Your cart is empty.
எஸ். தனபால்
பிறப்பு: 1919 - 2000
எஸ். தனபால் (1919 - 2000) சென்னை மயிலாப்பூரில் பிறந்தார். சென்னை அரசு கவின்கலை மற்றும் கைவினைக் கல்லூரியில் வரைகலை மாணவராகச் சேர்ந்தார். பின்னர் அதே கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கிய இவர் பணிக் காலத்தில் முன்மாதிரியான பல்வேறு கலைச் செயல்பாடுகளின் மூலம் மாணவர்களின் ஆர்வத்தை வளர்த்தெடுத்தார். பின்னாளில் சிற்பத் துறைக்குப் பொறுப்பேற்றார். இந்தக் காலகட்டங்களில் இவர் செய்த படைப்புகள் கலைச் சூழலில் பரவலான கவனம் பெற்றதுடன் தில்லியிலுள்ள தேசியக் கலைக் காட்சியகத்திலும் பார்வைக்கு வைக்கத் தேர்வாயின. அதைத் தொடர்ந்து மேற்கு ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட உலக நாடுகளின் கலைக் கண்காட்சிகளிலும் பங்கேற்றார். சென்னை, கும்பகோணம் ஓவியக் கல்லூரிகளின் முதல்வராகப் பதவி வகித்து ஓய்வு பெற்றவர். தேசியக் கலைக் கண்காட்சி, லலித் கலா அகாடமி போன்ற அமைப்புகளின் தேர்வுக் குழு, நடுவர் குழு ஆகியவற்றில் உறுப்பினராகப் பொறுப்பேற்று செயல்பட்டிருக்கிறார். கலைக் கண்காட்சியில் பங்கேற்றதற்கான தேசிய விருது, தமிழ்நாடு லலித் கலா அகாதெமியின் ஃபெல்லோஷிப் விருது, மத்திய கல்வி அமைச்சகப் பண்பாட்டுத் துறையின் ஃபெல்லோஷிப் விருது எனக் கௌரவிக்கப்பட்டிருக்கிறார். சோழமண்டலம் கலைக் கிராமம், மெட்ராஸ் ஆர்ட் மூவ்மெண்ட், தென்னிந்திய ஓவியர் சங்கம் எனத் தீவிரத்துடன் இயங்கியிருக்கிறார். 1961-68 காலகட்டத்தில் தென்னிந்திய ஓவியர் சங்கத்தின் துணைத் தலைவராகவும், 1968இல் அதன் தலைவராகவும் செயல்பட்டிருக்கிறார். ஓவிய ஆசிரியர், நாடகக்காரர், கல்வியாளர், இயற்கை ஆர்வலர் எனப் பல தளங்களில் இயங்கினாலும் தனது கலை வெளிப்பாட்டு ஊடகமாக தனபால் தேர்ந்தெடுத்துக் கொண்டது சிற்பத் துறையைத்தான். இவரது படைப்புகள் தேசிய அளவிலும் உலக அளவிலும் மதிப்புமிக்க இடங்களை அலங்கரிக்கின்றன.