கிருஷ்ணன் நம்பி (1932-1976)
கிருஷ்ணன் நம்பி, குமரிமாவட்டம் அழகியபாண்டிபுரம் என்னும் கிராமத்தில் 1932இல் பிறந்தார். பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பு நாகர்கோவிலில் தொடர்ந்தது. இவரது முதல் இலக்கியப்பணி வை. கோவிந்தனின் ‘சக்தி’யில் தொடங்கியது. அப்போது கிருஷ்ணன் நம்பிக்கு வயது பதினாறு. 1950லிருந்து ‘கண்ணன்’ என்ற குழந்தைப் பத்திரிகையில் ‘சசிதேவன்’ என்ற பெயரில் குழந்தைப் பாடல்கள் எழுதினார். இவை மிகவும் பேசப்பட்டன.
இவரது முதல் சிறுகதை ‘சுதந்திர தினம்’ 1951 ஆகஸ்ட் மாதம் பிரசுரம் கண்டது. ‘சாந்தி’, ‘சரஸ்வதி’, ‘தாமரை’, ‘கணையாழி’, ‘தீபம்’, ‘சதங்கை’ போன்ற இலக்கியப் பத்திரிகைகளில் இவரது சிறுகதைகள் வெளிவந்தன. மிகவும் குறைவாகவே எழுதிய கிருஷ்ணன் நம்பியின் மொத்த சிறுகதைகள் 25. இவர் நோய்வாய்ப்பட்டு, 1976இல் மறைந்தபோது வயது நாற்பத்து நான்கு.