Your cart is empty.
அருட்பா மருட்பா
வள்ளலார் பாடல்கள் 1867இல் வெளியானபொழுது அந்நூலுக்குத் ‘திருவருட்பிரகாச வள்ளலார் என்னும் சிதம்பரம் இராமலிங்கப் பிள்ளையவர்கள் திருவாய்மலர்ந்தருளிய திருவருட்பா’ என்று பெயரிடப்பட்டது. ஆனால் திருவருட்பா என்ற பெயரே விவாதத்துக்குரிய பிரச்சினையாகிவிட்டது. சைவ மறுமலர்ச்சியின் தந்தை என்று புகழப்படும் ஆறுமுக நாவலர், வள்ளலார் பாடல்கள் அருட்பா அல்ல மருட்பா என்று வாதிட்டார். இதனை முன்னிட்டு ஓர் அரை நூற்றாண்டுக் காலம் ஒரு பெரும் துண்டறிக்கைப் போர் நிகழ்ந்தது. ஆறுமுக நாவலர், சி.வை. தாமோதரம் பிள்ளை, தொழுவூர் வேலாயுத முதலியார், உ.வே.சா., திருமயிலை சண்முகம் பிள்ளை, ம.தி. பானுகவி, மறைமலையடிகள், திரு.வி.க. என இவ்விவாதத்தில் பங்குகொள்ளாத தமிழ்ப் புலவர்களே இல்லை. அக்காலத் தமிழ் இலக்கிய, சமய உலகை ஆட்கொண்ட அருட்பா மருட்பாப் போராட்டத்தை ஆவணப்படுத்தியிருக்கும் புலமைக் களஞ்சியம் இந்நூல். நவீனத் தமிழகத்தின் சமூக, இலக்கிய, சமய, பண்பாட்டு, அறிவுத் தளங்களை ஆராய முனைவோர்க்கு இது ஒரு புதையல் என்று மதிப்பிடுகிறார் இத்திரட்டுக்கு விரிவான ஆய்வு முன்னுரை வழங்கியிருக்கு ஆ.இரா. வேங்கடாசலபதி. ‘அருட்பா X மருட்பா’ (2001) என்ற தம் நூலின் மூலமாக இந்தப் போராட்ட வரலாற்றை நெடுகவும் தேடி, உண்மைச் செய்திகளைக் கண்டிறிந்து, அவற்றை ஒரு சட்டகத்துக்குள் நிரல்பட வழங்கிப் பல குழப்பங்களைத் தீர்த்துவைத்த ப. சரவணன், பல்லாண்டுக்கால உழைப்பில் இந்நூலைத் திரட்டிப் பதிப்பித்திருக்கிறார்.