Your cart is empty.
மோ-யான்
பிறப்பு: 1955
மோ-யான் (பி. 1955) மோ-யான் என்கிற புனைபெயருக்குச் சீன மொழியில் ‘பேசாதே’ என்று பொருள். அவரது இளம்பருவத்தில் சீனாவில் இருந்த அரசியல் புரட்சிச் சூழலில் அவரது அப்பாவும் அம்மாவும் தந்த எச்சரிக்கைகளின் அடிப்படையில் இந்தப் பெயரைச் சூட்டிக்கொண்டார். ஒரு வகையில் அவர் எழுதும் விஷயங்களுக்கும் இந்தப் பெயர் தொடர்புடையதாய் இருக்கிறது. அவரது இயற்பெயர் குவான்-மோ-ய. மோ-யான் ஷான்-தொங் மாநிலத்தின் காவ்-மீ எனும் ஊரில் பிறந்தார். 1966-இல் சீனாவின் ‘பண்பாட்டுப் புரட்சி’ தொடங்கியபோது பள்ளியைவிட்டு, மாடு மேய்க்க வேண்டியிருந்தது. 18 வயதில் பருத்தி ஆலையில் சேர்ந்தார். 1976-இல் ‘பண்பாட்டுப் புரட்சி’ முடிவடைந்தபோது ராணுவத்தில் சேர்ந்தார். ராணுவத்தில் இருந்தபோதே எழுதத் துவங்கினார். 1984-இல் ஒரு எழுத்தாளராக அடையாளம் பெறத் தொடங்கிய காலத்தில் ராணுவக் கலைக் கல்லூரியில் சேர்ந்தார். 1986-இல் ‘சிவப்புச் சோளம்’ (Red Sorghum) நாவல் வெளியாகி தேசிய அளவில் பெயர் வாங்கித் தந்தது. பின்னர் அது திரைப்படமாகி சர்வதேச அளவில் புகழ் பெற்றது. 1991இல் பெய்-சிங் நார்மல் பல்கலைக்கழகத்தில் இலக்கியத்தில் பட்ட மேற் படிப்பை முடித்தார். பல சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதியுள்ளார். ‘சிவப்புச் சோளம்’ தவிர, ‘பூண்டுப் பாடல்கள்’, ‘தளரச் செய்யும் வாழ்வும் சாவும்’, ‘மது தேசம்’, ‘பெரிய மார்புகளும் அகன்ற இடுப்புகளும்’ போன்ற நாவல்கள் முக்கியமானவை. மோ-யான் எழுதிய நூல்கள் பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. மோ-யான் 2012-இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார். இவரது சமீபத்திய நாவல் ‘தவளை’.