தமிழ்நாடு காவல் துறையின் நிர்வாகப் பிரிவில் 35 ஆண்டுக் காலம் பணியாற்றி, 2007ஆம் ஆண்டு பணி நிறைவு பெற்றவர். 2005 – 2007 ஆண்டுகளில், காவல் துறைத் தலைமையகத்தில் அனூப் ஜெய்ஸ்வால் நிர்வாகப் பிரிவு ஐ.ஜி.யாகப் பணியாற்றியபோது குமரேசன் அவரது நேர்முக உதவியாளராகப் பணியாற்றினார். அரசுப் பணியிலிருந்தபோதே குமரேசன் இலக்கிய ஆர்வம் கொண்டிருந்தார்.
பரவலான வாசிப்பும் படைப்பு முயற்சிகளும் உண்டு. இவரது ‘அவர்களுக்கு வேர்கள் இல்லை’ என்னும் குறுநாவல் 1984 கணையாழி தீபாவளி இதழில் வெளியானது. ஓரிரு கவிதைகள் கணையாழி, தீபம் இதழ்களில் வெளியாகியுள்ளன. பணி நிறைவுக்குப் பின், தமிழ்நாடு காவல் துறை நிர்வாகம் சார்ந்த வழிகாட்டி நூல்களையும் சிறு நூல்கள் சிலவற்றையும் எழுதியிருக்கிறார்.
ஆங்கிலம் - தமிழ் மொழிபெயர்ப்பில் நீண்டகால அனுபவம் உண்டு. டாக்டர் வி. கண்ணு பிள்ளை என்னும் குஜராத் கேடர் ஐ.பி.எஸ். அதிகாரி ஆங்கிலத்தில் எழுதி குமரேசன் மொழிபெயர்த்த ‘இந்தியாவில் மட்டுமே சாதிகள் இருப்பது ஏன்?’ என்னும் புத்தகத்தை ‘அன்னை முத்தமிழ்ப் பதிப்பகம்’ வெளியிட்டுள்ளது.