Your cart is empty.
டி.கே. சிதம்பரநாத முதலியார்
பிறப்பு: 1882 - 1954
டி. கே. சிதம்பரநாத முதலியார் (1882 - 1954) ரசிகமணி டி. கே. சி. என்று அறியப்பட்ட டி. கே. சிதம்பரநாத முதலியார் தென்காசியில் பிறந்தார். திருச்சியில் பள்ளிப் படிப்பை முடித்த டி. கே. சி., சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியில் பி.ஏ. படித்தார். சென்னைச் சட்டக் கல்லூரியில் படித்து பி.எல். பட்டம் பெற்றாலும் அவர் வழக்குரைஞராகத் தொழில் புரிந்தது சிறிது காலமே. சென்னைச் சட்டமன்றத்தின் மேலவை உறுப்பினராகவும் (1927-1930) இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையராகவும் (193-0-1935) இருந்தார். 1908இல் திருமணம். மனைவி: பிச்சம்மாள். ஒரே மகன் தீத்தாரப்பன் என்ற தீபன் (1909 - 1941) அகால மரணமடைந்தார். புலமையைவிட ரசனையை வலியுறுத்திய டி. கே. சி., வட்டத்தொட்டி என்ற நண்பர் குழாம் வழியாக அக்காலத் தமிழ் இலக்கிய உலகில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தினார். கம்பராமாயணம், முத்தொள்ளாயிரம், தனிப்பாடல்கள் ஆகியவை கவனம் பெற்றதில் இவர் பங்கு பெரிது. இடைச்செருகல் என்று பல பாடல்களை நீக்கியும், உண்மையான வடிவம் என்று பல பாடல்களைத் திருத்தியும் இவர் வெளியிட்ட கம்பராமாயணப் பதிப்புகள் விவாதத்திற்குள்ளாயின. கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையின் பாடல்களை இலக்கிய உலகத்தில் முன்னிறுத்தி, ‘மலரும் மாலையும்’ தொகுப்பு வெளிவரக் காரணமாக இருந்தவரும் இவரே. தமிழ்வழிக் கல்வியை வற்புறுத்திய டி. கே. சி., தமிழ் இசை இயக்கத்திலும் முன்னின்றார். கட்டுரைகளைவிட நண்பர்களுக்கு எழுதிய ஆயிரக்கணக்கான கடிதங்கள்வழித் தம் பார்வையை முன்வைத்தவர் டி. கே. சி. இவருடைய கடிதங்கள் பல நூல்களாக வெளிவந்துள்ளன. டி.கே.சி. பதிப்பித்த நூல்கள்: ‘கம்பர் தரும் ராமாயணம்’ (மூன்று பாகம்); ‘முத்தொள்ளாயிரம்’. எழுதிய நூல்கள்: ‘இதய ஒலி’ (1941), ‘கம்பர் யார்?’ (1941), ‘அற்புத ரஸம்’ (1944).