Your cart is empty.
ரகுநாதன்
பிறப்பு: 1923 - 2001
ரகுநாதன் (1923-2001) தமிழ்நாட்டின் முக்கியமான இடதுசாரி அறிவாளரான தொ.மு.சி. ரகுநாதன் நெல்லையில் பிறந்து வளர்ந்தவர். நெல்லை இந்துக் கல்லூரியில் இடைநிலைவரை படித்த ரகுநாதன், 1942இல் விடுதலைப் போராட்டத்தில் பங்குகொண்டு சிறைப்பட்டதால் படிப்பு தடைப்பட்டது. தினமணி (1944 - 45), சக்தி (1948 - 52) ஆசிரியர் குழுவிலும், முல்லை (1946 - 47) ஆசிரியராகவும் பணியாற்றியவர். தமிழின் முதல் இடதுசாரி இலக்கிய இதழ் இவர் நடத்திய சாந்தி (1954 - 56). முழுநேர எழுத்தாளராக வாழ்ந்த இவர் சென்னையில் சோவியத் செய்தித் துறையில் ஆசிரியராகப் பணியாற்றி (1967 - 88) ஓய்வு பெற்று, நெல்லைக்கு மீண்டும் குடிபெயர்ந்து அங்கேயே மறைந்தார். சிறுகதை, நாவல், விமரிசனம், (திருச்சிற்றம்பலக் கவிராயர் என்ற புனைபெயரில்) கவிதை, மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் முனைப்பாகச் செயல்பட்ட ரகுநாதன், ஆராய்ச்சித் துறையில் ஆழமாகத் தடம் பதித்தார். புதுமைப்பித்தனின் நண்பராக இருந்து, அவருடைய மறைவுக்குப் பின் அவருடைய எழுத்துகளைத் தொகுத்து வெளியிட்டும், ‘புதுமைப்பித்தன் வரலாறு’ எழுதியும் தமிழ் இலக்கிய உலகத்தில் புதுமைப்பித்தனின் இடத்தை நிலைநாட்டியவர். ‘பஞ்சும் பசியும்’ (1953) தமிழின் முதல் முற்போக்கு நாவல் என்ற பெருமைக்கு உரியது. ‘இலக்கிய விமரிசனம்’ (1948) சிறு நூலாயினும் தமிழ்த் திறனாய்வியலின் முன்னோடியாகும். பாரதியிடம் ஆழ்ந்த பற்று கொண்டிருந்த ரகுநாதன் எழுதிய ஆராய்ச்சி நூல்கள் பாரதியியலில் புதிய பாதையைக் காட்டியவையாகும். ‘சாகித்திய அகாதமி’ (1983) பரிசு பெற்றவர்.