Your cart is empty.
இரண்டாம் ஜாமங்களின் கதை
இஸ்லாமிய சமூகத்தைப் பற்றிய படைப்பாக்கப் பிரதிகள் தமிழில் அதிகம் வெளியாவதில்லை. வெளிவந்தைவையும் ஓர் ஆணின் பார்வையில் இஸ்லாமிய வாழ்க்கையை முன்வைப்பவை. அவற்றில் இடம் பெறும் பெண்கள் மங்கலான … மேலும்
இஸ்லாமிய சமூகத்தைப் பற்றிய படைப்பாக்கப் பிரதிகள் தமிழில் அதிகம் வெளியாவதில்லை. வெளிவந்தைவையும் ஓர் ஆணின் பார்வையில் இஸ்லாமிய வாழ்க்கையை முன்வைப்பவை. அவற்றில் இடம் பெறும் பெண்கள் மங்கலான சித்திரங்கள் மட்டுமே. சல்மாவின் இந்த நாவல் இஸ்லாமிய பெண்ணுலகைப் பெண்ணின் கண்களால் பார்க்கிறது. ஆறு குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் ரகசியங்களையும் இச்சைகளையும் அவர்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளையும் அவர்கள் அடைய விரும்பும் சுதந்திரத்தையும் காதலையும் காமத்தையும் பிறழ்வுகளையும் உடலியல் துன்பங்களையும் சுரண்டல்களையும் நுட்பமாகவும் சமயங்களில் பகிரங்கமாகவும் பகிர்ந்து வைக்கிறது. பெண் தன்னைப் பெண்ணாக உணர்வது ஆண்கள் அயர்ந்திருக்கும் இரண்டாம் ஜாமத்தில் என்று வெளிப்படுத்துகிறது. ஒருவகையில் இந்தப் பெண் நோட்டம் ஆணைத் தொந்தரவு செய்யக் கூடியது. இந்தப் பார்வை தமிழ்ப் படைப்பில் புதிது.
சல்மா
சல்மா இயற்பெயர் ராஜாத்தி (எ) ரொக்கையா. திருச்சி மாவட்டம் பொன்னம்பட்டி சிறப்பு ஊராட்சி மன்றத் தலைவியாகவும் சமூக நலத்துறை வாரியத் தலைவியாகவும் பணியாற்றினார். இரண்டு கவிதைத் தொகுப்புகள், இரண்டு நாவல்கள் வெளிவந்துள்ளன. ‘கனவுவெளிப் பயணம்’ என்ற பயணநூலும் வெளியாகி உள்ளது. இவருடைய ‘இழப்பு’ சிறுகதை ‘கதா - காலச்சுவடு’ போட்டியில் பரிசு பெற்றது. சேனல் 4 தயாரிப்பில் இவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட சல்மா என்கிற ஆவணப்படம் கிம் லாங்கினாட்டோ என்கிற பிரிட்டிஷ் இயக்குநரால் இயக்கப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளின் உலகப்பட விழாக்களில் திரையிடப்பட்டு 14 சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளது. 2006ஆம் ஆண்டு ஃபிராங்பர்ட் புத்தக விழா, 2009 லண்டன் புத்தகக் கண்காட்சி, 2010 சீனாவின் பெய்சிங் புத்தகக் கண்காட்சி ஆகியவற்றில் பங்கேற்றார். சல்மாவின் படைப்புகளை முன்வைத்து நார்மன் கட்லர் நினைவுக் கருத்தரங்கு சிகாகோ பல்கலைக்கழகத்தில் 2007 மே மாதம் நடைபெற்றது. ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ ஆங்கிலம், மலையாளம், மராத்தி, ஜெர்மன், கடாலன் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வோடோ போன் (vodafone) க்ராஸ்வோர்டு பரிசு, மான் ஆசியா பரிசு ஆகியவற்றின் தேர்வுப் பட்டியலில் இடம்பெற்றது. ‘சாபம்’ சிறுகதைத் தொகுப்பு மலையாளத்திலும் வெளிவந்துள்ளது. பெற்றோர் சர்புனிஷா, சம்சுதீன். கணவர் அப்துல் மாலிக். மகன்கள் சலீம், நதீம். தொலைபேசி : 9444918604 மின்னஞ்சல் : tamilpoetsalma@gmail.com
ISBN : 9788187477846
SIZE : 14.0 X 2.8 X 21.5 cm
WEIGHT : 582.0 grams