Your cart is empty.
கனம் கோர்ட்டாரே
நீதியமைப்பின் மீது நம்பிக்கை ஏற்படுத்திய நீதிபதிகளுள் ஒருவர் கே. சந்துரு. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக அவர் வழங்கிய ஒவ்வொரு தீர்ப்பும் ஒரு முன்னுதாரணம். சமூகப் பிரச்சினைகள் … மேலும்
நீதியமைப்பின் மீது நம்பிக்கை ஏற்படுத்திய நீதிபதிகளுள் ஒருவர் கே. சந்துரு. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக அவர் வழங்கிய ஒவ்வொரு தீர்ப்பும் ஒரு முன்னுதாரணம். சமூகப் பிரச்சினைகள் குறித்தும் நீதித் துறை குறித்தும் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். தனிமனித சுதந்திரம் கேள்விக்குள்ளாக்கப்பட்டுவரும் இன்றைய சூழலில் அதற்காகத் தன் குரலை இக்கட்டுரைகளில் வலுவாகப் பதிவுசெய்துள்ளார். நீதித் துறை குறித்த திகைப்பூட்டும் அச்சத்தையும் கட்டுரைகள் மூலம் தகர்க்கிறார். மனித உரிமைகளை மறுக்கும் சட்டங்களைத் தகுந்த தர்க்கத்துடன் விமர்சிக்கிறார். சென்னையில் நிறுவப்பட்டுள்ள சிலைகளின் வரலாற்றுச் சுவாரஸ்யங்களைச் சுவைபடச் சொல்கிறார். விளம்பரப் பலகைகளின் கலாச்சாரம் நம் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தி வருவதை சமூக ஆய்வாளரின் பார்வையிலிருந்து ஆராய்கிறார். சந்துருவுக்கு நெருக்கமான வாசக மொழி கைகூடியிருக்கிறது. சட்டங்களின், சட்டத் திருத்தங்களின் பின்னணிகளை நுட்பமாகக் குறிப்பிடும் இத்தொகுப்பு சட்டத் துறையினருக்கு ஒரு கையேடாகிறது. சமூகத்தின் எல்லா நிகழ்வுகளையும் சட்டம் என்ற சட்டகத்தின் மூலம் பார்க்கும் சந்துரு நீதிமன்றம் எளிய மக்களும் அணுகக்கூடிய மக்கள் மன்றம் என்ற நம்பிக்கையை இந்தக் கட்டுரைகளின் மூலம் விதைக்கிறார்.
கே. சந்துரு
ஸ்ரீரங்கத்தில் பிறந்தார். பள்ளி, கல்லூரி படிப்பைச் சென்னையில் தொடர்ந்தார். இடதுசாரி அரசியலால் ஈர்க்கப்பட்டு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்)உறுப்பினரானார். அதன் மாணவரணியில் மாநிலப் பொறுப்பு வகித்ததோடு, அதனுடைய தொழிற்சங்கப் பிரிவிலும் செயலாற்றினார். நெருக்கடி காலகட்டத்தில் உயர் நீதிமன்ற வழக்கறிஞராகப் பதிந்துகொண்டு, தொழிலாளர்களுக்கும் மற்ற பிரிவினருக்கும் பல வழக்குகளை நடத்தினார். தொழிலாளர், குழந்தைகள், பெண்கள், மனித உரிமை பிரச்சினைகளில் அவர் நடத்திய வழக்குகள் பலருடைய கவனத்தை ஈர்த்தன. வழக்கறிஞராக இருந்தபோது சில சட்டநூல்களையும், சட்ட சம்பந்தமான சிறு பதிப்புகளையும் ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதினார். 1993இல் ‘ஆர்டர்... ஆர்டர்...’ என்ற தலைப்பில் சட்ட உலகில் படர்ந்திருந்த பனித்துளிகளை நீக்கும் வண்ணமும் சாதாரண மக்களுக்குப் புரியும் வகையிலும் எழுதிய தொடர் பெரும் வரவேற்பைப் பெற்றது. முப்பதாண்டுக் காலம் வழக்கறிஞராகப் பணியாற்றி, 2006இல் சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகக் குடியரசு தலைவரால் நியமிக்கப்பட்டார். அவரது ஏழாண்டுக் கால நீதிப்பணியில் சுமார் 96 ஆயிரம் வழக்குகளைத் தீர்த்து சாதனை படைத்தார். பெண்ணுரிமை, கருத்துரிமை, தொழிலாளர் உரிமை, பிற மனித உரிமைகள் பற்றிய பிரச்சினைகளில் இவருடைய தீர்ப்புகள் பரவலாகப் பேசப்பட்டன. 2013இல் ஓய்வுபெற்ற இவர் தமிழ் இதழ்களில் தொடர்ந்து சட்ட சம்பந்தமான பிரச்சினைகள் பற்றிக் கட்டுரைகள் எழுதிவருகிறார். பொது மேடைகளிலும் பேசிவருகிறார்.
ISBN : 9789382033790
SIZE : 13.3 X 1.3 X 21.4 cm
WEIGHT : 293.0 grams