Your cart is empty.
28 Oct 2023
கண்மூடி விழிப்பதற்குள் ஒளிரத் தொடங்கிவிட்ட சூரியன் என்று சொல்வது மிகை ஆனாலும் ,
ஒருவரின் வாழ்வு வளமுற்றிருப்பதை எடுத்துக்கூற, வேறு உதாரணச் சொல் எனக்குக்
கிடைக்கவில்லை.
இயந்திரங்களின் தரம் அறிந்துகொள்ள நட்சத்திரகுறியீடுகளின் எண்ணிக்கை உள்ளது போல
, ஏழை , பணக்காரன் நடுத்தர வர்க்கத்தினன் என நீட்டி முழக்கிச் சொல்வதற்குப் பதில்
அவனவன் செல்வச் செழிப்பின் அடிப்படையில் சிங்கிள் ஸ்டார் , த்ரீ ஸ்டார் , பைவ் ஸ்டார்
எனும் குறியீட்டுச் சொல் , இனி பரவலானாலும் ஆகலாம்தான்.
கார்த்திக் பாலசுப்ரமணியன் எழுதி யுவபுரஸ்கார் விருது பெற்றிருக்கும் "நட்சத்திரவாசிகள் "
என்ற நாவல் முழுக்க முழுக்க தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுபவர்களின் மறுபக்க
அல்லது அவர்களின் உள்ளார்ந்த வாழ்வு முறைகள் எப்படியாக அமைந்துள்ளது
என்பதைத்தான் கூறுகிறது.
காட்டில், களை எடுப்பவனில் தொடங்கி, கால் மேல் கால் போட்டு கணிணித் திரை முன்
மூளை முறுக முறுக சிந்தித்து கொண்டிருப்பவன் வரைக்குமே பணியிடப் பிரச்சினைகள்
பொது , அதைக் கையாளத் தெரிந்தவன் முன்னேறுகிறான்.முட்டிக்கொண்டு
முழித்துக்கொண்டிருப்பவன் அங்கிருந்து வெளியேற்றப்படுகிறான் அல்லது அழுத்தம்
தாளாமல் அவனாகவே வெளியேறிவிடும்படியாக ஆக்கப்படுகிறான்.
இத்தனையையும் மீறி பளீரெனத் தெரியும் அவன் மேட்டிமை வாழ்வு, வெளியிலிருந்து
பார்க்கும் ஒருவரின் மன மூலையில் சிறுதுளி பொறாமையுணர்வை எழுப்பாமல்
செல்லுமென்று சொல்வதற்கில்லை.
கார், பங்களா , நவநாகரீக ஆடையென மிளிர்ந்து வலம் வரும் அவர்களின் பணியிட
அமைப்பு, பயன்பாட்டுச் சொற்கள், உண்ணும் மற்றும் உடுத்துதல் முறை யாவையையும்
அழகாக எடுத்துரைக்கும் எழுத்து.
வாசிக்கையில் களத்தில் நாமும் இருப்பது போலான அனுவத்தை உணரமுடிந்தது.
Knowledge transfer session
Onsite
Agile
Daylight saving-DST
இதுபோலான அவர்களின் மொழிக்கான அர்த்தங்களும் புட் நோட்டாக இருப்பதால்
புரிந்துகொள்வது எளிதாக இருக்கிறது.
வேணு - கடின உழைப்பாளி; திறமையானவராகத் தன்னை நிரூபித்தாலும் , மேம்படுத்துதல்
அல்லது புதுப்பித்துக்கொள்ளுதல் இல்லாக் காரணத்திற்காக எதிர்கொள்ளும் பதவிநீக்கம்.
நித்தில் - பணியில் தன்னை செம்மைபடுத்தி முன்னேறத் தெரிந்தவனுக்கு , குடும்பம்
மனைவியைப் புரிந்துகொள்வதில் சுணங்கி இல்வாழ்வில் சந்திக்கும் பிரச்சினை.
சாஜூ - தன் திறமைக்கு ஏற்ற உயர்வு வேணும்னு நினைக்கிறது சரி. ஆனால் , தான்
இருக்கும் இடம் வேறொருவரால் நிரப்ப இயலாதுயென்ற Over confident ஆதாலால்
விளைந்தது என்ன?
அர்ச்சனா - எத்தனையோ மக்களைப் புரிந்துகொள்ளும் நிர்வாகத் திறன் கொண்டவள்.
ஆனால் புரிதலின்மை காரணமாக சிங்கிள் பேரன்ட் நிலைக்குள்ளாக்கப்பட்டவள்.
சத்தி - நிர்வாகத்தின் ஆணிவேர்.
ஸ்டீபன் - தனக்கிடப்பட்ட பணிக்கு துல்லியக் கடைமைப்பட்டவராக.
பனிமலர் , பார்வதி, ராமசுப்பு, வாசு, மீரா இப்படியான பல கதாபாத்திரங்ள் வழியாக நகரும்
இந்த நாவல் மிக சுவாரசியமாகவும் நான் அறிந்திராத புது உலகைக் கண்ணில் காட்டியதோடு
மட்டுமல்லாமல், ஒரு பாடநூலைப் போல அநேகம் அறிந்துகொள்ள உதவியது என்று
உறுதியாகக் கூற முடியும்.
"நட்சத்திரவாசிகள்" நாவல் முலாம் பூச்சுக்கு உள்ளிருக்கும் மேடுபள்ளங்களை
எடுத்துக்கூறுகிறதென்பேன்.