Your cart is empty.
மகாபாரதம்
-பேரரசுகள் உருவாகியிருக்கின்றன, வீழ்ந்திருக்கின்றன; பல்வேறு மதப்
பிரிவுகள், தத்துவப் பார்வைகள் ஆகியவை எழுச்சி பெற்றுக் கால வெள்ளத்தில்
மங்கியிருக்கின்றன. ஆனால் மகாபாரதம் இந்திய மக்களின் மனங்களில்
பெற்றுள்ள … மேலும்
-பேரரசுகள் உருவாகியிருக்கின்றன, வீழ்ந்திருக்கின்றன; பல்வேறு மதப்
பிரிவுகள், தத்துவப் பார்வைகள் ஆகியவை எழுச்சி பெற்றுக் கால வெள்ளத்தில்
மங்கியிருக்கின்றன. ஆனால் மகாபாரதம் இந்திய மக்களின் மனங்களில்
பெற்றுள்ள இடம் அதன் ஒளியும் வலிமையும் குன்றாமல் நீடிக்கிறது.
மகாபாரதம் குறித்த அலசல்களின் எண்ணிக்கையே மலைப்பூட்டுகிறது.
தலைமுறை தலைமுறையாக இந்திய மக்களைத் தன் வசீகர வலைக்குள்
மகாபாரதம் வைத்திருப்பதற்கு என்ன காரணம்? காலத்தால் அழியாத இந்த மாய
சக்திக்குக் காரணம் என்ன? புராணத்தன்மை கொண்ட பாத்திரங்கள்தான் இதன்
வசீகரத்திற்குக் காரணமா? இதிலுள்ள தத்துவப் பார்வைகளும் விவாதங்களும்
வாசகர்களை ஈர்க்கின்றனவா? எண்ணற்ற சிக்கல்களும் வியப்பூட்டும்
திருப்பங்களும் நுட்பமான ஊடுபாவுகளும் கொண்ட கதைதான் மகாபாரதத்தின்
வசியத்திற்குக் காரணமா?
இக்கேள்விகளுக்கு விடைகாணும் தேடலை மேற்கொள்ளும் இந்த நூல்,
இந்தியாவின் தேசியக் காவியங்களில் ஒன்றாக விளங்குவது ஏன் என்னும்
கேள்வியையும் ஆராய்கிறது. மராத்தி, கன்னடம், அஸ்ஸாமி, உருது,
குஜராத்தி, வங்காளம் ஆகிய மொழிகளில் வெளியாகியிருக்கும் இந்த நூல்
தற்போது தமிழுக்கு வருகிறது. காவிய உணர்வும் அறிவார்த்தமான அலசலும்
கொண்ட இந்த நூலை அதன் தன்மை மாறாமல் தமிழாக்கியிருக்கிறார்
அரவிந்தன்.
ISBN : 978-81-19034-38-3
SIZE : 13.8 X 0.7 X 22.0 cm
WEIGHT : 150.0 grams
கே.ஜே. அசோக்குமார்(அகழ் இணையதளம்)
3 Feb 2024
இந்தியாவின் மிக முக்கிய நிகழவாகவும் அதை ஒட்டிய முக்கிய
கதையாடல்களாகவும் இரு விஷயங்களை சொல்லலாம் ஒன்று
இராமாயணம் மற்றொன்று மகாபாரதம். மகாபாரத நிகழ்வுகளைப்
பேச்சுவழக்கில் சொலவடைகளாக மாற்றிப் பேசும் வழக்கம் இயல்பான
விஷயமாக மாறிப் பல நூற்றாண்டுகள் கடந்துவிட்டன. மகாபாரதம்
எழுத்துவடிவில் வருவதற்கு முன்பு பல நூற்றாண்டுகளாக வாய்மொழிக்
கதைகளாக அக்கதைகள் பேசப்பட்டுள்ளன. ஹராப்பா காலத்திற்கு பின்பு
புத்தர் காலம் வரை அது வாய்மொழிக்கதைகளாகவே வளர்ந்துள்ளது. ஏன்
மகாபாரதம் இன்றும் வாசிக்கப்படுகிறது. அதன் கூறுகள் இந்திய
மனங்களில், பேச்சுகளில், இலக்கியங்களில் இன்றும் எப்படி
இடம்பெறுகிறது. அதைப்பற்றிதான் கணேஷ் தேவியின் ‘மகாபாரதம்: ஒரு
படைப்பு தேசத்தின் காவியமான கதை’ நூல் மிக விரிவாக விவாதிக்கிறது.
