Your cart is empty.
3 Feb 2024
கோஸ்வாமி துளசிதாசர், தன் குருவான நரஹரிதாசரடமிருந்து இந்த இதிகாசத்தைத் தெரிந்து
கொண்டபொழுது, நிச்சயம் இது உலக பக்தி இலக்கியத்தில் மிகப் பெரும் சக்தியாகப்
போகிறது என நினைத்திருப்பாரா என்பது சந்தேகமே. அதற்கு முன் சிவனிடமிருந்து
பார்வதிக்கு சொன்னதாக நம்பிக்கை.
துளசிதாசர் சமஸ்கிருத அறிஞர் என்ற போதிலும் அவாதி என்ற மக்கள் மொழியில் ராமனின்
கதையை எழுதினார்.அயோத்தியில் எழுத ஆரம்பிக்கப்பட்ட நூல்.அதன் பயனாக, ராமன்
அனைவரது இல்லங்களிலும் மக்களோடு இணைந்து வாழலானார். முழுக்க பக்தியோடு
மட்டுமே மக்கள் அவரை ஏற்றுக் கொண்டனர்.
1631இல் ராமநவமியன்று ஆரம்பிக்கப்பட்ட ராமன் என்ற இதிகாச நம்பிக்கை (அதாவது
ராமசரிதமானஸ் ஆரம்பிக்கப்பட்ட உத்தேச தினம்),2024 ஜனவரி 22 ல் மிகப் பெரிய
பரிமாணம் பெறுகிறது.
தொடர்ச்சியாக, அரசியல் தவிர்த்த ராமன் பற்றிய ஒரு முக்கிய புத்தகத்தை சமீபத்தில்
படித்தேன்.
புத்தகத்தின் பெயர்: ராமன் வனவாசம் போன வழி ஒரு தேடல்.
எழுதியவர்: வங்க மொழி எழுத்தாளர் சீர்ஷேந்து முகோபாத்யாய்
ஆங்கிலத்தில்: ப்ரீத்தி
தமிழில்ள் திஅ. ஶ்ரீனிவாசன்
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
தமிழில் எழுதியவரின் தாய் மொழி துளு என்பது குறிப்பிடத்தக்கது.
ராமன் தன் தந்தை கட்டளைப்படி வனவாசம் 14 ஆண்டுகள் செல்கிறார். அவர் சென்ற
பாதையைத் தொடர்ந்து சீர்ஷேந்து செல்கிறார். அதன் அடிப்படையில் ஒரு சிறிய புத்தகம்
நமக்கு அவரால் கிடைக்கிறது.மிகவும் சுவாரஸ்யமான நடை. அன்றைய இடத்தை இன்று
காண முற்படும் பொழுது ஏற்படும் பயணக் கஷ்டங்கள். உணவுப் பிரச்னைகள்.மொழிப்
பிரச்சினைகள். இடங்கள் பற்றிய குழப்பங்கள். அவருடன் இணையும் சில தோழமைகள் . பல
இடங்களில் நகைச்சுவை என அவரின் தேடல் பயணிக்கிறது.
முதலில் , ராமன் தமஸா நதிக் கரையில் தங்குகிறான். அயோத்தி மக்களே உடன் வந்து
விட்டனர்.எல்லோரும் இங்கிருந்தால், இதுவே அயோத்தியாகி விடும்.தந்தை சொல் மீறல்
ஆகிவிடும். அனைவரும், இரவு உறங்கியதும் சுமத்திரனிடம் கூறி தேரை வேறு பாதையில்
திருப்பச் சொல்லி, தமஸா, வேதசுருதி,கோமதி மற்றும் ஸ்யந்திகா என நான்கு நதிகளைக்
கடந்து விடுகிறான்.
பின்னர், நிஷாத அரசன் குகன் ஆட்சி செய்யும் சிருங்கிபேரபரத்திற்கு வருகிறான். இந்திரா
காந்தி அங்கு வந்திருந்தார் என்ற இன்றைய செய்தியையும் பதிவு செய்கிறார்.அதன் பின்னர்,
அங்கு அகழாய்வு நடந்தது.
பின்னர், பிரயாகை வந்து, இறுதியில் சித்திரக்கூடம் வந்தடைகிறார் ராமர். சித்திரக்கூடத்தில்
பன்னிரெண்டு ஆண்டுகள் அல்லது பதினான்கு ஆண்டுகள் வாழ்ந்தனர் என்பது குறித்து
விவாதங்கள் உண்டு எனத் தெரிய வருகிறது. வெப்ப பூமியில் மிகவும் கடினமாக உழைத்து
புத்தகத்தை எழுதியுள்ளார். இவர் சென்ற காலத்தில் அரசு தங்கும் விடுதிகள் ஸ்ட்ரைக். அது
பற்றிய ஒரு தொழிற்சங்க சொற்பொழிவு உண்டு.
பரதனிடம் ராமன் கேட்கும் கேள்விகளை ஒரு நியாயமான அரசு செயல் படவேண்டியதற்கான
ஆலோசனை மற்றும் வழிகாட்டல் என்று கூட சொல்லலாம். அரசர்கள் வெறும் நகை
அலங்காரங்களோடு இருந்தனர் என்பதை விட விவசாயம் செய்தனர் எனக் குறிப்பிடும்
ஆசிரியர் பரதன் அண்ணனிடம் செருப்புகளைப் பற்றிய வித்யாசமான சிந்தனையை முன்
வைக்கிறார்.பயணம் , வரலாறு, நம்பிக்கை, கலாச்சாரம், பல்வேறு கால ஒப்பீட்டுச் சூழல்கள்,
அதன் தாத்பர்யங்கள் என நூல் பயணிக்கிறது.
முற்றிலும் பக்தி இலக்கியம் என்பதை விட உலகின் மிக முக்கியமான கலாசாரங்களைப்
பேணும் நூல் எனலாம். ஏன்? ரிக் வேதத்தில் ஒரு மரபு, பாலி மொழி ஜாதகக் கதைகளில்
வேறொன்று,ஜைன ராமாயணம் என உலகின் பல்வேறு மொழிகளில் அவரவர்களின்
கலாசார சூழலுக்கேற்றபடி ராமன் கொண்டாடப்படுகிறாரென்றால், அது உலக அளவில்
முக்கியம்தானே.
ராமன் அனைவரையும் நேசிக்கும் ஆன்ம பலம் உள்ள ஆத்மா, நாம் அறிந்த ஒன்று!
தந்தைக்காக அவர் செய்த வனவாசம் பல்வேறு நியாய தர்மங்களைக் கொண்ட மிக நுண்ணிய
நிகழ்வுகளைக் கொண்டது!
ராமாயணம் ஒரு பக்கம் அரசியல்! இன்னொரு பக்கம் பக்தி! துளசிதாசர் பக்தியோடு எழுதிய
ராமன் நமக்கானவரே!
குகன், அனுமன், ஜடாயு, அகலிகை,நதிக்கரைகள், ஓரங்களில் உள்ள தாவரங்கள் என
அனைவருமேயே அனைத்தையுமே நேசித்தவர் ராமன் என்பது நமக்கு என்றைக்குமான
பாடம்!