மொழிபெயர்ப்பாளராகவே அதிகம் அறியப்பட்ட ஜி. குப்புசாமியின் கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பு இது.
குப்புசாமி விரிவான வாசிப்பும் பல்துறை சார்ந்த ஆழமான அறிவும் தேர்ந்த இலக்கிய ரசனையும் கூர்மையான இலக்கியப் பார்வையும் கொண்டவர். இலக்கியம், கிரிக்கெட், டென்னிஸ், திரையிசை, அரசியல் என அவர் ஆர்வத்தின் எல்லைகள் விரிந்து பரந்தவை. தான் ஆர்வம் செலுத்தும் எல்லாத் துறைகளிலும் ஆழ்ந்த ஈடுபாட்டைக் கொண்டவர். அவை ஒவ்வொன்றைப் பற்றியும் தனித்த பார்வையைக் கொண்டிருப்பவர்.
தான் ரசித்துப் படித்த, பார்த்த, கேட்ட, வியந்த, கற்றுக்கொண்ட ஆளுமைகளையும் படைப்புகளையும் பற்றிக் குப்புசாமி விரிவாகவும் காத்திரமாகவும் எழுதியிருக்கும் கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். உலக இலக்கியம்முதல் உள்ளூர் இலக்கியம் வரை; சார்வாகன்முதல் ஸரமாகோவரை; எஸ்.பி. பாலசுப்பிரமணியம்முதல் ரோஜர் ஃபெடரர்வரை எனப் பல்வேறு படைப்புகளையும் ஆளுமைகளையும் பற்றிய விரிவான சொற்சித்திரங்களைக் கொண்ட நூல் இது. மிகுதியும் அறிவுத் தளத்தில் நிதானமாக இயங்கும் குப்புசாமியின் எழுத்து தேவையான இடங்களின் உணர்ச்சிப் பிரவாகமாகப் பாயவும் செய்கிறது. இந்நூலில் இடம்பெறும் ஆளுமைகள், படைப்புகள் ஆகியவற்றை அறியாதவர்களுக்கு இவை சிறந்த அறிமுகங்களாக அமையும். ஏற்கெனவே அறிந்தவர்களுக்குப் புதிய திறப்புகள் சாத்தியமாகும்.