பூமணி (பி. 1947)
கோவில்பட்டி வட்டாரம் ஆண்டிபட்டி என்னும் சிறு கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். தந்தை முகம் அறியாமல் தாயின் அரவணைப்பில் வளர்ந்தவர். நான்கு அக்கா, ஒரு அண்ணன். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே தாயையும் இழந்தார். கல்லூரிப் பருவத்திலேயே இலக்கியத் தளத்தில் எட்டுவைத்தவர். பலரையும்போல் கவிதையில் தொடங்கிச் சிறுகதை, நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு, திரைப்படம் எனத் தன் தளத்தை விரித்துக்கொண்டு சிற்றிதழ்ச் சூழலில் வளர்ந்தவர்.
சின்னத்திரைக்காகச் சில கதைகளையும், பேனாமுள் தயாரிப்பு பற்றிய குறும்படத்தையும், தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகத்துக்காக ‘கருவேலம்பூக்கள்’ என்னும் திரைப்படத்தையும் எழுதி இயக்கியுள்ளார். ‘கருவேலம்பூக்கள்’ திரைப்படம் தமிழக அரசின் பரிசைப் பெற்றது; சர்வதேசத் திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டது.
தமிழக அரசின் கூட்டுறவுத் துறையில் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள பூமணி தற்போது கோவில்பட்டியில் மனைவியுடன் வசித்துவருகிறார். இவருக்கு ஒரு மகள், இரு மகன்கள் உள்ளனர்.