Your cart is empty.
6 Feb 2024
ஒன்பது கதைகள் அடங்கிய இத்தொகுப்பை வாசிக்கும்போது முதலில் தோன்றியது,
தயக்கமே இல்லாத ஒரு சரளமான எழுத்து நடை பொன் முகலிக்கு வாய்த்திருக்கிறது
என்பதுதான்.
இத்தொகுப்பில் பெரும்பாலான கதைகளின் கதைக் களங்கள் வாழ்வியல் முரண்களையும்,
மனித மனங்களில் அடியாழச் சிக்கல்களையும், உளவியல் பிரச்னைகளையும் பற்றிப்
பேசுகின்றன. ஆனால் அவை ஒரேவிதமான தன்மையில் இல்லாமல் வேறு வேறு தன்மையில்
அமைந்திருப்பதால் ஒவ்வொரு கதையும் வேறு வேறு வாசிப்பு அனுபவத்தை தருகின்றன.
மகனுக்கு அம்மாமேல் இருக்கும் பிரியத்திலான அதீத தொடு உணர்வு எத்தகைய சிடுக்கான
வாழ்வினை கொடுக்கிறது என்பதைச் சொல்கிறது அலர் என்னும் சிறுகதை. பத்திரிக்கையில்
வேலை செய்யும் பெண்ணின் பார்வையில் தொடங்கும் கதை, அவளின் ஆண் நண்பன்
வசுநந்தனின் கதையாகவும் விரிகிறது. நான் லினியரில் சொல்லப்பட்ட அழுத்தமான கதை
இது. ஆணின் மன உலகத்தையும், அவன் ஓடி ஒளிய காரணமான குழப்பங்களையும் அழகாக
சொல்கிறார் பொன் முகலி. இன்னொரு பக்கம் லெஸ்பியன் உறவை புரிந்து கொள்ள
முடியாத சமூகத்தால் விளையும் சோக முடிவுமாய் இக்கதை ஆழமான வாழ்வினை
அலசுகிறது.
ஓவியம் வரையும் பெண்ணைப் பற்றி மகளின் சித்திரங்கள்தான் “பிறகு” என்ற சிறுகதை.
கலைப்பித்தும் அது சார்ந்த வாழ்வியலில் இருக்கும் அம்மாவைப் பற்றியும், சாதாரண ஒரு
குடும்ப வாழ்வினை விரும்பும் மகளினைப் பற்றியுமான கதை இது. கலைஞர்களாக
இருப்பவர்களின் தீவிரமான மனம் சாதாரண வாழ்வினை விரும்புபவர்களுக்கு மிக
அச்சுறுத்தலாக இருக்கும் என்பது இக்கதையினை வாசிக்கும்போது தெளிவாகிறது.
பொன்முகலி சிறுகதைகளின் இன்னொரு பலம் உரையாடல். அவை இயல்பாகவும் அதே
சமயம் ஆழமாகவும் நடைபெறுவது வாசிக்க சுவாரஸ்யத்தை அளிக்கிறது. “பிறகு” கதையில்
அது சிறப்பாகவே வெளிப்பட்டிருக்கிறது.
“கடவுளுக்கு பின்” என்ற புத்தக தலைப்புக் கதை. முழுக்க மேஜிக்கல் பேண்டசி வகையில்
சொல்லப்பட்ட இத்தொகுப்பிலேயே தனித்த கதை என்று சொல்லலாம்.இக்கதை நிச்சயம்
வித்தியாசமான வாசிப்பு அனுபவத்தை வழங்கும்.
கலவரங்கள் வாழ்வினையும் மனித மனங்களையும் துண்டாக்குவதைப் பற்றி பேசும் “வடு”
என்ற கதை இத்தொகுப்பில் எனக்கு மிகப்பிடித்த மற்றுமொரு கதை. மனம் சாராமல் சமூக
அவலமாக விரியும் இக்கதையின் நிகழ்வுகளும் ஆழமான மன அழுத்தத்திற்குள் தள்ளும்
பிரச்னையைப் பற்றியே பேசுகிறது.
இத்தொகுப்பில் ஒவ்வொரு கதையையும் இப்படி விளக்கமாகச் சொல்லிக்கொண்டே
போகலாம். கவிஞர் என்பதால் நிறைய விவரணைகளும் படிமங்களும் இருக்கும் என்று
நினைத்தேன். ஆனால் அப்படி அல்லாமல் எளிமையான சொல்லல் முறையில் அந்தந்தக்
கதை கோரும் உணர்வு நிலையிலேயே பயணப்பட்டிருக்கிறார் பொன் முகலி. வாசிக்க எந்த
சுணக்கத்தையும் கொடுக்காத மொழி நடையாக இருந்தாலும் அதன் கருப்பொருள் ஆழமான
மன உணர்வுகளைப் பேசுவதால் இவை சிறந்த கதைகளாக மாறுகின்றன. வாசிக்க எளிதாகத்
தானே இருக்கிறது என்று யோசிக்கும் போதே மனப்பாரம் கூடிக்கொண்டே போகிறது..
மேல் பூச்சு எதுவும் இல்லாமல் மனதில் இயல்பில் எழுதப்பட்டிருக்கும் இக்கதைகளை போகிற
போக்கில் வாசிக்க முடியாது. வாசிப்பதற்கும் கதாபாத்திரங்களின் மனநிலைகளை
உள்வாங்குவதற்கும் ஒரு நிதானம் தேவைப்படுகிறது. இலக்கியமும், வாசிப்பும் எதற்கு
அவசியம் என்ற கேள்விக்கு பல பதில்கள் உள்ளன ,’நாம் அறியாத ஒரு உலகினைப்
புரிந்துகொள்வதற்குப் பயன்படும்’ என்றொரு பதிலும் அதில் அடங்கும். “கடவுளுக்குப் பின்”
சிறுகதை தொகுப்பை வாசிக்கும்போது மனித மனங்களின் சிக்கலான கோடுகளைப்
புரிந்துகொள்ள முடிகிறது.