Your cart is empty.
சித்தலிங்கையா
பிறப்பு: 1954
நவீன கன்னட இலக்கியத்தில் தலித் குரலைப் பதிவு செய்த முன்னோடிப் படைப்பாளிகளில் முக்கியமானவர். எழுபதுகளில் உருவான தலித் எழுச்சியில் இவர் ஆற்றிய பங்கு குறிப்பிடத்தக்கது. இவர் இயற்றிய ‘ஹொலெமாதிகர ஹாடு’ என்னும் கவிதைத் தொகுதி ஆயிரக்கணக்கில் விற்பனையாகிக் கர்நாடகத்தின் எல்லாப் பகுதிகளிலும் இவருடைய பெயரும் புகழும் பரவக் காரணமாக இருந்தது. இவருடைய கவிதைகள் மூலைமுடுக்குகளெங்கும் பாடப்பட்டு, கன்னட மண்ணில் தலித் இயக்கம் உருவாக விதையாகவும் உரமாகவும் இருந்தன என்று சொல்லலாம். கர்நாடகத்தில் தலித் சங்கர்ஷ சமிதி என்னும் அமைப்பைக் கட்டியெழுப்பியவர்களில் சித்தலிங்கையாவும் ஒருவர். இவருக்கு முனைவர் பட்டம் கிடைப்பதற்குக் காரணமான நாட்டுப்புறக் கடவுள்கள் பற்றிய ஆய்வேடு இன்றளவும் ஆய்வுலகத்தில் முக்கியமான ஒன்றாகவே கருதப்படுகிறது. பெங்களூர் பல்கலைக்கழகத்தில் கன்னடத்துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். மூன்று கவிதைத் தொகுப்புகளும் மூன்று கன்னட நாடகங்களும் மூன்று கட்டுரைத் தொகுதிகளும் இவருடைய பிற படைப்புகள். கர்நாடகச் சட்ட மேலவை உறுப்பினராக இரண்டு முறை பதவி வகித்துள்ளார். கன்னட வளர்ச்சிக்கழகத்தின் தலைவராகவும் சில ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.