வாய்மொழிக் கதைகளை நூலாகத் தொகுத்தவர் வியாசர். உலகின் வேறு
எந்த ஆதிகாவியத்தைவிடவும் பொருண்மையிலும் உள்ளடக்கத்திலும்
இன்றுவரை மக்களின் மனங்களில் இருக்கும் ஒரு காவியம் இது மட்டுமே.
மேற்குலகில் சொல்லப்பட்ட ஆதிகாவியங்களான, இலியட், ஒடிசி
போன்றவை புத்தக வாசிப்பாக மட்டுமாக மாறிப் பல நூற்றாண்டுகள்
ஆகிவிட்டன. மகாபாரதம் இந்தியாவில் இன்றும் நூல், நாடக,
நிகழ்த்துக்கலை, திரை போன்ற வடிவங்களாக உயிர்ப்புடன் பண்பாட்டு
நிகழ்வாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.
மகாபாரதத்தைப் பற்றி பேசுவதற்கும் விவாதிப்பதற்கும் இன்று களம்
இருந்துக் கொண்டிருக்கிறது. வாழ்வின் சோதனைக் காலங்களை
மகாபாரத கதைகளுடன் இணைத்து அர்த்தப்படுத்திக்கொள்ள முடிகிறது.
மகாபாரதம் இந்திய மனங்களைக் காலங்காலமாகத் தொடர்ந்து
செழுமைபடுத்திவருகிறது. அதில் வரும் கதாபாத்திரங்களாக தங்களையும்
மற்றவர்களையும் உருவகப்படுத்திக்கொள்ள உதவுகிறது.
இந்திய நிலம் முழுவதிலும் வெவ்வெறு வகை மகாபாரதங்கள் இன்றும்
இருக்கின்றன. மாறுபட்ட ஒரு வடிவில் பீலர் பழங்குடியினரிடமும்
மகாபாரதம் இருக்கிறது. மரம் வளர்ந்து புதிய கிளைகளை
பரப்புவதுபோலக் கதையாடல்கள் வளர்ந்துள்ளன. ஒரு தனிமனிதனால்
புரிந்துகொள்ள முடியாத மிகப்பரந்த வாழ்வியல் அனுபவத்தை
தன்னகத்தே கொண்டிருக்கிறது மகாபாரதம்.
இதில் மையப்பாத்திரம் என்று யாரையும் சுட்ட முடியாது. மகாபாரதம்
நிகழும் காலம் முழுவதும் இருக்கும் பீஷ்மர் கதாநாயகன் அல்ல,
கிருஷ்ணன் மையப் பாத்திரமில்லை, பாண்டவர்களுக்கு வெற்றியைத்
தேடித்தரும் அர்ஜுனன்கூட மையப்பாத்திரமில்லை. ஆனால் கண்ணுக்கு
தெரியாத காலம் என்னும் பாத்திரம் யமன் உருவில் தொடர்ந்து வருகிறது.
அதுவே மையப் பாத்திரமாக இருக்க முடியும் என்கிறார் ஆசிரியர்.
புத்தருக்குப் பின் இருக்கும் தம்மம் போல காலச்சகரமாக கிருஷ்ணனின்
கையில் சுதர்சன சக்கரமாகக் காலமே குறியீடாக இருக்கிறது. தேரும்
குதிரைகளும் ஆதிகாலத்து நவீன குறியீடாகவும் இருக்கின்றன.
