Your cart is empty.
16 Feb 2024
அரவிந்தன் எழுதிய ‘வெல்கம் டு மில்லெனியம்’ சிறுகதைத் தொகுப்பு குறித்து
தொகுப்புகளை வாசிக்கையில், அங்கொன்றும் இங்கொன்றுமாய் வாசித்த
கதைகளில் கவனிக்கத் தவறியதைக் கவனிக்கிறோம், ஆதவனின் சாயல்
அரவிந்தனுக்கு. உளவியல் கதைகள் எழுதுவதனால் மட்டுமல்ல, வேலையைத்
தொலைத்து விட்டு, ஊருக்குப் போக நண்பனிடம் கடன் கேட்கும் நிலையில்
இருப்பவன் சொல்கிறான் ” வேணி எட்டிப் பார்த்து சிரித்தாள். கொள்ளை
அழகு”. மனித மனங்களின் அத்தனை அழுக்குகளையும், கசடுகளையும்
கதாபாத்திரங்கள் மூலம் அப்படியே கொண்டு வந்தவர் ஆதவன். அதைத்
தொடர்கிறார் அரவிந்தன். நாமெல்லாம் அடுத்தவன் பெண்டாட்டியை
ஏறெடுத்தும் பார்க்காதவர்கள், அதனால் அது குறித்துப் பேசுவதில்லை!
‘திரைகள்’ கதை பிரபஞ்சனின் அம்மா கதையை நினைவுபடுத்தியது.
ஒடுக்கப்பட்ட காமம் செம்பரம்பாக்கம் ஏரியை விட ஆபத்தானது. எல்லாக்
கதைகளிலுமே ஒரு பிரச்சனை ஆரம்பித்து, வளர்ந்து ஏதோ ஒரு தீர்வில்
முடிகிறது. அது மோசமான தீர்வாக இருந்தாலும் அவர்கள் பாடு என்று
அரவிந்தன் விட்டுவிடுகிறார். அதனாலேயே இந்தக் கதைகள் யதார்த்தமாகவும்
நமக்கு நெருக்கமாகவும் மாறியிருக்கின்றன. ‘வின் பண்ணனும் சார்’ கதையின்
மோகனும், விருது கதையின் வாசுவும் எடுக்கும் முடிவு சரியல்ல ஆனால்
அவர்கள் குணாதிசயத்திற்கு அவர்கள் அப்படித்தான் எதிர்வினை செய்வார்கள்.
Porn watching இரண்டு கதைகளில் வருகிறது. முதலாவது கதையில் ஒருவரை
மடக்க எடுக்கும் முயற்சியாகவும் மற்றொன்றில் விரட்டி விடுவதாகவும்
முடிகிறது. தலைப்புக் கதையில் கதைசொல்லியை ஆணாகக் காட்டி இருப்பது
புத்திசாலித்தனம். ஆண்கள் அடல்ட்டரியை பெரும்பாலும் பொறாமையுடனே
பார்ப்பார்கள். (அழகான பொண்டாட்டி காணாதுன்னு அம்சமான கீப் வேற,
இவனுக்குல்லாம் ஒரு சாவு வர மாட்டேன்கிறதே). பெண்கள் அவள் அப்படி
நான்லாம் புனிதம் என்று காட்டிக் கொள்வார்கள்.
அரவிந்தன் கதை எழுதி முடித்ததும் எடிட்டிங்கில் கவனம் செலுத்த
வேண்டும். ஒரே கதையில் ஆர்த்தி ஐந்து வயது பெரியவள் என்று வந்துவிட்டுஅடுத்த இரண்டாவது பாராவில் மூன்று வயது என்று வருகிறது. அதே போல் ரம்யா ஒன்றும் இவனிடம் சொல்லவில்லை என்று ஏற்கனவே வந்து விட்டது.
போலவே ‘பாவமன்னிப்பு’ கதையில் விக்ரமன் ஆறாவது வகுப்புப் படிக்கிறான்
என்ற தகவல் தேவையில்லாதது. அது கிளைமேக்ஸ் கனத்தைக் குறைக்கிறது.
பத்துக் கதைகள் கொண்ட தொகுப்பு. இருவார வதிவிடத் திட்டத்தில்
பதினான்கு நாட்களில் ஒன்பது கதைகளை எழுதியிருக்கிறார். கதைகளின்
விதை இவருக்குள் எப்போதோ விழுந்து நம் கண்பார்வைக்கு இப்போது
தெரிந்திருக்கக்கூடும். அநேகமான கதைகள் உளவியலை மையமாகக்
கொண்டிருக்கின்றன. என்னுடைய பார்வையில் கடைசிக் கதையைத் தவிர
மற்ற எல்லாவற்றுடனும் நெருக்கமாக உணரமுடிகிறது. ‘முகங்கள்’ கதை நல்ல
யுத்தியில் சொல்லப்பட்ட கதை.
புனைவெழுத்துக்கும் அரவிந்தன் நேரம் ஒதுக்க வேண்டும். சிறந்த
வாசிப்பனுபவத்தை இந்தத் தொகுப்பு வழங்கியது.
நன்றி: https://rb.gy/wn9rta (கட்டுரையாசிரியரின் இணையதளம்)