன்னார்குடி, கும்பகோணம் முதலான ஊர்களில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். நூற்று அறுபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் சில குறுநாவல்களையும் எழுதியுள்ளார். எட்டு சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. ‘கு.ப.ரா.’ (1990), ‘பாரதி தேடியதும் கண்டதும்’ (1982) ஆகியவை இவரது கட்டுரை நூல்கள். இவர் எழுதிய ஒரே நாவல் ‘பசித்த மானிடம்’ (1978). நாடகங்களையும் எழுதியுள்ள இவர் சமஸ்கிருதம், ஆங்கிலம், இந்தி மொழிகளிலிருந்து சில முக்கிய நூல்களைத் தமிழாக்கியுள்ளார். ராமாமிருத சாஸ்திரிக்கும் ஈஸ்வரியம்மாளுக்கும் இரண்டாவது மகனாகப் பிறந்த கரிச்சான்குஞ்சுவுக்கு ஒரு அக்கா (ராஜலக்ஷ்மி), இரு தங்கைகள் (ருக்மணி, நாகராஜம்), ஒரு தம்பி (சுந்தர்ராமன்). முதல் மனைவி வாலாம்பாள் இறந்ததும் தற்போது சென்னையில் வசித்துவரும் சாரதாவை 1946இல் மணந்தார். இவருக்கு நான்கு மகள்கள் - லக்ஷ்மி பேபி, பிரபா, விஜயா, சாந்தா.