வேதம், உபநிடதம், வேதாந்தங்கள், சுருதிகள், சாஸ்திரங்கள் போன்றவை
அந்த காலகட்டத்தில் எல்லோராலும் பயன்படுத்த முடியாத நிலை
இருந்தது. அவை பிராமணர்களால் மட்டுமே படிக்க இயலும்
என்றிருந்தது. அப்போது ஷத்திரியர்களால் இயற்றப்பட்ட ராமாயணமும்
மகாபாரதமும் அனைத்து மக்களுக்கும் பயன்பட்டன. மக்கள் அதை
எளிதாகப் பிடித்துக்கொண்டனர். தொகுக்கப்பட்ட பின் 20
நூற்றாண்டுகளாக இந்த இதிகாசம் மக்கள் மனங்களில்
நிறைந்திருந்தாலும் அது வாசிப்பவரின்/கேட்பவரின் மனதில் என்ன
உணர்ச்சியை தூண்டுகிறது என யோசித்தால் அது சாந்த உணர்ச்சிதான்
என்கிறார் ஆசிரியர். அபிநவ குப்தர் தன் வாதமாக இதை முன்வைக்கிறார்
என்கிறார்.
புராண-வரலாற்றுப் படைப்பாக மகாபாரதம் படைக்கப்பட்ட விதமே
அழகுடன் இருக்கிறது. அதன் உள்ளடக்கம், உணர்ச்சி நிலைகள், நாடகீய
தருணங்கள், எதுவும் எளிதில் தனிமனிதனால் கடந்து செல்ல முடியாதவை
என்று கூறுகிறார் கணேஷ் தேவி.
மகாபாரத மாந்தர்கள் அப்போதைய கடவுளர்களுடன் தொடர்பில்
இருப்பதாக சுட்டப்பட்டு யமன், சூரியன், இந்திரன், வாயு, அஸ்வினி
தேவர்கள், கங்கை போன்ற புராணபாத்திரங்கள் வரலாற்றுப்
பாத்திரங்களுடன் தொடர்ப்பில் அமைந்தன. இந்த கூறு மக்களின் மனதில்
ஆழமாக சென்று சேர்ந்தது. யமனின் சாயல் கொண்ட யதிஷ்டிரன்,
வாயுவின் வாரிசாக பீமன், சூரியனின் வாரிசாக கர்ணன் என்று எல்லா
பாத்திரங்களும் தேவ வடிவில் வருவதும் பின் மனிதர்களாக மாறிச்
சோதனைகளை அடைவதும், கடைசியில் தனிமனித அனுபவங்களை
வெற்றிகளாகப் பெறுவதும் தொடர்கிறது. இந்த அனுபவம் படிப்பவரின்
மனதை கொள்ளை கொள்கிறது. நீக்கமற நிறைந்திருக்கும் துன்பங்களை
இன்பமாகத் துய்க்க இந்த அனுபவம் பயன்படுகிறது.
மிகுந்த சிரத்தையோடு மொழிபெயர்த்திருக்கிறார் அரவிந்தன்.
மூலநூலினை வாசிக்கும் அனுபவத்தை ஒத்திருக்கிறது அவரது
மொழிபெயர்ப்பு. அதற்காகப் பல மெனக்கெடல்களுடன்தான்
இப்பணியைச் செய்திருக்கிறார்.
மகாபாரதத்தையும் இந்தியச் சிந்தனையுள்ளிலும் பயணம் செய்ய இந்த
நூல் நமக்கு வாய்ப்பளிக்கிறது. கணேஷ் தேவி சொல்லும் துணைநூல்கள்
மிக முக்கியமானவை. பலமுறை வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டும்
சுவாரஸ்யமான நூல் ‘மகாபாரதம்: ஒரு படைப்பு தேசத்தின் காவியமான
கதை’.