Your cart is empty.
6 Apr 2024
பாளையங்கோட்டை: ஒரு மூதூரின் வரலாறு நூல் மதிப்புரை
நாம் அறிந்த பாளையங்கோட்டையின் அறியாத பக்கங்களைப் புரட்டப் புரட்ட
ஆச்சரியம் மிகுந்துகொண்டேபோனது. இப்போதிருக்கும் இடங்களை
அடையாளப்படுத்திக் கோட்டையின் வாசல்களை விளக்கி அதன் சுற்றளவைப்
புரிந்துகொள்ளும் வகையில் அருமையாக எழுதியுள்ளார் தொ. பரமசிவன்.
தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்ட் என சும்மாவா பெயர் வந்தது.
ஆங்கிலேயர்களின் வரவால் அழிக்கப்பட்ட கோட்டை கொத்தளங்கள் இன்னும்
மிச்சமாய் இருந்தாலும் அவர்கள் கட்டிய புனித ஆலயங்களும், பெண்களுக்கான
பள்ளிகள், கண் தெரியாதவர்கள், காது கேட்காதவர்கள், வாய் பேச
முடியாதவர்களுக்கான பள்ளிகளும் இன்றும் பெயர் சொல்லி நிற்கின்றன.
ஒவ்வொரு இடமும் பல நூற்றாண்டு பழமை வாய்ந்ததென நினைக்கையில்
ஏற்படும் திகைப்பும் ஆச்சரியமும் எழுத்தில் அடங்காதது. இப்பேர்பட்ட் ஊரில்
வாழ்ந்தோம் என நிச்சயமாய்ப் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.
ஒவ்வொரு சனிக்கிழமையும் பார்க்கும் சிவன் கோவிலின் பழமை, பெருமை,
கல்வெட்டுகள், கோபால சுவாமி கோவில், ஆயிரத்தம்மன் என அறிந்திடாத
விடயங்கள் கொட்டிக் கிடக்கின்றன இந்தப் புத்தகத்தில். நரபலி, எருமை பலி
இப்பொழுது மரத்தாலான எருமை தலை வைக்கப்படுகிறது என்ற நாட்டார் தெய்வ
வழிப்பாட்டு முறையை விளக்கிச் சொல்லியிருக்கிறார் தொ.ப.
இப்பொழுது படத்தில் காண்பிக்கும் நம்ப முடியாத காட்சிகளை
சிரித்துக்கொண்டே கடக்கிறோம். ஆனால் அந்நாளில் பாளைச் சிறையிலிருந்து
ஊமைத்துரை தப்பிய நிகழ்வு அத்தனை நம்ப முடியாத காரியமாகும். எத்தனை
திறமை, தைரியம், வேகம், விவேகம், வீரம் இருக்க வேண்டும் அத்தனை
காவலிலிருந்து தப்ப. பாகுபலி பாத்திரமெல்லாம் இப்படிப்பட்ட மாவீரர்களைக்
கண்டு உருவாக்கப்பட்டவையாகத்தான் இருக்கும்.
வெள்ளையர்களால் சாலை மேம்பட்டாலும், மருத்துவ வசதி, கல்வி வசதி என
அடிப்படை வசதிகள் எல்லாம் கிடைத்தாலும் நம்மை அடிமைப்படுத்தி, நினைத்த
நேரத்தில் பீரங்கியில் கிடத்திக் கொல்லத் தலைப்பட்ட அவர்தம் போக்கு, நம்
முன்னோர்களுக்கு இழைக்கப்பட்ட பெருங்கொடுமை, புத்தகத்தை வாசிக்கையில்
கீறிக் குருதி பார்க்கிறது.
பாளையங்கோட்டை தல வரலாறு, ஆம்… கோட்டையின் வரலாறு ஆகச்சிறந்த
ஆய்வு நூல் எனக் கூறலாம். சிறு வயதில் ஏறி விளையாடிய படிகள் கோட்டையின்
மிச்சமென அறிகையில் சிலிர்ப்பாய் இருக்கிறது.
இனி நான் காணும் சேவியர் கல்லூரி, மேரி ஆடன் பள்ளி, பாளை சர்ச்,
கட்டபொம்மன் சிலை, பிள்ளையார் கோவில், ஆயிரத்தம்மன்,
கோவாலங்கோயில், சிவன் கோவில், ராமர் கோயில் தெப்பம், போலிஸ்
ஸ்டேஷன், மாவட்ட நூலகம், பாலாஸ்பத்திரி எல்லாம் வித்தியாசமாய் கண்களில்
படும். ஒவ்வொரு இடத்தின் பெயரு காரணங்கள் முறுவலை வரவழைக்கிறது. இது
எதுவுமே தெரியாமல் தெற்கு பஜாரில் சுற்றித் திரிந்தோமே என நாணமாய்
இருக்கிறது. அந்த காலத்திலேயே மலையாளம் பள்ளிகளில்
கற்றுக்கொடுக்கப்பட்டிருக்கிறது எத்தனை ஆச்சரியம். கண்
தெரியாதவர்களுக்கான ப்ரெய்லி எழுத்தைக் கொடையளித்த ப்ளோரன்ஸ்
அம்மையார் கட்டிக்கொண்ட புண்ணியம் அவரே அறியாதது.
அரசு அருங்காட்சியத்தில் இன்னமும் இருப்பதாய்க் கூறப்படும் பல நூற்றாண்டு
கடந்து உயிர்த்திருக்கும் கிணற்றை ஒரு எட்டு போய் பார்க்க வேண்டும்.
இன்னமும் எத்தனையோ கல்வெட்டுகள் எத்தனையோ வீடுகளின் சுவர்களுக்கு
அடியில் உறங்கிக்கொண்டிருக்கக்கூடும் என்று நினைக்கையில், இன்னும்
எத்தனை ரகசியங்கள் மண்ணுக்கடியில் புதைந்திருக்கின்றன எனப் பெருமூச்சு
விடுவதைத் தவிர வேறு என்ன செய்ய. திருநெல்வேலியில் பிறந்தவர்களுக்கு
இப்புத்தகம் நிச்சயமாகப் பிடிக்கும்.